கைது செய்யப்பட்டுள்ள சித்ராவின் கணவர் ஹேம்நாத் பரபரப்பு வாக்குமூலம்

சித்ரா

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அவரது கணவர் ஹேம்நாத் போலீசாரின் அதிரடி விசாரணையின்போது பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளார்.

சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 9-ந்தேதி பூந்தமல்லி அருகே உள்ள நட்சத்திர ஓட்டல் அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இவரது தற்கொலைக்கான காரணம் குறித்து நசரத் பேட்டை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். சித்ராவுடன் அவரது கணவரான ஹேம்நாத் தங்கி இருந்தார்.

இருவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்து இருந்தது. அடுத்த மாதம் அவர்கள் திருமணம் செய்ய இருந்தார்கள். இதற்கிடையே சித்ராவும் ஹேம்நாத்தும் அக்டோபர் மாதமே பதிவு திருமணம் செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்தது. சித்ராவின் தற்கொலை முடிவுக்கான காரணம் என்ன என்று தெரியாமல் இருந்தது.

இதைத்தொடர்ந்து கணவர் ஹேம்நாத், சித்ராவின் பெற்றோர், ஓட்டல் ஊழியர்கள், கடைசியாக படப்பிடிப்பில் கலந்து கொண்டவர்கள் என பல தரப்பிலும் பல கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

ஆனால் ஹேம்நாத்திடம் மட்டும் தொடர்ந்து 6 நாட்களாக விசாரணை நடத்தப்பட்டு வந்தது. தொடர்ந்து அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்தார்.

இதையடுத்து சித்ராவுக்கு சொந்தமான மற்றும் ஹேம்நாத்திடம் கைப்பற்றப்பட்ட செல்போனில் பதிவான தகவல்களை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் பல்வேறு தகவல்கள் வெளியானது.

இதன் அடிப்படையில் சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் ஹேம்நாத்தை நேற்று இரவு 11 மணியளவில் போலீசார் கைது செய்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பொன்னேரி சிறையில் அடைத்தனர்.

போலீசாரின் அதிரடி விசாரணையின்போது ஹேம்நாத் பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறியதாவது:-

சித்ரா-ஹேம்நாத் இருவரும் காதலித்து வந்த நிலையில் இரு வீட்டாரின் சம்மதத்தோடு திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

அதன் பின்னர் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டனர். ஹேம்நாத் தனது சந்தேகப் பார்வையை மனைவி சித்ரா மீது திருப்பினார்.

அனைவரிடமும் சகஜமாக பேசும் சித்ராவிடம் அடிக்கடி எந்த நடிகருடன் நெருக்கமாக இருந்தாய், எந்த நடிகருடன் ஆட்டம் போட்டாய் என எனக்கு தெரியும். எனக்கு தெரியாத விசயங்களை மறைக்காமல் என்னிடம் சொல் என பல கேள்விகள் கேட்டு சித்ராவை மன உளைச்சலுக்கு ஆளாக்கி உள்ளார்.

அதுமட்டுமின்றி படப்பிடிப்பு நடக்கும் தளத்திற்கு திடீரென சென்று தகராறு செய்வதையும் வாடிக்கையாக கொண்டிருந்தார். சித்ரா இறப்பதற்கு முன்பு அவர் நடித்த நாடகத்தில் சக நடிகருடன் நெருக்கமான காட்சிகள் படமாக்கப்பட்டிருந்தது. இதனை வைத்தும் சித்ராவிடம் ஹேம்நாத் தகராறில் ஈடுபட்டு இருக்கிறார். இதனால் சித்ரா மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார்.

சம்பவம் நடந்த அன்று கடைசியாக நடந்த படப்பிடிப்பிற்கு சென்ற ஹேம்நாத், சித்ராவை ஓட்டலுக்கு காரில் அழைத்து வரும்போதே வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார். ஒரு கட்டத்தில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் ஓட்டல் அறைக்கு சென்றவுடன் கடுமையான வார்த்தைகளால் ஒருவரை ஒருவர் பேசி உள்ளனர்.

ஒரு கட்டத்தில் சித்ராவிடம், ‘நீ இருப்பதை காட்டிலும் இறப்பதே மேல், செத்துப்போ’ என்று கூறிவிட்டு ஹேம்நாத் ஓட்டல் அறையில் இருந்து வெளியேறி உள்ளார்.

இதன்பின்னரே சித்ரா தற்கொலை முடிவை எடுத்திருப்பது தெரிய வந்துள்ளது. கடைசியாக சித்ரா தனது தாய் விஜயாவிடம் பேசி இருக்கிறார்.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

மேலும் நடிகை சித்ரா கொரோனா ஊரடங்கால் வருமானம் இல்லாததால் பண நெருக்கடியிலும் சிக்கி இருந்ததாக தெரிகிறது. அவர் திருவான்மியூரில் புதிதாக வீடு கட்டி வருகிறார். புதிய சொகுசு கார் ஒன்றும் வாங்கி இருந்தார்.

மேலும் திருமணத்தையும் ஆடம்பரமாக நடத்த திருவேற்காட்டில் உள்ள பிரபல மண்டபத்தை பதிவு செய்து இருக்கிறார்.

இந்த நிலையில் கணவர் ஹேம்நாத்தும் நெருக்கடி கொடுத்ததால் மன உளைச்சலுக்கு ஆளாகினார். ஒரு கட்டத்தில் நடிப்பை நிறுத்த வேண்டும் என்றும் சித்ராவிடம் ஹேம்நாத் கூறியதாக தெரிகிறது.

இதனால் மன வேதனையில் இருந்த சித்ரா கடைசியாக ஓட்டலுக்கு வந்தபோது ஹேம்நாத்திடம் தகராறில் ஈடுபட்டு உள்ளார். அப்போது அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.

நடிகை சித்ரா தற்கொலை தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ தனது விசாரணையை நேற்று தொடங்கினார். முதலில் சித்ராவின் தாய் விஜயா, தந்தை காமராஜ், சகோதரி சரஸ்வதி, சகோதரர் சரவணன் ஆகியோர் ஆஜராகி விவரங்களை தெரிவித்தனர்.

நேற்று மதியம் 12 மணிக்கு தொடங்கிய விசாரணை மாலை 3 மணி வரை நடைபெற்றது. விசாரணை முடிந்து வெளியே வந்த சித்ராவின் தாய் விஜயா நிருபர்களிடம் கூறும்போது, ‘மகள் சித்ராவின் தற்கொலைக்கு முழுக்க முழுக்க ஹேம்நாத் தான் காரணம். அதற்கான விவரங்களை விசாரணையின்போது தெரிவித்துள்ளோம்.

இதற்கிடையே ஹேம்நாத் மற்றும் அவரது பெற்றோரிடம் இன்று ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது ஹேம்நாத் கைது செய்யப்பட்டு இருப்பதால் அவரது பெற்றோரிடம் மட்டும் ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ இன்று விசாரணை நடத்துகிறார்.

நடிகை தற்கொலையில் கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

malaimalar