முதல்-அமைச்சர் நாராயணசாமி
புதுச்சேரி நியமன எம்எல்ஏக்களுக்கு ஓட்டுரிமை கிடையாது என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுவை காங்கிரஸ் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த நமச்சிவாயம், மல்லாடிகிருஷ்ணாராவ், எம்.எல்.ஏ.க்கள் தீப்பாய்ந்தான், ஜான்குமார் ஆகியோர் அடுத்தடுத்து தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.
இதையடுத்து புதுவை சட்டசபையில் ஆளும் கட்சியும், எதிர்கட்சியும் தலா 14 எம்.எல்.ஏ.க்களுடன் சமபலத்தில் உள்ளது.
தற்போது சபையில் மொத்தம் உள்ள 28 எம்.எல்.ஏ.க்களில் 15 எம்.எல்.ஏ. பலம் இருந்தால் மட்டுமே மெஜாரிட்டி கிடைக்கும். எதிர்க்கட்சியில் உள்ள 14 எம்.எல்.ஏ.க்களில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் 3 பேரும் மத்திய அரசால் நேரடியாக நியமிக்கப்பட்டவர்கள்.
நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு வாக்குரிமை உண்டு என்ற அடிப்படையிலேயே மெஜாரிட்டியை இழந்த காங்கிரஸ் அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்கட்சி எம்.எல்.ஏ.க்கள் 14 பேரும் கையெழுத்திட்டு கவர்னர் மாளிகையில் மனு அளித்தனர்.
இந்த நிலையில் புதியதாக பதவியேற்ற கவர்னர் தமிழிசை எதிர்கட்சிகளின் மனு மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் முதல்-அமைச்சர் நாராயணசாமியை அழைத்து பேசினார்.
இதனையடுத்து கவர்னர் தமிழிசை புதுவை காங்கிரஸ் அரசு சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தரவிட்டுள்ளார். வருகிற 22-ந் தேதி புதுவை சட்டசபையை கூட்டி ஒரேயொரு நிகழ்ச்சி நிரலாக அரசிற்கு பெரும்பான்மை உள்ளதா என்ற வாக்களிப்பை கைகளை உயர்த்தி காண்பிப்பது மூலம் நடத்த வேண்டும். இந்த நிகழ்வு முழுவதும் விடியோவில் பதிவு செய்ய வேண்டும் என கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பானது 22-ந்தேதி மாலை 5 மணிக்குள் நிறைவடைய வேண்டும். எக்காரணம் கொண்டும் இதனை தள்ளி வைக்கவோ, தாமதப்படுத்தவோ, நிறுத்தி வைக்கவோ கூடாது. சட்டப்படியும் அமைதியான முறையிலும் வாக்களிப்பு நடப்பதை சட்டபேரவை செயலர் உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து முதல்- அமைச்சர் நாராயணசாமி தலைமையில் ஆளும் காங்கிரஸ் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களின் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்தில், அமைச்சர்கள் ஷாஜகான், கமலக்கண்ணன், கந்தசாமி, துணை சபாநாயகர் எம்.என்.ஆர். பாலன், எம்.எல்.ஏ.க்கள் விஜயவேணி, அனந்தராமன், ஜெயமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ராஜ்பவன் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. லட்சுமிநாராயணன் அவசர கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
கூட்டத்துக்கு பிறகு முதல்- அமைச்சர் நாராயணசாமி கூறியதாவது:-
பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சி கவிழ்ப்பு திட்டத்தை முறியடிப்போம். எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா முயற்சிக்கிறது. ஆளும் கட்சியில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் 14 பேர் உள்ளோம்.
நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு வாக்குரிமை இல்லை என்பது எனது கருத்து. நியமன எம்.எல்.ஏ.க்கள் தொடர்பாக பல தீர்ப்புகள் உள்ளது. இதனால் சட்ட வல்லுனர்களுடன் இது தொடர்பாக கலந்து ஆலோசிப்போம்.
நியமன எம்.எல். ஏ.க் களுக்கு ஒட்டுரிமை உள்ளது என்றுதான் தலைமை தேர்தல் கமிஷனர் கூறியுள்ளார். ஆனால், நம்பிக்கை வாக்கெடுப்பில் ஓட்டுரிமை உண்டு என கூறவில்லை.
இதுதொடர்பாக சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். புதுவை சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிப்போம். கோர்ட்டுக்கு செல்வது குறித்து சட்ட ஆலோசனைக்கு பிறகு முடிவு செய்வோம். காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் ஆலோசனை மேற் கொள்ளப்படும்.
இவ்வாறு நாராயணசாமி கூறினார்.
புதுவை சட்டசபையில் கடந்த காலங்களில் நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு வாக்குரிமை அளிக்கப்படவில்லை. ஆனால், 2017-ல் மத்திய பா.ஜனதா அரசு புதுவை சட்டசபைக்கு நேரடியாக எம்.எல்.ஏ.க்களை நியமித்தது.
இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க் களுக்கு உரிய அனைத்து உரிமைகளும், வாக்குரிமையும் நியமன எம்.எல்.ஏ.க் களுக்கும் உண்டு என தீர்ப் பளித்துள்ளது.
சமீபத்தில் சட்டமன்ற தேர்தல் ஏற்பாடுகளை ஆராய வந்த இந்திய தலைமை தேர்தல் கமிஷனரிடம் நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு வாக்குரிமை இருப்பதால் மத்தியில் ஆளும் கட்சிக்கும், அதன் ஆதரவு பெற்ற கட்சிக்கும் புதுவையில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கூடுதலாக உள்ளதே என கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்த தலைமை தேர்தல் கமிஷனர் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி புதுவை நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு வாக்குரிமை உள்ளது. தேர்தல் கமிஷன் அதில் தலையிட முடியாது என்றும் இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யலாம் என கூறினார்.
இந்த நிலையில் புதுவை காங்கிரஸ் ஆட்சியாளர்கள் நியமன எம்.எல்.ஏ.வுக்கு வாக்குரிமை இல்லை என கூறியிருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு வாக்குரிமை இல்லாத பட்சத்தில் புதுவை சட்ட சபையில் ஆளும் கட்சிக்கு 14 எம்.எல்.ஏ.க்கள் பலமும், எதிர்க்கட்சிக்கு 11 எம்.எல்.ஏ.க்கள் பலம் மட்டுமே இருக்கும்.
இதனால், சபையில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட 25 எம்.எல்.ஏ.க்களில் ஆளும் கட்சிக்கு 13 எம்.எல்.ஏ.க்கள் பலம் இருந்தாலே மெஜாரிட்டி கிடைக்கும். ஆளும் கட்சிக்கு 14 எம்.எல்.ஏ. பலம் இருப்பதால் காங்கிரஸ் அரசு மெஜாரிட்டியை நிரூபிக்கும்.
சட்டமன்றத்தை பொறுத்த வரையில் சபாநாயகர் எடுக்கும் முடிவே இறுதியானது என்பதால் புதுவை காங்கிரஸ் அரசு தப்புமா? என்பது வருகிற 22-ந் தேதி தெரியவரும்.
malaimalar