நடிகர்: ஜீவா, அருள்நிதி, நடிகை: மஞ்சிமா மோகன், பிரியா பவானி சங்கர் , டைரக்ஷன்: ராஜசேகர், இசை: யுவன் சங்கர் ராஜா, ஒளிப்பதிவு : அபிநந்தன்
2 நண்பர்களை பற்றிய கதை. ஜீவா, அருள்நிதி இருவரும் நண்பர்கள். இரண்டு பேரும் ராதாரவியின் ‘பைனான்ஸ்’ கம்பெனியில் வேலை செய்கிறார்கள்.
இருவருமே கபடி வீரர்கள். ஆளுக்கு ஒரு அணியில் சாம்பியன்களாக இருக்கிறார்கள். கபடி ஆட்டத்தில் எதிர் எதிராக விளையாடும் இவர்கள், ஒருவரையொருவர் விட்டுக்கொடுக்காத அளவுக்கு உள்ளுக்குள் நட்பாக இருக்கிறார்கள்.
அருள்நிதியின் தாய்மாமா வேல ராமமூர்த்தி. இவருடைய மகள் மஞ்சிமா மோகன். இவர், ஜீவாவை காதலிக்கிறார். அருள்நிதி, எதிர்வீட்டு கிறிஸ்தவ பெண் (‘ஆடுகளம்’ நரேனின் மகள்) பிரியா பவானி சங்கரை காதலிக்கிறார். இந்த காதல் விவகாரம் இரண்டு குடும்பத்தினர் இடையே மோதலை ஏற்படுத்துகிறது. இவர்களின் காதலும், மோதலும் என்ன ஆகிறது? என்பது சுவாரஸ்யமான மீதி கதை.
ஜீவாவுக்கு நகைச்சுவை கதையும், கதாபாத்திரமும் புதுசு அல்ல. அருள்நிதியை சண்டை போட விட்டு ரசிப்பது, அவரை பற்றி விளையாட்டாக ‘வேல ராமமூர்த்தியிடம் போட்டுக்கொடுப்பது, தன்னால் நின்று போன திருமணத்தை நடத்தி வைக்க போராடுவது, நண்பருக்காக ‘ஆடுகளம்’ நரேனிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு, அருள்நிதி_மஞ்சிமா மோகன் காதல் ரகசியத்தை போட்டு உடைப்பது, கபடி ஆட்ட சாம்பியனாக தன்னை நிரூபிப்பது என படம் முழுக்க கலகல நாயகனாக ஜீவா தன் கொடியை பறக்க விடுகிறார்.
அருள்நிதிக்கு எந்த இடத்திலும், யாரிடமும் நண்பனை விட்டுக்கொடுக்காத-நண்பனுக்காக போராடுகிற ஜீவனுள்ள கதாபாத்திரம். கபடியில் மட்டுமல்ல, சண்டை காட்சிகளிலும் அவர் சாம்பியன்தான் என்பதை உறுதிப்படுத்துகிறார். அவருடைய உயரமும், கம்பீரமும், வசன உச்சரிப்பும் அதற்கு நூறு சதவீதம் பொருந்துகிறது.
இவருடைய முறைப்பெண்ணாக மஞ்சிமா மோகன், காதலியாக பிரியா பவானி சங்கர் ஆகிய 2 கதாநாயகிகளுக்கும் நடிப்பதற்கு நிறைய வாய்ப்பு. பயன்படுத்திக்கொண்டார்கள்.
ரோபோ சங்கர், பாலசரவணன் ஆகிய இருவரின் நகைச்சுவை கொஞ்சம் தமாஷ், கொஞ்சம் மொக்கை. ராதாரவி, கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார். ‘ஆடுகளம்’ நரேன், இளவரசு, மாரிமுத்து, வேல ராமமூர்த்தி, ஸ்ரீரஞ்சனி ஆகியோர் குறையில்லாத நடிப்பால் படத்துக்கு சிறப்பு சேர்க்கிறார்கள்.
யுவன் சங்கர் ராஜாவின் இசை, கூடுதல் அம்சம். படத்தின் ஆரம்ப காட்சியிலேயே ஒளிப்பதிவு யார்? என கேட்க தூண்டுகிறார், ஒளிப்பதிவாளர் அபிநந்தன் ராமானுஜம்.
கதை, திரைக்கதை, இயக்கம்: என்.ராஜசேகர். வசனம், அனேக இடங்களில் கைதட்டல் பெறுகிறது. மஞ்சிமா மோகன் மிக சுலபமாக மனதை மாற்றிக்கொள்வது, அவருடைய கதாபாத்திரத்தை கொச்சைப்படுத்துவது போல் உள்ளது.
விறுவிறுப்பாகவும், கலகலப்புமாகவும் கதை சொல்லியிருக்கிறார், டைரக்டர் என்.ராஜசேகர்.
dailythanthi