மணாலியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
கொரோனா அபாயம் இருப்பதால் சுற்றுலா, யாத்திரை, மத நிகழ்வுகளில் பங்கேற்பதற்கு சில மாதங்கள் காத்திருக்கலாம் என்று இந்திய மருத்துவ சங்கம் கூறி உள்ளது.
புதுடெல்லி: இந்தியாவில் டெல்டா வைரசின் பரவலால், கொரோனா இரண்டாவது அலை மார்ச் மாதம் தொடங்கி, தொடர் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறை, தடுப்பூசி பற்றாக்குறை என்று பல்வேறு சவால்களை இந்திய மருத்துவத்துறை சந்தித்தது.
தற்போது கொரோனா பரவல் வெகுவாக குறைந்துள்ளது. எனவே, அனைத்து மாநில அரசுகளும் தொடர்ந்து தளர்வுகளை அறிவித்து வருகின்றன. கொரோனாவின் மூன்றாவது அலை ஏற்படும் என்று முன்பே அறிவுறுத்தப்பட்ட நிலையில், தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால், பொதுமக்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றுவதில்லை.
தடுப்பூசி போடும் பணி
இந்நிலையில், விதிகளை பின்பற்றாமல் மக்கள் கூடுவதால் கொரோனாவின் மூன்றாம் அலை மிகவும் வேகமாக ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
‘இதுவரை சர்வதேச அளவில் தொற்று குறித்து நமக்கு கிடைக்கும் சான்றுகளை வைத்து பார்த்தால், மூன்றாவது அலை தவிர்க்க முடியாதது, உடனடியாக வரும். சுற்றுலா, யாத்திரை, மத நிகழ்வுகள் அனைத்தும் தேவைதான். ஆனால், இன்னும் சில மாதங்கள் காத்திருக்கலாம். தடுப்பூசி முழுமையாக போடப்படாமல், இந்த சடங்கு சம்பிரதாயங்களுக்கு அனுமதித்து, மக்களை தடையின்றி கூட்டமாக செல்ல அனுமதிப்பது, கொரோனா மூன்றாம் அலை பரவலுக்கு வழிவகுக்கும்’ என்று இந்திய மருத்துவ சங்கம் கூறி உள்ளது.
maalaimalar