தடுப்பூசியை வீணடிக்காமல் கையாண்டதில் தமிழ்நாடு முதலிடம்: மத்திய அரசு

புது டில்லி: மே 1 முதல் ஜூலை 13 வரை தடுப்பூசி போட்டதில், கொடுத்த அளவை வீணாக்காமல் அதிலிருந்து கூடுதல் நபர்களுக்கு தடுப்பூசி போட்டு தமிழ்நாடு, மேற்கு வங்கம், குஜராத் ஆகிய மாநிலங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளன.

தடுப்பூசி திட்டம் பற்றி பாராளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு தனது பதிலில் கூறியதாவது: 41 லட்சம் கூடுதல் டோஸ்கள் குப்பிகளிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு பல்வேறு மாநிலங்களால் பயன்படுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாட்டால் 5.88 லட்சம் கூடுதல் டோஸ்கள் எடுக்க முடிந்தது. மேற்கு வங்கம் 4.87 லட்சமும், குஜராத் 4.62 லட்சம் கூடுதல் டோஸ்களையும் செலுத்தியுள்ளன. பீகாரில் அதிகபட்சமாக 1.26 லட்சம் தடுப்பூசி வீணடிக்கப்பட்டது. இது நாட்டில் வீணடிக்கப்பட்ட அளவில் பாதி.

ரூ.9725.15 கோடி செலவு

கோவிட் தடுப்பூசி திட்டத்திற்கான ரூ.35,000 கோடி பட்ஜெட்டில், தடுப்பூசி கொள்முதலுக்கு ரூ. 8071 கோடி மற்றும் செயல்பாட்டு செலவு என இதுவரை ரூ.9725.15 கோடி செலவிடப்பட்டுள்ளது. 2021 டிசம்பர் வரை 100.6 கோடி டோஸ்கள் வழங்குவதற்கு ஆர்டர்கள் தரப்பட்டுள்ளன. 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு 2021 டிசம்பருக்குள் தடுப்பூசி போட எதிர்பார்க்கிறோம். தொற்றுநோயின் மாறும் தன்மையினால் தற்போது எந்த காலக்கெடுவையும் குறிப்பிட முடியாது.

ஒப்பந்தம் தாமதமாகவில்லை

உள்நாட்டு தடுப்பூசி உற்பத்தியாளர்களுடன் கொள்முதல் ஒப்பந்தம் செய்ய தாமதம் ஏற்படவில்லை. உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்ட ஆர்டர்களுக்கு முன்கூட்டியே பணம் செலுத்தப்பட்டது. 100.6 கோடி டோஸ் ஆர்டர்களில் 64.1 கோடி டோஸ்கள் கோவிஷீல்ட், 36.5 கோடி டோஸ்கள் கோவாக்சின். ஜூலை 20 நிலவரப்படி, நாடு முழுவதும் தடுப்பூசி திட்டத்தில் 42.52 கோடி கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் டொஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு கூறியுள்ளது.

dinamalar