சாதி வெறியை கருவாக கொண்ட படம் கர்ணன் – விமர்சனம்

நடிகர்: தனுஷ், யோகிபாபு, லால் நடிகை: ரெஜிஷா விஜயன் டைரக்ஷன்: மாரி செல்வராஜ் இசை : சந்தோஷ் நாராயணன் ஒளிப்பதிவு : தேனி ஈஸ்வர்

பொடியன் குளம் என்று ஒரு குக்கிராமம். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் வசிக்கும் சிற்றூர். அந்த ஊருக்கு பஸ் நிறுத்தம் கிடையாது.

நெடுஞ்சாலையில் இருந்து சில கிலோ மீட்டர்கள் தூரத்தில் ஒதுங்கியிருக்கிறது. இந்த கிராமத்துக்கும், வேறு சாதியினர் வசிக்கும் பக்கத்து கிராமத்துக்கும் இடையே உரசல் இருந்து வருகிறது.

அது, தாழ்த்தப்பட்ட கிராமத்து மாணவியின் கல்லூரி படிப்பில் வெடிக்கிறது. அந்த மாணவியிடம் ஆபாச குறும்பு செய்யும் பக்கத்து ஊர்க்காரனால் சாதி கலவரம் ஆரம்பிக்கிறது.

ஒதுக்கப்பட்ட கிராமத்து இளைஞர் தனுஷ் தனது ஊர் மக்களுக்காக களத்தில் குதிக்கிறார். கர்ப்பிணி பெண் கைகாட்டியும் நிற்காமல் சென்ற பஸ்சை தனுஷ் அடித்து நொறுக்குகிறார். இது தொடர்பாக தாழ்த்தப்பட்ட சிலரை விசாரணை என்ற பெயரில் போலீஸ் அழைத்து சென்று உயிர் போகிற அளவுக்கு அடித்து சித்ரவதை செய்கிறார்கள்.

இந்த சம்பவம் பொடியன் குளம் கிராம மக்களை கொதித்து எழச்செய்கிறது. போலீசுக்கு எதிராக ஊர் மக்கள் அனைவரும் ஒன்று திரள்கிறார்கள். போலீஸ் நிலையத்தை தாக்குகிறார்கள். பொடியன் குளம் கலவர பூமி ஆகிறது. அப்பாவி கிராம மக்கள் ஆயுதம் தூக்குகிறார்கள். அவர்களுக்கு எதிராக ஆயுத போலீஸ் வருகிறது. கலெக்டர் வருகிறார். முடிவு, புயலுக்கு பின்னால் வரும் அமைதி.

தனுஷ் மடித்துக் கட்டிய அழுக்கு லுங்கி, சட்டை, கவனம் செலுத்தாத சிகை அலங்காரம் சகிதம் கோபக்கார இளைஞராக வருகிறார். அவருடைய இயல்பான தோற்றமும், நடிப்பும் ரசிகர்களை வெகுவாக கவரும் அம்சங்கள். எளிய மக்களில் ஒருவராக….அவர்களை அடக்குமுறையில் இருந்து காப்பாற்றும் வீரம் மிகுந்த இளைஞர் வேடத்தில், தனுஷ் கச்சிதமாக பொருந்துகிறார். அவர் கையில் தடியை தூக்கினாலே தியேட்டரில் ஆரவாரம்.

கதாநாயகி ரெஜிசா விஜயன், கேரளத்தின் நல்வரவு. அதிக வேலையில்லை என்றாலும், வந்தவரை நிறைவு. யோகி பாபு, குணச்சித்திர கதாபாத்திரத்திலும் ஆதரவை அள்ளுகிறார். ஊர் பெரியவர்களாக லால், ஜி.எம்.குமார், வில்லத்தனமான போலீஸ் அதிகாரியாக நட்டி ஆகியோர் கதாபாத்திரங்களாக கண்ணுக்குள் நிற்கிறார்கள்.

சந்தோஷ் நாராயணன் இசையில் 3 பாடல்கள், ஹிட் ரகம். குறிப்பாக தேவா பாடியிருக்கும் ‘‘என் ஆளு மஞ்சனத்தி…எடுப்பான செம்பருத்தி…’’ரசிகர்களை ஆட வைக்கிறது. பின்னணி இசை, கதையோட்டத்துக்கு வேகம் சேர்க்கிறது. தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு, கிராமத்து யதார்த்தங்களை உயிரோட்டமாக படம் பிடித்து இருக்கிறது.

மாரி செல்வராஜ் டைரக்டு செய்திருக்கிறார். ஒரு பெண் வலிப்பு நோயினால் பாதிக்கப்பட்டு நடுரோட்டில் கிடப்பது போல் மர்ம நாவல் பாணியில், படம் ஆரம்பிக்கிறது. தொடர்ந்து ஒரு திகில் படத்துக்குரிய பதற்றத்துடன் கதை வேகம் பிடிக்கிறது. படம் முழுக்க அந்த பதற்றம் தொடர்கிறது.

கன்னி தெய்வம் போல் வரும் பொம்மை சிலை, குதிரையுடன் வரும் சிறுவன், கால்கள் கட்டப்பட்ட கழுதை என படத்தில் கிராமத்து அம்சங்கள் நிறைய. ஊர் பெரியவராக வாழ்ந்திருக்கும் லாலை தனுஷ் அடிக்கடி அடிக்க பாய்வது தேவையா? ‘கிளைமாக்ஸ்’சில், ரத்த சேதாரம் அதிகம்.

விருதுகளை குவிக்கும் தனுஷ் படங்களின் வரிசையில், இந்த படமும் சேரும். டைட்டிலுக்கு பெருமை சேர்க்கிறது, படம்.

dailythanthi