ஐஸ் வியாபாரியான சமுத்திரக்கனி, கிராமத்து பணம் பறிப்பது மோசடியில் இன்னொரு சமுத்திரக்கனி – ஏலே படம் விமர்சனம்

நடிகர்: சமுத்திரக்கனி, மணிகண்டன் நடிகை: மதுமதி டைரக்ஷன்: ஹலிதா சமீம் இசை : கேபர் வாசுகி ஒளிப்பதிவு : தேனி ஈஸ்வர்

ஒரு கிராமத்தின் குச்சி ஐஸ் வியாபாரியையும், அவருடைய மகனையும் முக்கிய கதாபாத்திரங்களாக கொண்ட கதை.

கடந்த வருடம் திரைக்கு வந்து பாராட்டுகளை பெற்ற ‘சில்லுக்கருப்பட்டி’ படத்தின் டைரக்டர் ஹலிதா சமீமின் புதிய படம். ஒரு கிராமத்தின் குச்சி ஐஸ் வியாபாரியையும், அவருடைய மகனையும் முக்கிய கதாபாத்திரங்களாக கொண்ட கதை.

குச்சி ஐஸ் வியாபாரியான சமுத்திரக்கனி, மனைவியை இழந்தவர். இவருக்கு ஒரு மகளும், மகனும் இருக்கிறார்கள். குடிபோதை, அடுத்தவரை ஏமாற்றுதல், பொய், புரட்டு ஆகிய அத்தனை மோசமான நடவடிக்கைகளையும் கொண்டவர், சமுத்திரக்கனி. அவருடைய கெட்ட பழக்கவழக்கங்களை பார்த்துக் கொண்டிருக்கும் மகன் மணிகண்டனுக்கு தந்தை மீது வெறுப்பு வளர்கிறது.

கார் ஓட்டும் பயிற்சியாளரான அவருக்கு அந்த ஊர் பண்ணையார் மகள் மதுமதி மீது காதல். அவரை மதுமதியும் விரும்புகிறார். இவர்களின் காதலில் தடை ஏற்பட மணிகண்டன் ஊரில் இருந்து வெளியேறி சென்னைக்கு வந்து விடுகிறார்.

இந்த நிலையில், அப்பா இறந்துவிட்டதாக மணிகண்டனுக்கு தகவல் வருகிறது. ஊருக்கு வரும் அவருக்கு காதலி மதுமதிக்கு விடிந்தால் திருமணம் என்ற தகவல் கிடைக்கிறது. நண்பர்கள் உதவியுடன் காதலியை கடத்த முடிவு செய்கிறார். இந்த சூழ்நிலையில், இறந்துபோன அவருடைய அப்பாவின் உடல் காணாமல் போகிறது.

பிணத்தை கடன்காரர்கள் கடத்தினார்களா, மணிகண்டனின் காதல் என்ன ஆனது? என்பதற்கான பதில், மீதி கதையில் இருக்கிறது.

சமுத்திரக்கனிக்கு இரட்டை வேடங்கள். ஐஸ் வியாபாரி முத்துக்குட்டியாக ஒருவர் படம் முழுக்க வருகிறார். கோழி குஞ்சுகளை ரோட்டில் நடமாடவிட்டு பணம் பறிப்பது, கடன்காரரை பார்த்ததும் நெஞ்சுவலி வந்தவர் போல் நடிப்பது ஆகிய காட்சிகளில் சமுத்திரக்கனி ஒரு கிராமத்து மோசடி பேர்வழியை அப்படியே நடமாட விட்டு இருக்கிறார்.

இவருடைய தம்பியாக இன்னொரு சமுத்திரக்கனி. இருவருக்கும் உள்ள உருவ ஒற்றுமை பற்றி ஐஸ் வியாபாரியான சமுத்திரக்கனி கிண்டலாக விளக்கம் சொல்லும்போது, ஆரவாரத்தில் தியேட்டரே அதிர்கிறது. அவரது மகனாக மணிகண்டன், ஒரு கிராமத்து இளைஞராக மனதில் பதிகிறார். ‘நாச்சியா’ என்ற பண்ணையார் மகளாக வரும் மதுமதி, இன்னொரு சிரிப்பழகி. படம் பார்த்துவிட்டு வெளியே வந்த பிறகும் நினைவில் நிற்கிறது, இவருடைய ‘நாச்சியா’ கதாபாத்திரம். படத்தின் மிக சிறந்த அம்சம், தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு. கிராமத்து யதார்த்தங்களை எல்லாம் மிக அழகாக பதிவு செய்து இருக்கிறார். பின்னணி இசையும் கதையோடு இசைந்திருக்கிறது. ஒரு கிராமத்து கதையை நகைச்சுவையுடன் ஜனரஞ்சகமாக சொல்லியிருக்கிறார், டைரக்டர் ஹலிதா சமீம்.

உறவினர்கள் சூழ்ந்திருக்கும்போது சமுத்திரக்கனியின் உடல் காணாமல் போவதை நம்ப முடியவில்லை. இதுபோல் சின்ன சின்ன குறைகள் இருந்தாலும், படம் பார்ப்பவர்களை திரைக்கதையுடன் ஒன்ற வைத்ததற்காக டைரக்டருக்கு பாராட்டுகள்

dailythanthi