கோவை-‘நீட்’ தேர்வால் சமூகநீதி மற்றும் வாய்ப்புகள் அதிகம் கிடைக்கின்றன. ஆனால், திராவிட கட்சிகள் அரசியல் ஆதாயத்துக்காக நாடகமாடுகின்றன’ என, புள்ளி விபரங்களுடன் பா.ஜ., தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ படிப்புகளுக்கான, ‘நீட்’ நுழைவு தேர்வு, 2017ம் ஆண்டு முதல் தமிழகத்தில் நடைமுறையில் உள்ளது. தமிழகத்தில் தி.மு.க., – அ.தி.மு.க., உள்ளிட்ட பல்வேறு கட்சியினர், ‘நீட்’ தேர்வை எதிர்த்து வருகின்றனர். காங்கிரஸ் மற்றும் கம்யூ., கட்சிகள், அவை ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஆதரவு கொடுத்து, தமிழகத்தில் மட்டும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.தமிழக பா.ஜ., துணை தலைவர் மற்றும் பேராசிரியர் கனகசபாபதி கூறுகையில், ”நீட் தேர்வு குறித்து சரியாக புரிந்து கொள்ள, தமிழக மருத்துவ கல்லுாரிகளில் உள்ள இடங்கள், இடப் பகிர்வு பற்றிய அடிப்படை விபரங்கள் மற்றும் நீட் தேர்வால் பயன் பெற்றவர்களின் எண்ணிக்கை குறித்து தெரிந்து கொள்வது அவசியம். இவற்றால், நீட் தேர்வு உண்டாக்கியுள்ள கள மாற்றங்களை நம்மால் அறிந்து கொள்ள முடியும்,” என்றார்.
அவர் மேலும் கூறியதாவது:தமிழக அரசு வெளியிட்டுள்ள, 2020ம் ஆண்டுக்கான மருத்துவ சேர்க்கை குறித்த ஆதாரங்களில் இருந்து, மாநிலத்திலுள்ள மொத்த மருத்துவ இடங்கள் 3,650. அகில இந்திய ஒதுக்கீடு மற்றும் ஊழியர் அரசு காப்பீட்டு நிறுவனம் மற்றும் ஐ.ஆர்.டி.டி., வாரிசுகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் 619. தமிழக மாணவர்களுக்கான பிரத்யேக இடங்கள், 3,031.அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 ஒதுக்கீடு 227 இடங்கள் மற்றும் பொது ஒதுக்கீட்டுக்கான இடங்கள், 2,804. தமிழக அரசு, 2020ம் ஆண்டு அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு உள் ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தியது. இதனால், அரசு இட ஒதுக்கீடு அடிப்படையில், பொதுப் பிரிவு – 31, பிற்படுத்தப்பட்ட பிரிவு – 27, பிற்பட்ட வகுப்பு – முஸ்லிம்கள் – 3, மிகவும் பிற்பட்ட பிரிவு – 20, பட்டியலின வகுப்பு – 17, பட்டியலின வகுப்பு அருந்ததியர் – 3, மலைவாழ் மக்கள் -1 சதவீத இடங்கள் உள்ளன.
இதன்படி மருத்துவ சீட் கிடைத்த இடங்களின் விகிதாசாரம், பொதுப்பிரிவு – 0, பிற்பட்ட பிரிவு – 34.4, பிற்பட்ட வகுப்பு முஸ்லிம் – 5.3, மிகவும் பிற்பட்ட வகுப்பு – 35.2, பட்டியலின வகுப்பு – 20.7, பட்டியலின வகுப்பு அருந்ததியர் – 3.5, மலைவாழ் மக்கள் – 1 சதவீதம்.மாநில அரசின் அரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு வாயிலாக சமூகத்தின் பின் தங்கிய மற்றும் பட்டியலின பிரிவுகளை சேர்ந்த மாணவர்கள் முழு பலன்களையும் பெற்றுள்ளனர்.பொதுப்பிரிவு மாணவர்கள் யாருக்கும், இடங்கள் செல்லவில்லை. பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின வகுப்பு மாணவர்கள் அதிகளவில் மருத்துவ படிப்புகளில் சேர்ந்து உள்ளனர். இதனால், ‘நீட்’ அறிமுகப்படுத்தப்பட்ட பின், சமூக நீதி பாதிக்கப்பட்டுள்ளது என்ற வாதம் முற்றிலும் தவறு.தமிழக மாணவர்கள் அகில இந்திய அளவில், முதல் முறையாக எட்டாவது இடத்தை பிடித்துள்ளனர். இதுபோன்று பல்வேறு நல்ல விஷயங்கள் நடந்து வருகின்றன.
ஆனால், ‘நீட்’ தேர்வால் நடக்கும் சமூகநீதி மற்றும் சம வாய்ப்புகளை மக்களிடம் சொல்லாமல், திராவிட கட்சிகள் மற்றும் இங்குள்ள அமைப்புகள் நாடகமாடி வருகின்றன. இவற்றை புறம்தள்ளி, ‘நீட்’ தேர்வால், தமிழக மாணவர்களுக்கு என்ன நலன் என்பதை சிந்தித்து செயல்பட வேண்டும்.தமிழக தேர்ச்சி அதிகரிப்புகனகசபாபதி கூறியதாவது: பிளஸ் 2 மதிப்பெண் வைத்து, மருத்துவ சேர்க்கை செய்யும் நடைமுறை, 2016ம் ஆண்டு வரை தொடர்ந்து வந்தது. அதில், மொத்தமாக அந்த காலக்கட்டம் முழுதும் மாநிலத்தில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், 213 பேர் மட்டுமே. அதாவது, மருத்துவ படிப்பில் சேர்ந்த மாணவர்களின் ஆண்டு சராசரி, 19 பேர் தான்.
அது மருத்துவ படிப்பு மாணவர்களின் மொத்த எண்ணிக்கையில், 0.7 சதவீதம். முன்பெல்லாம் மாணவர்களுக்கு பிளஸ் 2 பாடங்களை முழுமையாக கற்று கொடுக்காமல், ‘ப்ளூ பிரின்ட்’ மூலம் குறிப்பிட்ட பகுதிகளை மட்டுமே மாணவர்கள் மனப்பாடம் செய்து மதிப்பெண்களை பெற்றனர். ஆனால், நீட் தேர்வு வந்த பின் நம் மாணவர்கள் அதற்கு தயாராக துவங்கி விட்டனர். அரசும் அதற்கான பயிற்சிகளை அளிக்கிறது. ‘நீட்’ தேர்வு வந்த பின், தமிழக மாணவர்கள் ஆண்டுதோறும் அதிக எண்ணிக்கையில் பரீட்சையில் பங்கு பெற்று, தேர்ச்சி பெறுகின்றனர். 2020ம் ஆண்டு நடந்த தேர்வில் தேசிய அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள், 56.44 சதவீதம். ஆனால், தமிழக சதவீதம், 57.44. கடந்த 2019ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, ஒரே ஆண்டில் தமிழக மாணவர்கள் தேர்ச்சி, 9 சதவீதம் உயர்ந்து உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
dinamalar