விவசாயிகளின் போராட்டம் 40வது நாளாக நீடிப்பு… மத்திய அரசு இன்று முக்கிய பேச்சுவார்த்தை

பேச்சுவார்த்தை

கடும் குளிருக்கு மத்தியில் விவசாயிகளின் போராட்டம் 40வது நாளை எட்டியுள்ள நிலையில், விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துகிறது.

புதுடெல்லி:  மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி பஞ்சாப், அரியானா, உள்பட பல்வேறு மாநில விவசாயிகள் டெல்லி எல்லைகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் போராட்டம் இன்று 40வது நாளை எட்டி உள்ளது. குளிர் மற்றும் மழையைப் பொருட்படுத்தாமல் விவசாயிகள் போராட்டக் களங்களில் முகாமிட்டு மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பை தெரிவித்துவருகின்றனர்.

விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 5 கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில், கடந்த 30ம் தேதி 6ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தது. அதில் விவசாயிகளின் 2 கோரிக்கைகள் ஏற்கப்பட்டன. இன்னும், 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்வது, குறைந்தபட்ச உத்தரவாத விலை நீட்டிப்பதை சட்டப்பூர்வமாக்குவது ஆகிய 2 முக்கிய கோரிக்கைகளில் முடிவு எட்டப்படவில்லை.

இந்த கோரிக்கைகள் குறித்து குறித்து 40 விவசாய சங்க பிரதிநிதிகளுடன் டெல்லியில் மத்திய அரசு இன்று 7ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. மதியம் 2 மணிக்கு பேச்சுவார்த்தை தொடங்குகிறது. இன்றைய பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படும் என அரசு தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் ஞாயிற்றுக்கிழமை பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங்கை சந்தித்து, விவசாயிகளின் போராட்டம் மற்றும் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலைக்கு விரைவில் தீர்வு காண்பதற்கான யுக்தி குறித்து ஆலோசனை நடத்தினார்.

இன்றைய பேச்சுவார்த்தை குறித்து பாரதிய கிசான் யூனியன் செய்தித் தொடர்பாளர் ராகேஷ் திகாயித் கூறுகையில், ‘இன்று பல பிரச்சினைகள் விவாதிக்கப்பட உள்ளன. அரசாங்கம் விவசாயிகளின் பிரச்சனைகளை புரிந்துகொள்ள வேண்டும். சட்டங்கள் ரத்து செய்யப்படுவதைத் தவிர வேறு எந்த தீர்வையும் விவசாயிகள் பரிசீலனை செய்ய மாட்டார்கள். சுவாமிநாதன் அறிக்கையை அரசு அமல்படுத்த வேண்டும். குறைந்தபட்ச ஆதார விலை தொடர்பாக சட்டம் இயற்ற வேண்டும்’ என்றார்.

‘ஏற்கனவே வலியுறுத்தியது போன்று 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்வது, குறைந்தபட்ச உத்தரவாத விலை நீட்டிப்பதை சட்டப்பூர்வமாக்குவது ஆகிய முக்கிய கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால், ஜனவரி 6 மற்றும் 26ம் தேதி டிராக்டர் பேரணி நடத்துவோம்’ என்று பஞ்சாப் மாநிலத்தின் கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டி இணை செயலாளர் சுக்வீந்தர் எஸ்.சாப்ரா தெரிவித்தார்

malaimalar