‘பாகிஸ்தானும், சீனாவும் பயப்பட கார்கில் போர் வெற்றியே காரணம்’ ; அண்ணாமலை

சென்னை : ”கார்கில் போரில் காட்டிய, நம் நாட்டின் வீரத்தை பார்த்து, இன்றளவும் பாகிஸ்தானும், சீனாவும் பயப்படுகின்றன,” என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

கார்கில் போர் வெற்றி தினம், சென்னை, தி.நகரில் உள்ள தமிழக பா.ஜ., அலுவலகமான கமலாலயத்தில், நேற்று நடந்தது. அதில், போரில் உயிர் தியாகம் செய்தவர்களின் புகைப்படங்களுக்கு, அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர் இல.கணேசன் அஞ்சலி செலுத்தினர். பின், அண்ணாமலை பேசியதாவது:இந்திய சரித்திரத்தில், 1999ம் ஆண்டு முக்கியமான நிகழ்வு. பிரதமராக வாஜ்பாய் இருந்தபோது, 1998ல், வெற்றிகரமாக அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டது.

பின், இந்தியா சக்தி வாய்ந்த நாடாக மாறியது. உலக நாடுகள் அனைத்தும், இந்தியா மீது கண் வைத்திருந்தன. பாகிஸ்தான் – இந்தியா இடையில் நல்ல நட்பை வளர்ப்பதற்காக, 1999ல், வாஜ்பாய், அமிர்தசரசில் இருந்து லாகூர் வரை, பஸ் பயணம் சென்று வந்தார்.மற்றொரு புறம், பாகிஸ்தான் திட்டம் போட்டு, தன் நாட்டு ராணுவ வீரர்களை, ஆடு மேய்ப்பவர்களை போல், கார்கில் பகுதியின் உச்சிக்கு அனுப்பியது.இது, நமக்கு தெரிந்ததும் போர் மூண்டது. அதில், இரண்டு லட்சம் இந்திய வீரர்கள் பங்கேற்றனர்.

கார்கில் போரில் நாட்டிற்காக, 527 பேர் உயிரை கொடுத்துள்ளனர்.அவர்களை இன்று கவுரவிக்கிறோம். போரின் போது, உச்சியில் இருந்து தாக்கினால், கீழே இருப்பவருக்கு பாதிப்பு ஏற்படும்.இதனால், நம் உயிர் எப்போது வேண்டுமானாலும் போகும் என்று தெரிந்து, நம் நாட்டு வீரர்கள் போரில் பங்கேற்றனர். பாகிஸ்தானுக்கு பல நாடுகள் உதவி செய்தன. இந்தியா தன்னந்தனியாக போரை சந்தித்து, வெற்றி பெற்றது. இதுதான், கார்கில் போரின் விசேஷம். இறந்த ஒவ்வொருவருக்கும் சரித்திரம் உண்டு. அன்று காட்டிய, நம் நாட்டின் வீரத்தை பார்த்து, பாகிஸ்தான், சீனாவும் இன்றவும் பயப்படுகின்றன.

உலகின் இரண்டாவது ராணுவம், நம் நாட்டில் உள்ளது.எதற்கு பயப்படாத துணிவுமிகுந்த பிரதமர் நரேந்திர மோடி உள்ளார். இதனால், உலக நாடுகள், இந்தியாவை பார்த்து பயப்படுகின்றன. தமிழக மண்ணிலே, தேசியம் என்ற வார்த்தை, மூளை முடுக்கெல்லாம் செல்ல வேண்டும். தமிழக சட்டசபையில், ‘ஜெய்ஹிந்த்’ என்ற வார்த்தை, கவர்னர் உரையில் கூறப்படவில்லை. உண்மையான தேசியம் மக்களுக்கு வரட்டும்.போலி சித்தாந்தத்தை வைத்து, பிரித்தாளும் சூழ்ச்சியை கையாண்டு வருகின்றனர். அதற்கு இடம் தரக்கூடாது.இவ்வாறு, அவர் பேசினார்.

இல.கணேசன் பேசியதாவது: நம் நாட்டு ராணுவ வீரர்கள் திறமைசாலிகள்; கார்கில் போரில், பாகிஸ்தான் பின்வாங்குவதை தெரிந்து, அந்நாட்டின் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரிப், அமெரிக்கா சென்று அந்நாட்டு அதிபரின் உதவியை நாடினர்.அவரிடம், ‘என் நாட்டில் ஒரு பாகிஸ்தான் வீரர் இருக்கிற வரை, போரை நிறுத்துவதாக இல்லை.சமாதான பேச்சுக்கு இடமிவில்லை’ என, வாஜ்பாய் திட்டவட்டமாக கூறினார். அந்த உறுதியான நிலைப்பாட்டால், இந்தியா, கார்கில் போரில் முழு வெற்றி பெற்றது.இவ்வாறு அவர் பேசினார்.

dinamalar