எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் முன்னெடுத்த முதல் திமுக எதிர்ப்பு போராட்டம் – எவ்வளவு தாக்கும் இருந்தது?

தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வருவதற்காக தேர்தலின்போது பொய்யான வாக்குறுதிகளை திமுக அளித்ததாகக் குற்றம்சாட்டியிருக்கிறார் தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி.

தமிழ்நாடு முழுவதும், தேர்தல் வாக்குறுதிகளை ஆளும் திமுக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

பல இடங்களில் அதிமுகவினர் தங்களுடைய வீடுகளின் முன்பாக கட்சிக் கொடி ஏந்தியவாறும் சிலர் பொது இடங்களில் கூடியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்த எடப்பாடி பழனிசாமி, “தேர்தல் நேரத்தில் தற்போது மாநிலத்தில் ஆளும் திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அதை அந்த கட்சி நிறைவேற்ற வேண்டும் என அதன் கவனத்தை ஈர்க்கவே இந்த ஆர்ப்பாட்டத்தை அதிமுக நடத்துகிறது,” என்றார்.

நீட் தேர்வு, கல்விக்கடன் ரத்து, குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை, டீசல் விலை குறைப்பு உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. ஆனால், எதையும் அந்த கட்சி நிறைவேற்றவில்லை என்று குறிப்பிட்டார் எடப்பாடி பழனிசாமி.

இதேபோல, தேனி மாவட்டம் போடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அதிமுக ஒருங்கிணைப்பாளரும் அந்த தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ஓ. பன்னீர்செல்வம், “திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்த 55 வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. தமிழகத்தில் ஜனநாயகத்துக்கு விரோதமாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது. தமிழக நிதியமைச்சராக நான் இருந்தபோது பதவியில் இருந்த அதே நிதித்துறை செயலாளர் தான் இப்போதும் பொறுப்பில் இருக்கிறார். நான் எவ்வாறு செயலாற்றினேன் என அவருக்கு தெரியும். அது பற்றி தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் என்ன கேள்வி கேட்டாலும் பதிலளிக்கத் தயார்,” என்று கூறினார்.

சென்னை ராயபுரத்ததில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், “அண்ணே, அண்ணே, ஸ்டாலின் அண்ணே….நம்ம ஊரு நல்ல ஊரு, இப்ப ரொம்ப கெட்டு போச்சுண்ணே” என பாட்டு பாடி பொதுமக்களின் கவனத்தை ஈர்க்க முற்பட்டார்.

தமிழக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, செங்கோட்டையன், முன்னாள் சபாநாயகர் தனபால் உள்ளிட்ட பலரும் அவரவர் வீடுகளின் முன்பாக நின்று கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த போராட்டங்கள் தொடர்பான படங்களையும் அவர்கள் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தனர்.

கோவை குனியாமுத்தூர் பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, “ஆட்சிக்கு வந்த பிறகு வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசு, மக்களின் கவனத்தை திசை திருப்ப முன்னாள் அமைச்சர்களை இலக்கு வைத்து லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி அச்சுறுத்தப் பார்க்கிறது,” என்று குற்றம்சாட்டினார்.

(நன்றி பி.பி.சி)