புதுடில்லி: வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பஞ்சாப் விவசாயிகள், நாளை நடத்தும், ‘பாரத் பந்த்’துக்கு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதையடுத்து, அனைத்து மாநிலங்களிலும், போலீசார் உஷார் படுத்தப்பட்டு உள்ளனர்.
மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள, மூன்று வேளாண் மசோதாக்களை எதிர்த்து, பஞ்சாப் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ‘டில்லி சலோ’ என்ற பெயரில், பேரணி மற்றும் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர். டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து, டில்லி எல்லையில், தொடர்ந்து, 11வது நாளாக, நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஹரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளும், இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், பஞ்சாபைச் சேர்ந்த, 35 விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன், மத்திய அரசு, ஐந்து சுற்று பேச்சு நடத்திஉள்ளது. மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தலைமையிலான, மூன்று அமைச்சர்கள் குழு நடத்திய இந்தப் பேச்சுகளில் முடிவு எட்டப்படவில்லை. வரும், 9ம் தேதி, ஆறாம் சுற்று பேச்சு நடக்க உள்ளது. இந்நிலையில், 8ம் தேதி, நாடு தழுவிய அளவில், ‘பாரத் பந்த்’ நடத்துவதற்கு, பஞ்சாப் விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இதற்கு, பல கட்சிகள், தொழிற்சங்கங்கள், அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்த போராட்டத்துக்கு முழு ஆதரவு அளிப்பதாக, காங்., அறிவித்துள்ளது. ”விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, அனைத்து மாவட்ட மற்றும் மாநில தலைநகரங்களிலும், காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்தப்படும்,” என, கட்சியின் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா தெரிவித்துள்ளார்.”பார்லியில் மசோதாகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தோம். ஆனால், அவசர அவசரமாக இந்த சட்டத்தை கொண்டு வந்தனர். அந்த அவசரத்தால் தான், இந்தப் பிரச்னை ஏற்பட்டுள்ளது,” என, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறியுள்ளார்.’
‘விவசாயிகள் போராட்டத்துக்கு, எங்கள் கட்சியின் முழு ஆதரவு உள்ளது. பார்லி.,யிலும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தோம். தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிப்போம்,” என, தெலுங்கானா முதல்வரும், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைவருமான, சந்திரசேகர ராவின் மகள் கவிதா கூறியுள்ளார்.மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமை யிலான, திரிணமுல் காங்கிரஸ் கட்சியும், பாரத் பந்த்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
போராட்டத்தில் பங்கேற்கப் போவதாக, இந்திய கம்யூ., மார்க்சிஸ்ட் கம்யூ., மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூ., புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி, பார்வர்டு பிளாக் ஆகியவை கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன.பீஹார் எதிர்க்கட்சித் தலைவரான, ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் தேஜஸ்வி யாதவும், போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் பாட்னாவில் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
ஐ.என்.டி.யு.சி., – ஏ.ஐ.டி.யு.சி., – ஹிந்த் மஸ்தூர் சபா, சி.ஐ.டி.யு., உள்ளிட்ட தொழிற்சங்கங்களும், போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன. அதுபோல், பல்வேறு வங்கி சங்கங்களும் ஆதரவு தெரிவித்து உள்ளன.இதையடுத்து, ‘பந்த்’ தின்போது அசம்பாவிதங்கள் நடந்தால், அதை தடுக்கும் வகையில், அனைத்து மாநிலங்களிலும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். ரயில் மற்றும் பஸ் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளன.
