தியேட்டர்களில் வரவேற்பு இல்லை – 18 புதிய படங்கள் ஓ.டி.டி.யில் வெளியாகிறது

தியேட்டர்களில் ரிலீசாகும் படங்களுக்கு வரவேற்பு இல்லாத காரணத்தால் 18 புதிய படங்களை ஓடிடி-யில் வெளியிட உள்ளார்களாம்.

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தியேட்டர்கள் மூடப்பட்டன. அதன்பிறகு தளர்வுகள் அறிவிக்கப் பட்டதையடுத்து கடந்த 10-ந் தேதி முதல் தியேட்டர்கள் திறக்கப்பட்டன. அதன் பிறகு சந்தானம் நடித்த ‘பிஸ்கோத்’, ‘மரிஜுவானா’ உள்ளிட்ட 7 படங்கள் தியேட்டர்களில் வெளியிடப்பட்டன.

ஆனால் இந்த 7 படங்களுமே எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை பெறவில்லை. கொரோனா அச்சம் காரணமாக தியேட்டர்களுக்கு செல்லவே ரசிகர்கள் பயப்படுகிறார்கள். இதனால் தியேட்டர்களில் கூட்டம் இல்லை.

தீபாவளி பண்டிகையின் போது தமிழகம் முழுவதும் 700 தியேட்டர்கள் திறக்கப்பட்டன. ஆனால் எதிர்பார்த்த அளவு கூட்டம் வராததால் 50 தியேட்டர்கள் மூடப்பட்டு விட்டன. பல தியேட்டர்களில் கூட்டம் இல்லாமல் சினிமா காட்சிகளும் அவ்வப்போது ரத்து செயப்படுகின்றன.

இதனால் சமீபத்தில் திரைக்கு வந்த புதிய படங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளன. எனவே சிறிய படங்களின் தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை தியேட்டர்களில் திரையிட தயங்கி வருகிறார்கள்.

புது படங்களை ஓ.டி.டி. யில் வெளியிட்டால் படம் எடுக்க செலவழித்த பட்ஜெட்டைவிட லாபம் பார்க்கலாம், ரசிகர்களும் அதிகம்பேர் வீட்டில் இருந்தபடியே படத்தை பார்த்து விடுவார்கள் என்று கருதுகின்றனர்.

ஏற்கனவே சூர்யா நடித்த ‘சூரரைபோற்று’, ஜோதிகா நடித்த ‘பொன்மகள் வந்தாள்’, கீர்த்தி சுரேஷ் நடித்த ‘பெங்குயின்’, நயன்தாரா நடித்த ‘மூக்குத்தி அம்மன்’ உள்ளிட்ட படங்கள் ஓ.டி.டி.யில் வெளியாயின. இதில் தயாரிப்பாளர்கள் லாபமும் பார்த்தார்கள்.

இதையடுத்து சுமார் 18 படங்களை ஓ.டி.டி.யில் திரையிட பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ‘பாரீஸ் பாரீஸ்’, ‘கர்ஜனை’, ‘சர்வர் சுந்தரம்’, ‘திகில்’, ‘ஜிந்தா’, ‘ஆட்கள் தேவை’, ‘மாமாகிகி’, ‘யாதுமாகி நின்றாய்’, ‘ஹவாலா’, ‘மதம்’ உள்பட 18 படங்கள் ஓ.டி.டி.யில் வெளியாகும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

மேலும் பல பெரிய பட்ஜெட் படங்களும் அடுத்தடுத்து ஓ.டி.டி.யில் வெளிவர தயாராகி வருகின்றன. விஷால் நடித்துள்ள ‘சக்ரா’, ஜெயம் ரவி நடித்துள்ள ‘பூமி’, சித்தார்த் நடித்துள்ள ‘சைத்தான் கா பச்சா’, மாதவன் நடித்துள்ள ‘மாறா’ ஆகிய படங்களும் ஓ.டி.டி.யில் வெளியாக உள்ளன.

malaimalar