‘மர்ம கொலைகளும், துப்பறியும் போலீஸ் அதிகாரியும்…’ என்று பெயர் சூட்டியிருக்கலாம் கபடதாரி – விமர்சனம்

நடிகர்: சிபிராஜ், நடிகை: நந்திதா ஸ்வேதா, டைரக்ஷன்: பிரதீப் கிருஷ்ணமூர்த்தி,  இசை : சைமன் கே.கிங் ஒளிப்பதிவு : ராசாமதி

குற்றப்பிரிவு போலீசாகி துப்பறிய வேண்டும் என்ற ஆர்வத்துடன் காவல் துறையில் சேர்ந்த சிபிராஜுக்கு போக்குவரத்து பிரிவில், வேலை கிடைக்கிறது.

புதையலுக்காக ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன், மனைவி, மகள் ஆகிய மூன்று பேர் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார்கள். அந்த மர்ம கொலைகள் மூடி மறைக்கப்படுகின்றன. 40 வருடங்களுக்குப்பின், விளையாட சென்ற ஒரு சிறுவன் கையில் கொலை செய்யப்பட்டவர்களின் எலும்புக்கூடுகள் சிக்கி, பரபரப்பை ஏற்படுத்துகின்றன.

குற்றப்பிரிவு போலீசாகி துப்பறிய வேண்டும் என்ற ஆர்வத்துடன் காவல் துறையில் சேர்ந்த சிபிராஜுக்கு போக்குவரத்து பிரிவில், வேலை கிடைக்கிறது. இந்த நிலையில், ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் கொலைகளில் அவர் துப்பறிகிறார். இதனால் அவருடைய உயர் அதிகாரிகளின் எதிர்ப்பை சம்பாதிக்கிறார். அதையெல்லாம் மீறி, சிபிராஜ் கொலையாளிகளை பிடிப்பதில் தீவிரம் காட்டுகிறார்.அவர் கொலையாளிகளை பிடித்தாரா?, கொலையாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுத்தாரா? என்பது பதற்றம் ஏற்படுத்தும் உச்சக்கட்ட காட்சி.

ஆறடி உயரம், கட்டுமஸ்தான உடற்கட்டு, ஆக்ரோஷமான நடிப்பு ஆகிய மூன்றும் கலந்த சிபிராஜ், போலீஸ் வேடத்துக்கு பொருத்தமான தேர்வு. படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை எல்லா காட்சிகளிலும் கம்பீரம். ஆசைப்பட்ட வேலை கிடைக்கவில்லையே என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தும் காட்சிகளிலும், முன்னாள் போலீஸ் அதிகாரி நாசரின் சாவு தன்னால்தான் நிகழ்ந்தது என்று வேதனைப்படும்போதும், சிபிராஜ் நிறைவான நடிப்பை வெளிப்படுத்துகிறார்.

பத்திரிகை நிருபர் ஜெயப்பிரகாசின் மகளாக நந்திதா ஸ்வேதாவை அளவோடு பயன்படுத்தி இருக்கிறார்கள். நீண்ட நெடுங்காலத்துக்கு அப்புறம் சுமன் ரங்கநாதன்! இரண்டே இரண்டு காட்சிகளில் வந்தாலும், நினைவில் நிற்கிறார், ஜே.எஸ்.சதீஷ்குமார். முக்கிய வில்லன் சம்பத் மைத்ரேயா, அட்டகாசமான தேர்வு.

ராசாமதியின் ஒளிப்பதிவில் அனைத்து காட்சிகளும் பளிச். சைமன் கே.கிங்கின் பின்னணி இசை சில இடங்களில் ஜில்லிப்பு, சில இடங்களில் பேரிரைச்சல். பிரதீப் கிருஷ்ணமூர்த்தி டைரக்டு செய்து இருக்கிறார். குற்றப்பின்னணி கதையில் காதலும், பாடல்களும் ‘வேஸ்ட்’ என்று முடிவு எடுத்திருப்பதை பாராட்டலாம். கதை- வசனத்தில் நிறைய முன் கதைகள், குழப்பம் ஏற்படுத்துகின்றன.

40 வருடங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டவர்கள் என்ற படத்தின் ஆரம்பமே சலிப்பை ஏற்படுத்துவதால், ‘கபடதாரி’ கவனம் ஈர்க்கவில்லை.

dailythanthi