மலைநாட்டின் பைங்கிளியே…

கிளியினம் இவ்வுலகில் ஏறக்குறைய 372 வகைகளைக் கொண்டுள்ளதாக அறியப்படுகிறது. இவைகளில் பலவகையான கிளிகள் பெரும்பாலும் தென் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா பகுதிகளிலேயே வாழ்கின்றன.

மலேசியாவில் மிகக் குறைந்த வகையான கிளிகளே அதாவது 6 வகை கிளிகளே உள்ளன. இவற்றில் 3 வகை மட்டுமே கணிசமான அளவில் வாழ்கின்றன. மற்ற மூன்று வகை கிளிகள் மிகக் குறைந்த அளவிலேயே இங்கு காணப்படுகின்றன. மலேசியாவில் வாழும் கிளிகள் பஞ்சவர்ண கிளிகள்போல் பல நிறங்களை கொண்டிராது. இவை பெரும்பகுதி பச்சை நிறத்தை கொண்டவையே. அதோடு நம் நாட்டு கிளிகளைப் பேசி பழக முடியாது.

பசுமை கொஞ்சும் மலேசிய நாட்டில் 781 வகையான பறவைகள் வாழ்வதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. இவற்றுள் கிளி வகையைச் சேர்ந்த 6 பறவை இனம் பின்வருமாறு:

1. Blue Rumped Parrot (Puling / Tanau)

2. Long Tailed Parakeet (Bayan Nuri)

3. Blue Crowned Hanging Parrot (Serindit)

4. Vernal Hanging Parrot (Serindit Hijau)

5. Red Breasted Parakeet (Bayan Api)

6. Blue Naped Parrot (Bayan Tengkok Biru)

Blue Rumped Parrot இக்கிளியின் அறிவியல் பெயர் Psittinus eyanurus. இக்கிளியினம் வாழும் பகுதி மியன்மார் தென்முனை, தாய்லாந்து, மலேசியா, போர்னியோ, சுமத்திரா மற்றும் அதனை அண்டிய பகுதிகள். இவை 18 cm வரை வளரும் சிறு கிளியினம். இக்கிளிகள் இனிமையான ஒலியை எழுப்பக்கூடியவை.

Long Tailed Parakeet இக்கிளியின் அறிவியல் பெயர் Psittacula longicauda. இக்கிளியினம் நீண்ட வாலை கொண்டிருக்கும் இவை 42 செண்டி மீட்டர் வளரும். அந்தமான் தீவுகள், நிக்கோபார் தீவுகள், மலேசியா, சிங்கப்பூர், சுமத்திரா, போர்னியோ, இந்தோனேசிய நியாஸ், பங்கா மற்றும் அனம்பாஸ் போன்ற பகுதிகளில் இக்கிளியினம் காணப்படுகிறது.

Blue Crowned Hanging Parrot இக்கிளியின் அறிவியல் பெயர் Loriculus galgulus. இவை மிகக் குறுங்கிளியினத்தை சேர்ந்தவை. இக்கிளிகள் 13 செண்டி மீட்டர் வரை மட்டுமே வளரக்கூடியது. இவை மிகச் சுறுசுறுப்பாகவும் அங்குமிங்கும் தாவிக்குதித்து விளையாடும் தன்மை உடையது. இக்கிளிகள் உறங்கும்போது தலைகீழாகத் தொங்கிக் கொண்டே தூங்கும். தென் தாய்லாந்து, தீபகற்ப மலேசியா, சிங்கப்பூர், போர்னியோ, சுமத்திரா போன்ற பகுதிகளில் இக்கிளிகள் வாழ்கின்றன.

Vernal Hanging Parrot இக்கிளியின் அறிவியல் பெயர் Loriculus vernalis. இக்கிளிகளும் குறுங்கிளியினத்தை சேர்ந்தவைகளே. குட்டை வாலுடன் 14 செண்டி மீட்டர் மட்டுமே வளரக்கூடியவை. இக்கிளிகள் பார்ப்பதற்கு Blue Crowned Hanging Parrot போலவே தோற்றத்தில் இருக்கும். ஆனால் அவைகளைப்போல் எடுப்பான நிறத்தை கொண்டிருக்காது. இந்தியாவின் கிழக்குப் பகுதி முதல் தீபகற்ப மலேசியா உட்பட தென்கிழக்காசியா மற்றும் சிறீலங்கா போன்ற பகுதிகளில் இக்கிளிகள் காணப்படுகின்றன. மலேசியாவில் இக்கிளிகளின் எண்ணிக்கை மிகக் குறைவே.

Red Breasted Parakeet என்ற இக்கிளிகள் Psittacula alexandri என அறிவியல் பெயர் கொண்டவை. 33 செண்டி மீட்டர் வளர வளரக்கூடிய இக்கிளிகள் அதிகமாக ஜாவாவில் காணப்படுகின்றன. இந்தோனேசியாவின் ஏனைய பகுதிகள், அந்தமான் தீவுகள், தென்கிழக்காசியா, தென் ஆசியாவில் சில பகுதிகளிலும் இவை வாழ்கின்றன. தீபகற்ப மலேசியாவின் வட பகுதிகளில் மட்டும் இக்கிளிகள் மிகக்குறைவான அளவிலேயே காணப்படுகின்றன.

Blue Naped Parrot என்ற இக்கிளிகள் அறிவியல் பெயராக Tanygnathus Lucionensis என்று அழைக்கப்படுகிறது. 31 செண்டி மீட்டர் வரை வளரக்கூடிய இக்கிளிகள் பிலிப்பினா நாட்டிலேயே அதிகம் காணப்படுகின்றன. மற்றபடி மலேசியாவின் சபா மாநிலத்தில் மட்டும் சிறு அளவில் இக்கிளிகள் காணப்படுகின்றன.

வெட்டு மரங்களுக்காகக் காடுகள் அதிக அளவில் அழிக்கப்படுவதாலும் மேம்பாட்டிற்காக கானகங்கள் துவம்சம் செய்யப்படுவதாலும் உலக பருவநிலை மாற்றத்தினாலும், செல்லப் பிராணியாக வளர்ப்பதற்காக இவை பிடிக்கப்படுவதாலும் கடந்த 30 ஆண்டிற்கு முந்தைய நிலையை ஒப்பிட்டுப் பார்க்கும்போது இக்கிளிகளின் எண்ணிக்கை மிகவும் அருகி வருகிறது.

மேற்குறிப்பிட்ட கிளியினத்தில் Blue Rumped Parrot மற்றும் Long Tailed Parakeet ஆகிய கிளிகளை அழிந்துவரும் விலங்குகள் பட்டியலில் சேர்த்துள்ளனர். மற்ற கிளிகளும் அழிந்து கொண்டே வருகின்றன. மலைநாட்டின் பைங்கிளிகளின் எதிர்காலம் யார் கையில்?

-ஓகிமுகில்