குழந்தைகளின் பாதுகாப்பு உங்கள் கைகளில்: உஷாராக இருந்தால் தொற்றில் சிக்குவதை தவிர்க்கலாம்

கொரோனா முதல் இரண்டு அலைகளிலும், வயதானவர்கள், இளைஞர்கள், நடுத்தர வயதினர் பாதிக்கப்பட்டு மீண்டு வருகின்ற நிலையில், மூன்றாம் அலை குழந்தைகளையும், கிராம மக்களையும் அதிகம் தாக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆகவே, மருத்துவ மனைகளில் தேவையான வசதிகளை இப்போதே ஏற்படுத்த, ஆயத்தமாக வேண்டுமென, அரசை ‘அலர்ட்’ செய்கிறார், இந்திய மருத்துவ சங்க மாநில செயலாளர் ரவிக்குமார்.

அவர் கூறியதாவது:மூன்றாம் அலை என்பது ஆக., இறுதி அல்லது செப்.,ல் துவங்கலாம். பெரும்பாலும், குழந்தைகள், கிராமப்புற மக்கள் பாதிக்கப்படுவர். இக்கணிப்பு, 60 முதல் 70 சதவீதம் உண்மையாக வாய்ப்புள்ளது.இரண்டாம் அலையில், 30 முதல் 40 சதவீதம் பேர், நுரையீரல் பாதிக்கப்பட்ட நிலையிலேயே வருகின்றனர்.

மருத்துவமனைகள், மருத்துவர்கள், செவிலியர் இருந்தும், சிகிச்சை அளிக்க போராட வேண்டியுள்ளது. இச்சூழலில், அடுத்த அலையில் நாம் இன்னும் திணற வேண்டிய நிலை ஏற்படலாம். ஏனென்றால், குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் சிறப்பு மருத்துவர்கள், செவிலியர், மருத்துவ உபகரணங்கள், வென்டிலேட்டர், பிற வசதிகள் போதுமான எண்ணிக்கையில் இல்லை என்பதே தற்போதைய நிலை.

என்னென்ன செய்ய வேண்டும்?

  • பிற டாக்டர்கள், செவிலியர் எளிதாக குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாது. அதே போன்று, பெரியவர்களுக்கான வென்டிலேட்டர் உள்ளிட்ட, பிற மருத்துவ உபகரணங்களை குழந்தைகளுக்கு பயன்படுத்த இயலாது. அனைத்தும் தனியாக தேவை.

  • உடனடியாக சிறிய, நடுத்தர, பெரிய மருத்துவமனைகளில் உள்ள குழந்தை சிறப்பு மருத்துவர்கள், செவிலியர்களை கொண்டு பிற மருத்துவர்கள், செவிலியர்கள் பயிற்சி, வழிகாட்டுதல்களை பெற வேண்டியது அவசியம்.

  • குழந்தைகளுக்கு அவசியமான மருத்துவ உபகரணங்களை, அரசு கொள்முதல் செய்வதுடன், கூடுதல் மருத்துவ பணியாளர்களையும் நியமனம் செய்து, தயாராக இருக்க வேண்டும்.

  • அரசு, சுகாதாரத்துறை, தனியார் மருத்துவமனைகள் ஆயத்த பணிகளை, உடனடியாக துவக்க வேண்டும்.நர்சுகள், டாக்டர்கள், பணியாளர்களுக்கு இப்போதே பயிற்சி அளிக்க வேண்டும்.

  • உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைப்படி, 12 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு, தடுப்பூசி செலுத்தும் பணிகளை உடனே துவக்க வேண்டும்.

*குழந்தைகளுக்கு தடுப்பூசி போட பெற்றோர் தயங்க கூடாது. முழு ஊரடங்கையோ, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கையோ, இன்னும் 3 மாதங்களுக்கு தொடர வேண்டும்.

  • குழந்தைகள் உள்ள வீடுகளில், கவனமாக இருக்க வேண்டும். இப்போதே, அவர்களுக்கு தொற்று நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

  • மாஸ்க் போடுவது, கைகளை கழுவுவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பதன் முக்கியத்துவத்தை கற்றுக்கொடுக்க வேண்டும்.

*வெளியில் விளையாட அனுமதிப்பதை தவிர்ப்பது நல்லது. குறிப்பாக, சிறு அறிகுறிகள் இருந்தாலும், தாமதிக்காமல் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

‘தொற்று வீரியம் அதிகரிக்கும்’

பி.எஸ்.ஜி., மருத்துவமனை குழந்தைகள் நல மருத்துவர் ஜோதி கூறுகையில், ”கொரோனா முதல், இரண்டாம் அலையில் குழந்தைகளுக்கு பாதிப்பு குறைவாகவே உள்ளது. உடல் எடை குறைவு, பிற இணை நோய்கள் உள்ள, 10 சதவீத குழந்தைகள், பெரியவர்கள் போன்று அதிக வீரியத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.மூன்றாம் அலையில் இது போன்ற அறிகுறிகளும், வீரியமும் குழந்தைகளுக்கு அதிகரிக்கலாம். இதற்காக, மனரீதியாகவும், பிற சிகிச்சை முறைகளிலும் அனைவரும் தயாராக இருக்க வேண்டியது அவசியம். பெற்றோர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அனைத்து மருத்துவமனைகளும் இதற்காக தயாராகி வருகின்றன. மத்திய, மாநில அரசுகள் தரப்பில் சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன,” என்றார்.

யோசியுங்க பெற்றோரே!

பச்சிளங்குழந்தைகளுக்கு, மாஸ்க் அணிவிப்பது சிரமம். அவர்கள் மாஸ்க் அணிவதை தவிர்க்க வேண்டுமென்றால், அவர்களை கவனித்துக் கொள்ளும் பெற்றோரும், மற்றவர்களும் தொற்று பாதிப்பின்றி இருக்க வேண்டும். குறைந்தபட்சம் தடுப்பூசியாவது போட்டிருக்க வேண்டும். தற்போதைய இரண்டாவது அலையில், நாம் ஒவ்வொருவரும் கவனமாக இருந்து விட்டால், மூன்றாம் அலை வருவதை தவிர்த்து விட முடியும். நம் உயிரினும் மேலான குழந்தைகள், மூச்சு விட சிரமப்பட வேண்டுமா, உயிருக்கு போராட வேண்டுமா… யோசியுங்கள் பெற்றோரே!

dinamalar