மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் இடது கணுக்காலில் ஆழமான எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என அவர் சிகிச்சை பெற்று வரும் கொல்கத்தா எஸ்.எஸ்.கே.எம். மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
கொல்கத்தா, மேற்கு வங்காள முதல் மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பா.ஜ.க. சார்பில் திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகி கடந்த ஆண்டு பா.ஜ.க.வில் இணைந்த சுவேந்து அதிகாரி போட்டியிடுகிறார். சுவேந்துக்கு பதிலடி தரும் வகையில் அவர் போட்டியிடும் நந்திகிராம் தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார்.
நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுவதற்கான தனது வேட்பு மனுவை ஹல்டியா பகுதியில் உள்ள தேர்தல் அலுவலகத்திற்கு சென்று நேற்று தாக்கல் செய்தார்.
அதனை தொடர்ந்து மாலையில் பர்பா மெதினிபுர் மாவட்டத்தின் ரியாபாரா பகுதியில் பிரசாரம் மேற்கொள்ள சென்றார். அங்குள்ள கோயிலுக்கு வெளியே காரின் அருகே மம்தா நின்றிருந்தபோது, அவரை 4, 5 பேர் தாக்கியதாக மம்தா பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தினார்.
இதில் காலில் காயமடைந்த மம்தாவை பாதுகாவலர்கள் தூக்கி கொண்டு காரில் ஏற்றினர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, “கார் கதவு அருகே நான் நின்றிருந்தேன். அப்போது, 4, 5 பேர் என்னை தள்ளிவிட்டு தாக்கினர். என்னை சூழ்ந்து கொண்டு கார் கதவை நோக்கி தள்ளி விட்டனர். கதவில் எனது கால் மோதியது. இதில் காலில் காயம் ஏற்பட்டது” என்றார். தற்போது கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் மம்தா பானர்ஜி அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் இடது கணுக்காலில் ஆழமான எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என அவர் சிகிச்சை பெற்று வரும் கொல்கத்தா எஸ்.எஸ்.கே.எம். மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
மம்தாவின் வலது தோள், வலது முன்னங்கை மற்றும் கழுத்தில் காயம் ஏற்பட்டதற்கான அடையாளங்கள் காணப்பட்டதாகவும் அவர்கள் கூறினர். தமக்கு நெஞ்சுவலி, மூச்சுத்திறணல் ஆகியன ஏற்பட்டதாக அவர் கூறியதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மருத்துவமனையில் மம்தா இருப்பதால் இன்று வெளியாக இருந்த கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படவில்லை. இதனிடையே மருத்துவமனையில் இருந்தவாறு வெளியிட்ட வீடியோ பதிவில், திரிணமூல் தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும் என மம்தா கேட்டுக் கொண்டுள்ளார்.
மமதா வீடியோவில் கூறி இருப்பதாவது:-
நேற்று எனது கார் அருகே நின்று கொண்டிருந்தேன். அப்போது திடீரென தள்ளப்பட்டேன். தற்போது நான் சிகிச்சையில் உள்ளேன். எனது கால், முட்டு, கையில் காயம் ஏற்பட்டுள்ளது. கொல்கத்தாவில் இருந்து விரைவில் புறப்படுவேன். எனது பணிகளை 2 முதல் 3 நாட்களில் தொடங்குவேன். அனைவரும் அமைதி காக்க வேண்டும். யாருக்கும் எந்த இடையூறும் ஏற்பட்டு விடக்கூடாது. எனக்கு சில பிரச்னைகள் இருக்கிறது நான் சமாளித்துவிடுவேன். எந்த கூட்டத்தையும் ரத்து செய்ய வேண்டாம். சில நாள்களில் நான் பிரசாரத்துக்கு வந்துவிடுவேன். சக்கர நாற்காலியில் அமர்ந்தாவது பிரசாரம் செய்வேன். எனக் கூறினார்.
dailythanthi