முதலிடத்தில் கோவை:முழு ஊரடங்கு நீட்டிப்பு தேவை: மருத்துவ நிபுணர்கள் கருத்து

கொரோனா தொற்று பரவலில் கோவை,தமிழக அளவில் நேற்று முதலிடம் பிடித்துவிட்டது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த, பரிசோதனை மையங்களை அதிகப்படுத்துவதோடு, முழு ஊரடங்கை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டியது அவசியமாகியுள்ளது.

கொரோனா பரவலில் தமிழகத்தில் முதலிடத்தைப் பிடிக்கும் அளவுக்கு, தினசரி பாதிப்பு நான்காயிரத்தைக் கடந்து, தேசிய அளவில் ‘கொரோனா ஹாட் ஸ்பாட்’ ஆக கோவை மாறிக் கொண்டிருக்கிறது. மாவட்டத்தில், 40 லட்சம் மக்கள் இருக்கும் நிலையில், இதுவரை ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு அதிகமானவர்கள், கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்; 30 ஆயிரம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னை மக்கள் தொகை மற்றும் மக்கள் அடர்த்தியைக் கணக்கிடுகையில், கோவையில் கொரோனா பரவல் சதவீதம் மிகவும் அதிகம். அரசின் கணக்குப்படி, கோவையில் தற்போது நுாற்றில், 30 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. இதுவே திருப்பூர் மாவட்டத்தில், 32 சதவீதமாகவுள்ளது. மேற்கு மாவட்டங்கள் முழுவதுமே பாதிப்பு சதவீதம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது.

கொரோனா பாதிப்பில் நேற்று மட்டும் 475 பேர் இறந்துள்ளனர். 33 ஆயிரம் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கு காரணமாக சென்னையில் கொரோனா தொற்று வேகமாக குறைந்து வருகிறது. 3 ஆயிரத்து 561 ஆக பதிவாகியுள்ளது. ஆனால் கோவையில் 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது. பாதிப்பு எண்ணிக்கை 4ஆயிரத்து 268 ஆகும். செங்கல்பட்டு,ஈரோடு, கன்னியாகுமரி,மதுரை,திருவள்ளூர், திருப்பூர், திருச்சி, விருதுநகர் மாவட்டங்களில் பாதிப்பு ஆயிரத்தை கடந்துள்ளது.

முக்கிய காரணங்கள் மூன்று!

கோவையில் பரவல் அதிகரிப்பதற்கு, பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. கொரோனா பரிசோதனை ஆய்வகங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பது, முக்கியக் காரணம். மாவட்டத்தில் அரசு மருத்துவமனை மற்றும் இ.எஸ்.ஐ., மருத்துவமனை ஆகிய இரண்டு அரசு ஆய்வகங்களைத் தவிர்த்து, 19 தனியார் ஆய்வகங்களில் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

தினமும், 10 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு பரிசோதனை எடுக்கப்பட்டாலும், அரசு ஆய்வகங்களில் பரிசோதனை மேற்கொள்வோருக்கு, அதற்கான முடிவு தெரிவதற்கு ஒரு வாரமாகி விடுகிறது. இதனால் முடிவு தெரிவதற்கு முன்பே, தொற்று பாதிப்புக்கு உள்ளானவர்கள், வெளியில் சுற்றக் கிளம்பிவிடுகின்றனர். அவர்களால் பலருக்கு தொற்று பரவுகிறது.கோவையில் சிறு, குறு, நடுத்தரத்தொழிற்கூடங்கள், பிற தொழிற்சாலைகள், மில்கள் அதிகம். இங்குள்ள ஒருவருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டாலும், அது வெகு விரைவாக சக தொழிலாளர்கள் பலருக்கும் பரவி விடுகிறது. மற்ற மாவட்டங்களை ஒப்பிடுகையில், கோவையில் தொற்று பரவல் மிகவும் அதிகமாவதற்கு இதுவும் ஒரு காரணம்.

இவற்றைத் தவிர்த்து, மூன்றாவது முக்கியக் காரணமாகக் கூறப்படுவது கேரளா. கோவைக்கு மிக அருகாமையில் உள்ள மாநிலம் என்பதோடு, கோவைக்கும், கேரளாவுக்குமான வர்த்தக, சமூகத் தொடர்புகளும் அதிகம். கேரளாவில் கொரோனா பரவல் உச்சத்தில் இருந்தபோது, அங்கிருந்து கோவைக்குள் வந்து சென்றவர்களின் எண்ணிக்கை பல ஆயிரம். இதனால் தேர்தல் காலத்தில், கோவையில் பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு கொரோனா தொற்று பரவியிருக்கும் என்பதை பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.