விளையாட்டு வீரர்கள் ஆதரவு
விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, அரசு வழங்கிய விருதுகளை திருப்பி தருவதாக, பல விளையாட்டு வீரர்கள் ஏற்கனவே அறிவித்துள்ளனர்.அர்ஜுனா விருது, கேல் ரத்னா விருது, பத்ம விருதுகளை திருப்பி தருவதாக, ஹாக்கி வீரர் ராஜ்பிர் கவுர், குர்மாயில் சிங், மல்யுத்த வீரர் கர்தார் சிங், குத்துச்சண்டை வீரர் ஜெய்ப்பால் சிங் உள்ளிட்டோர் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், பிரபல குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங்கும், கேல் ரத்னா விருதை திருப்பி தரப் போவதாக அறிவித்துள்ளார். காங்கிரசில் இணைந்து, கடந்த லோக்சபா தேர்தலில் போட்டியிட்டவர், விஜேந்தர் சிங்.டில்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை நேரில் சந்திந்து, தன் ஆதரவை அவர் நேற்று தெரிவித்தார்.
தி.மு.க., கூட்டணி அறிக்கை
வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, டிச., 8ல், விவசாயிகள் நடத்த உள்ள, ‘பாரத் பந்த்’திற்கு, தமிழகத்தில், தி.மு.க., உள்ளிட்ட, 10 கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.தி.மு.க., – காங்., – ம.தி.மு.க., – மார்க்சிஸ்ட், இந்திய கம்யூ.,- இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, கொங்கு நாட்டு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகிய, தி.மு.க., கூட்டணியில் உள்ள, 10 கட்சிகள், விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளன.
இது தொடர்பான, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட, 10 கட்சிகளின் தலைவர், செயலர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை:வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, டிச., 8ம் தேதி, இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு சார்பில் நடைபெற உள்ள பாரத் பந்த் முழு அடைப்பை, வெற்றியடையச் செய்வோம். இதற்கு, தமிழக விவசாய அமைப்புகள், வணிகர் சங்கங்கள், தொழிற்சங்கங்கள், அரசு அலுவலகர் சங்கங்கள், சமூக நல அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்.
‘பாரதிய கிசான் சங்கம் பங்கேற்காது’
பாரதிய கிசான் சங்கத்தின் தேசிய செயலர் பெருமாள், மதுரையில் நேற்று அளித்த பேட்டி:
பஞ்சாப் மாநில அரசு, மத்திய அரசின் மூன்று விவசாய சட்டங்களையும் ஏற்காமல், மாநில அளவில், மூன்று புதிய சட்டங்களை இயற்றி உள்ளது. அதில் குறைந்தபட்ச ஆதார விலை, விவசாயிகளுக்கான உறுதியான பணப் பட்டுவாடா மற்றும் விவசாய சிறப்புநீதிமன்றம் அமைப்பதென தெரிவித்துள்ளது.
மத்திய சட்டம் செல்லாது என அங்கே தெரிவித்த பின், பஞ்சாப் விவசாயிகள் ஏன் போராட வேண்டும்? அங்கே, 1,800 தரகு மண்டிகள் மூலம், 1.50 லட்சம் பேர் இடைத்தரகர்களாக செயல்படுகின்றனர். இதன் மூலம், 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு பணப் பரிவர்த்தனை
நடக்கிறது.இவர்கள் சிறிய அளவில் விவசாயம் செய்தாலும், தரகு தொழிலில் தான் லாபம் பார்க்கின்றனர். மண்டி என்ற இடைத்தரகு செயல்பாடு நிறுத்தப்பட்டதால் தான் போராடுகின்றனரே தவிர, உண்மையாக விவசாயிகளுக்காக போராடவில்லை.
மேலும், மூன்று மாநில போராட்டக்காரர்களும், டிச., 9ல் ஆறாம் கட்ட பேச்சுக்கு சம்மதித்து விட்டு, டிச., 8ல் போராட்டம் நடத்துவது சரியில்லை. போராட்டத்தால் பாதிக்கப்படுவது விவசாயிகளும், பொதுமக்களும் தான்.எங்கள் சங்க உறுப்பினர்கள், தமிழகத்தில்
இரண்டு லட்சம் பேரும்; இந்தியா முழுக்க, 46 லட்சம் பேரும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டார்கள்.இவ்வாறு, அவர் கூறினார்
dinamalar