படம் ஆரம்பத்தில் ஒரு கிளி, தான் என்று தெரிந்துக் கொள்ள கடவுளிடம் கேட்கிறது. அதன்பின் பிளாஸ்பேக்கில் கதை நகர்கிறது. நாயகி மேக்னாராஜ் மிகவும் கடவுள் பக்தியுடன் இருந்து வருகிறார். அப்போது நாடோடி சிறுவன் சிவ தினேஷ் கோவிலில் தூங்குவதை பார்த்து தன்னுடைய வீட்டிற்கு அழைத்து செல்கிறார்.
சிவ தினேஷும் அவர்கள் வீட்டிலேயே தங்கி, கோவில் அருகே இருக்கும் ஒரு இடத்தில் தூங்கி வருகிறான். ஒருநாள் கோவிலுக்கு வருபவர்களுக்கு பிரசாதம் கொடுக்கிறாள் மேக்னா. அப்போது பிரசாதம் தீர்ந்து போக, சிவ தினேஷ் வைத்திருக்கும் பழங்களை மற்றவர்களுக்கு கொடுக்கிறான். அந்த பழங்களை சாப்பிட்டவர்களுக்கு இருக்கும் குறைகள் நீங்குகிறது.
இதே சமயம் அரக்கர்கள் ஓலைச்சுவடிக்காக நாயகி மேக்னாவின் அத்தை மகனை தேடி வருகிறார்கள். இதையறிந்த சிறுவன் சிவ தினேஷ், அரக்கர்களிடம் இருந்து மேக்னாவின் அத்தை மகனை எப்படி காப்பாற்றுகிறார் என்பதே படத்தின் மீதிக்கதை.
பூவண்டன் தோப்பு என்னும் சாமி தோப்பில் ஶ்ரீமன் நாராயண வைகுண்டர் நிகழ்த்திய அற்புதங்களை வரலாறாக எடுத்துச் சொல்லும் விதமாக ‘ஒரு குடைக்குள்’ படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் கே.எல்.உதயகுமார். கடவுளின் அற்புதங்களை பேசும் படமாக இருப்பதால் பார்ப்பதற்கு ஆவண படம் போல் இருக்கிறது. திரைக்கதைக்காக கொஞ்சம் சுவாரஸ்யம் சேர்த்திருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்.
வைகுண்டராக ஆனந்த் நடித்திருக்கிறார். கதாபாத்திரத்திற்கு ஓரளவிற்கு பொருந்தி இருக்கிறார். பக்தையாக வரும் மேக்னா அளவான நடிப்பை கொடுத்திருக்கிறார். அவதார சிறுவனாக சிவ தினேஷ் அறிமுகமாகிறார். இவரது நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. நிரோஷா, கருத்தம்மா ராஜஶ்ரீ, இளவரசு, இராஜேந்திரநாத், ரவிராகுல், சூசன் ஜார்ஜ் ஆகியோர் கொடுத்த வேலைகளை செய்திருக்கிறார்கள்.
தேவாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். இவர் பாடிய பாடல் ரசிக்க வைக்கிறது. வி.இராஜேந்திரன் ஒளிப்பதிவில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.
மொத்தத்தில் ‘ஒரு குடைக்குள்’ கடவுளின் அற்புதம்.
maalaimalar