இந்தியாவில் புதிதாக 2,11,298 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 3,847 பேர் பலி

புதுடெல்லி, இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாவது அலை, உலகின் பிற எந்த நாட்டிலும் ஏற்பட்டிராத வகையில் சுனாமி அலைகள் போல தாக்கி வருகிறது. இந்தியாவில் 4 லட்சத்துக்கும் அதிகமானோரை இந்த கொடிய தொற்று தாக்கி வந்தது.

நாட்டில் பல்வேறு மாநிலங்களில் தளர்வில்லா ஊரடங்குகள், கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பு, பொதுமக்களிடம் தற்போது ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு ஆகியவற்றின் காரணமாக தொற்று பாதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது.

நேற்று முன்தினம் இந்த எண்ணிக்கை மேலும் சரிந்தது. 40 நாட்களுக்குப்பிறகு தினசரி பாதிப்பு 2 லட்சத்துக்கு கீழே வந்தநிலையில் இந்தியாவில் நேற்று மீண்டும் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை கடந்தது. இதன்படி நேற்று 2 லட்சத்து 08 ஆயிரத்து 921 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,11,298 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 2 லட்சத்து 11 ஆயிரத்து 298 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியே 73 லட்சத்து 69 ஆயிரத்து 093 ஆக உயர்வடைந்து உள்ளது.

கொரோனா பாதிப்பால் நாட்டில் 3,847 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 3,15,235 ஆக உயர்ந்து உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 2 லட்சத்து 83 ஆயிரத்து 135 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 2 கோடியே 46 லட்சத்து 33 ஆயிரத்து 951 ஆக உயர்வடைந்து உள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது 24,19,907 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் இதுவரை போடப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 20 கோடியே 26 லட்சத்து 95 ஆயிரத்து 874 ஆக உள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இதுவரை 33 கோடியே 69 லட்சத்து 69 ஆயிரத்து 353 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன என்றும், அதில் நேற்று ஒருநாளில் மட்டும் 21,57,857 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.

dailythanthi