18 வயதுக்கு குறைவான சிறுவர்களுக்கு செப்டம்பரில் தடுப்பூசி- மத்திய அரசு விரைவில் அறிவிக்கிறது

கொரோனா தடுப்பூசி

இந்தியாவில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 43.87 கோடி டோஸ் தடுப்பூசிகளை மத்திய அரசு வினியோகம் செய்துள்ளது.

கொரோனா வைரஸ்புதுடெல்லி: நாடு முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா தொற்று பரவி கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா 2-வது அலை பரவி மே மாதத்தில் உச்சத்தை தொட்டது. அப்போது இந்தியா முழுவதும் தினமும் 4 லட்சத்துக்கும் மேலானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

தற்போது தினசரி பாதிப்பு 35 ஆயிரமாக குறைந்து கொரோனா தொற்று கட்டுக்குள் உள்ளது. கொரோனாவை தடுக்க கடந்த ஜனவரி மாதம் 16-ந்தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள், முன்கள பணியாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடப்பட்டது.

அதன்பிறகு 60 வயது மேற்பட்டவர்களுக்கும், அதனைத் தொடர்ந்து 45 வயது மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது. தற்போது 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்குமே தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த கோவிஷீல்டு, கோவேக்சின் மற்றும் ஸ்புட்னிக்-வி ஆகிய 3 தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவை தற்போது பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகின்றன.

இது தவிர மாடர்னா உள்ளிட்ட சில தடுப்பூசிகளை கொண்டு வரவும் ஆலோசனை நடந்து வருகிறது. இந்தியாவில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 43.87 கோடி டோஸ் தடுப்பூசிகளை மத்திய அரசு வினியோகம் செய்துள்ளது.

இவற்றில் இதுவரை 41 கோடியே 12 லட்சத்து 30 ஆயிரத்து 353 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதுபோக மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிடம் 2.75 கோடி தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.

மேலும் 71 லட்சத்து 40 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகளை வினியோகிக்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டு உள்ளது. தடுப்பூசி திட்டத்துக்காக மட்டும் மத்திய அரசு இதுவரை ரூ.9,725 கோடி செலவழித்துள்ளது. ஆகஸ்டு முதல் டிசம்பர் மாதங்களுக்குள் 135 கோடி டோஸ் தடுப்பூசி வழங்குவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 18 வயதுக்கு குறைவானவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளது. இதற்காக பல கட்டமாக ஆய்வுகள் நடந்து வருகிறது. கொரோனா 3-வது அலை வரும் சூழ்நிலையில் முதியவர்களை காப்பாற்றுவதற்காக சிறுவர்-சிறுமிகளுக்கு தடுப்பூசி போட வேண்டிய கட்டாய சூழ்நிலை நிலவுகிறது.

இது தொடர்பாக மருத்துவ பத்திரிகையான லேன் சர்ட் ஆய்வு ஒன்றை நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில், “11 வயது முதல் 13 வயதுள்ள சிறுவர்களுக்கு தடுப்பூசி போடாவிட்டால் அவர்கள் மூலம் முதியவர்களுக்கு 18 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை கொரோனா பரவ வாய்ப்பு உள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

அதாவது பல்வேறு பகுதிகளில் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டுள்ளதால் பள்ளிக்கு சென்று வரும் சிறுவர்கள் மூலம் முதியவர்களுக்கு கொரோனா தொற்று பரவ வாய்ப்பு உள்ளது. எனவே 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தலைவர் டாக்டர் ரன்தீப் குலேரியா இன்று காலை நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த ஆண்டு இறுதிக்குள் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடுவதை அரசு நோக்கமாக கொண்டுள்ளது.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முதலில் தொற்று பரவலை உடைப்பது அவசியம். அதே நேரத்தில் குழந்தைகளையும் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்க வேண்டும். அப்போதுதான் கொரோனா தொற்று 3-வது அலையை தடுக்க முடியும். இதற்காக தடுப்பூசி போடுவதை அதிகரிக்க வேண்டும். 18 வயதுக்கு கீழே உள்ள சிறுவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான ஆய்வு நடந்து வருகிறது.

பாரத் பயோடெக் நிறுவனத்தின் ஆய்வு ஆகஸ்டு அல்லது செப்டம்பர் மாதம் முடிந்து விடும். அதற்கு உடனே ஒப்புதல் கிடைக்க வேண்டும்.

அமெரிக்காவின் பைசர் நிறுவனத்தின் தடுப்பூசியை சிறுவர்களுக்கு போட ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. எனவே செப்டம்பர் மாதம் முதல் சிறுவர்களுக்கு தடுப்பூசி போடுவதை தொடங்க வேண்டும். அதுதான் கொரோனாவை கட்டுப்படுத்தும் பணிக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். எனவே செப்டம்பர் மாதம் முதல் மத்திய அரசு 18 வயதுக்கு கீழே உள்ள சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை தொடங்கி விடும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

தேசிய நிபுணர் குழு தலைவர் டாக்டர் என்.கே. அரோரா கூறுகையில், “18 வயதுக்கு கீழே உள்ள சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் செப்டம்பர் மாதத்தில் தொடங்கும்.

கோவேக்சின் 3-வது கட்ட சோதனை செப்டம்பர் இறுதிக்குள் முடிந்து விடும் என்று நினைக்கிறேன். எனவே செப்டம்பர் அல்லது ஜனவரி-பிப்ரவரி மாத தொடக்கத்தில் நாம் 2 வயது முதல் 18 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு தடுப்பூசி போட முடியும் என நினைக்கிறேன்” என்றார்.