தீர்வுகள் மூன்று!

நிலைமை கை மீறிப் போயிருப்பதால், அரசு மிகக்கடுமையான சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

தனியார் ஆய்வகங்களில், கட்டணம் மிக அதிகமாக வசூலிப்பதால்தான், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா பரிசோதனைக்கு மக்கள் குவிகின்றனர். எனவே, அரசு ஆய்வகங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி, 24 மணி நேரத்துக்குள் பரிசோதனை முடிவுகளை அறிவிப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.கோவை மாவட்டத்தில், 40 லட்சம் மக்கள் இருக்கும் நிலையில், இதுவரை ஐந்து லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டிருப்பதாக, சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

உண்மையில் கோவையில் கொரோனா பரவல் வேகத்தைக் கணக்கிடுகையில், இது யானைப்பசிக்கு சோளப்பொரி. எனவே, கோவைக்கான தடுப்பூசி ஒதுக்கீட்டை அதிகப்படுத்த வேண்டும்.இவற்றுக்கும் மேலாக, கோவையில் குறைந்தபட்சம் இரண்டு வாரங்களுக்கு, தளர்வுகள் ஏதுமில்லாத முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும். இந்த நடவடிக்கைகளை அரசு உடனே எடுக்காவிட்டால், கோவையில் கொரோனா பாதிப்பையும், அதீத உயிரிழப்பையும் தடுக்கவே முடியாது என்பதுதான் கோவையிலுள்ள டாக்டர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கருத்து.

சென்னையை முந்தியது…

தமிழகத்தில், கொரோனா தொற்று பரவ துவங்கியதில் இருந்து, அதிக பாதிப்புக்களுடன், மாவட்டங்களில் முதலிடத்தில் இருந்த சென்னை, நேற்று இரண்டாமிடத்திற்கு சென்றது. சென்னையை முந்தி, அதிக பாதிப்புகளில் கோவை முதலிடத்தை பிடித்துள்ளது.

இதுகுறித்து, சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:மாநிலத்தில் உள்ள, 267 கொரோனா பரிசோதனை ஆய்வகங்களில் நேற்று மட்டும், 1.72 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டது. இதில், கோவையில், 4,268 பேர்; சென்னையில், 3,561 பேர்; செங்கல்பட்டில், 1,302 பேர் என, மாநிலம் முழுதும், 33 ஆயிரத்து, 764 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த, 2020 மார்ச்சில் கொரோனா பரவ துவங்கியதில் இருந்து, தினசரி கொரோனா பாதிப்பில், சென்னை மாவட்டம் மட்டுமே, தொடர்ந்து முதலிடம் பிடித்து வந்தது. தற்போது, இரண்டாம் அலை கொரோனா பாதிப்பிலும், ஒரே நாளில், 7,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். மற்ற மாவட்டங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் படிப்படியாக குறைந்து வருகிறது. இதன் காரணமாக, முதன் முறையாக, கொரோனா தினசரி பாதிப்பில், சென்னை இரண்டாவது இடம் பிடித்துள்ளது. கோவை மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.

இதுவரை, 2.68 கோடி மாதிரிகள் பரிசோதனையில், 19 லட்சத்து, 45 ஆயிரத்து, 260 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிகிச்சை முடித்து, நேற்று, 29 ஆயிரத்து, 717 பேர் உட்பட, 16 லட்சத்து, 13 ஆயிரத்து, 221 பேர் வீடு திரும்பினர்.தற்போது, சென்னையில், 45 ஆயிரத்து, 738 பேர்; கோவையில், 35 ஆயிரத்து, 707 பேர்; செங்கல்பட்டில், 15 ஆயிரத்து, 776 பேர் என, மூன்று லட்சத்து, 10 ஆயிரத்து, 224 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.கொரோனா தொற்றால், 475 பேர் உட்பட, 21 ஆயிரத்து, 815 பேர் இறந்துள்ளனர். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

செய்வதை சீக்கிரம் செய்யலாமே!

முதல்வர் ஸ்டாலின் நேற்று பேட்டியளிக்கையில், ”கோவை உள்ளிட்ட மேற்கு மண்டலப் பகுதிகளில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. அந்த பகுதியில் தொற்று பரவலைத் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது,” என்று கூறினார்.

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனும் இதேபோன்று நம்பிக்கை தெரிவித்தார். இதனால் கோவைக்கென சீனியர் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஒருவரை சிறப்பு அதிகாரியாக நியமித்து, கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. அதை அரசு விரைவாகச் செய்தால் நல்லது.

-நமது சிறப்பு நிருபர்-

dinamalar