புதுடெல்லி: ஜம்மு – காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பியதும் மீண்டும் அதற்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த 370-வது சட்டப்பிரிவை மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு நீக்கியது. மேலும், ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தை காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு அங்கு கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து, காஷ்மீரில் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. பிறகு, நிலைமை ஓரளவு சீரானதை அடுத்து படிப்படியாக கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டன.
இதனிடையே, காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என அங்குள்ள கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் சிவசேனா எம்.பி. பிரியங்கா சதுர்வேதி நேற்று கேள்வியெழுப்பினார். இதற்கு பதிலளித்த மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய், “ஜம்மு – காஷ்மீரில் இயல்பு நிலை முழுமையாக திரும்பிய பிறகு அதற்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும்’’ என்றார்.
(நன்றி Hindu tamil)