நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்த தாய், தந்தையற்ற மாணவியை தத்தெடுத்த ரோஜா – குவியும் பாராட்டுக்கள்

மாணவி புஷ்பகுமாரியுடன் ரோஜா

நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்த தாய், தந்தையற்ற மாணவியை, நகரி தொகுதி எம்.எல்.ஏ. ரோஜா தத்தெடுத்து உள்ளார்.

செம்பருத்தி படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி 1990-களில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தவர் நடிகை ரோஜா. பின்னர் உழைப்பாளி, அதிரடி படை, சூரியன், வீரா, ஆயுத பூஜை, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் உள்பட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

தெலுங்கிலும் ஏராளமான படங்களில் நடித்து இருக்கிறார். இயக்குனர் ஆர்.கே.செல்வமணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் ஆந்திர அரசியலில் ஆர்வம் காட்டிய அவர், தற்போது ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கிறார்.

இந்நிலையில், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் பிறந்த நாளையொட்டி, ரோஜா பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். இதன் ஒரு பகுதியாக, திருப்பதியில் உள்ள காப்பகத்தில் படித்து வந்த மாணவியை அவர் தத்தெடுத்துள்ளார். அந்த மாணவியின் பெயர் புஷ்பகுமாரி, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அவருக்கு தாய்-தந்தை இல்லாத நிலையில், அவரை தத்தெடுப்பதாக ரோஜா அறிவித்துள்ளார். அந்த மாணவியின் படிப்பு செலவு முழுமையாக ஏற்பதாகவும் அவர் கூறியுள்ளார். ரோஜாவின் இத்தகைய செயலுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

malaimalar