மலைவாசி மக்கள் எப்படி நரமாமிசம் சாப்பிடுபவர்களாக மாறினார்கள் படம் ட்ரிப் – விமர்சனம்

நடிகர்: பிரவீன், யோகி பாபு, கருணாகரன்,  நடிகை: சுனைனா,  டைரக்ஷன்: டென்னிஸ் மஞ்சுநாத்,  இசை : சித்து குமார்,  ஒளிப்பதிவு : உதய சங்கர்

காட்டுக்குள் நர மாமிசம் சாப்பிடும் மனிதர்கள் இருப்பதாக கேள்விப்படுகிறார்கள். இருப்பினும், அதுபற்றி பயப்படாமல் காட்டுக்குள் தங்கள் பயணத்தை தொடர்கிறார்கள்.

4 நண்பர்களும், அவர்களின் சிநேகிதிகளும் அடர்ந்த காட்டுக்குள் ஒரு ‘ட்ரிப்’ செல்கிறார்கள். அந்த காட்டுக்குள் நர மாமிசம் சாப்பிடும் மனிதர்கள் இருப்பதாக கேள்விப்படுகிறார்கள். இருப்பினும், அதுபற்றி பயப்படாமல் காட்டுக்குள் தங்கள் பயணத்தை தொடர்கிறார்கள்.

வழியில் இவர்கள் கருணாகரனையும், யோகி பாபுவையும் பார்த்து சந்தேகிக்கிறார்கள். இருவரும் காட்டுவாசிகளாக இருக்கலாம் என்று கணக்கு போடுகிறார்கள். யோகி பாபுவும், கருணாகரனும் காட்டுக்கு நடுவில் அமைந்துள்ள ஒரு பங்களாவுக்கு பெயிண்டிங் செய்யப்போகிறார்கள்.

அவர்களை பின்தொடரும் நண்பர்கள் குழு, மறைந்திருந்து கண்காணிக்கிறார்கள். இந்த நிலையில், நரமாமிசம் சாப்பிடும் வெறிபிடித்த மனிதர்கள் காட்டு பங்களாவை தாக்கி, உள்ளே நுழைய முயற்சிக்கிறார்கள். அவர்களிடம் இருந்து நண்பர்கள் குழு தப்பியதா, இல்லையா? என்பது மீதி கதை.

இதில் கருணாகரன், யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், சுனைனா ஆகிய நான்கு பேரும் தெரிந்த முகங்கள். மற்றவர்கள் அனைவரும் புதுமுகங்கள். கருணாகரன், யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் ஆகிய மூன்று பேரும் அவ்வப்போது சிரிக்க வைக்கிறார்கள். மப்பும் மந்தாரமுமாக சுனைனா. சரியான கவர்ச்சி விருந்து. டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கியிருக்கிறார்.

மலைவாசி மக்கள் எப்படி நரமாமிசம் சாப்பிடுபவர்களாக மாறினார்கள்? என்ற முன்னுரையுடன், படம் மிகுந்த எதிர்பார்ப்புடன் தொடங்குகிறது. அதன்பிறகு வழக்கமான காட்சிகள், பார்த்து சலித்த சீன்கள். முகமெல்லாம் ரத்தக்கறையுடன் வரும் நரமாமிச ஆசாமிகள் மட்டும் கொஞ்சமாக பயமுறுத்துகிறார்கள்.

பச்சைப்படுதா போர்த்திய மலைகளையும், திக்குத்தெரியாத காடுகளையும் படம் பிடித்த விதத்தில், ஒளிப்பதிவாளர் உதயசங்கரின் கேமரா, பளிச். சிந்து குமாரின் பின்னணி இசை, திகில் கூட்டுகிறது. இடைவேளை வரை, காட்சிகள் மெதுவாக கடந்து போகின்றன. அப்புறம் திரைக்கதை வேகம் பிடிக்கிறது.

ஒரே மாதிரியான திகில் பட வரிசையில், ‘ட்ரிப்’ இடம் பிடிக்கிறது.

dailythanthi