சார்பட்டா பரம்பரை

நடிகர்                 ஆர்யா

நடிகை                துஷாரா விஜயன்

இயக்குனர்            பா ரஞ்சித்

இசை                 சந்தோஷ் நாராயணன்

ஓளிப்பதிவு            ஜி முரளி

1970-களில் வட சென்னையில் குத்துச் சண்டை மிகப் பெரிய விளையாட்டாகவும் கவுரவமாகவும் பார்க்கப்படும் காலக்கட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது சார்பட்டா பரம்பரையின் கதைக்களம்.

அந்த காலக்கட்டத்தில் சார்பட்டா பரம்பரைக்கும், இடியாப்ப பரம்பரைக்கும் இடையில் தான் போட்டா போட்டி நடைபெறுகிறது. இடியாப்ப பரம்பரையின் வேம்புலி, சார்பட்டாவின் பாக்ஸர்களை அடித்து துவம்சம் செய்யும் போது என்ட்ரி கொடுக்கிறான் கபிலனாக நடித்திருக்கும் ஆர்யா.

எந்த குத்துச் சண்டையை தன் தாய் வேண்டாம் என்கிறாரோ அதே குத்துச் சண்டையின் முக்கியமான போட்டியில் விளையாடும்படி கபிலனின் சூழல் மாறுகிறது. ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன், குத்துச் சண்டையில் ஜெயித்துவிடக் கூடாது என்று வெளி அழுத்தமும், ‘பாக்ஸிங் மட்டும் கூடவே கூடாதுனு’ சொல்ற அம்மாவினால் வீட்டுக்குள்ளே இருக்கும் அழுத்தமும் கபிலன் எனும் காட்டாற்றை அடக்க முயல்கிறது.

ஆனால் தன் மனைவி மாரியம்மாவின் முழு ஆதரவும் கபிலனுக்கு கிடைக்கிறது. சார்பட்டா பரம்பரையின் ஆதரவும் அவருக்கு முழுதாக கிடைக்கிறது. ஆனாலும் சூழ்ச்சிகளால் அவனின் வெற்றிப் பறிக்கப்படுவதால் குடி போதைக்கு அடிமையாகிறான் கபிலன். அதிலிருந்து மீண்டு வருகிறானா?, தன் உயிரினும் மேலான குத்துச் சண்டையில் ஜெயித்து பரம்பரையின் கவுரவத்தை நிலைநாட்டுகிறானா? என்பதை அதிரடி சண்டைக் காட்சிகளுடன் சொல்லியிருக்கிறது சார்பட்டா.

நான் கடவுள், மகாமுனி என்று ஆர்யா இதற்கு முன்னர் பல்வேறு வித்தியாச முயற்சிகளை மேற்கொண்டாலும், அவருக்கு அதற்கான அங்கீகாரமும் வெற்றியும் கிடைத்ததா என்பது கேள்விக்குறியே. ஆனால் சார்பட்டா பரம்பரைக்கு அவர் உடலளவிலும் மனதளவிலும் சந்தித்த மாற்றங்களை நினைத்தாலே புல்லரிக்கிறது.

ஒவ்வொரு ஃபிரேமிலும் ஆர்யாவின் நடிப்பு தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த நடிப்பின் உச்சம் என்று சொன்னால் அது மிகையாகாது. இந்தப் படத்திற்கு ஆர்யாவுக்கு எத்தனை விருதுகள் கொடுத்தாலும் தகும். சண்டைக் காட்சிகள் மட்டுமல்லாமல் உணர்வுகளை துள்ளியமாக வெளிப்படுத்தும் காட்சிகளிலும் ஸ்கோர் செய்கிறார்.

மாரியம்மாவாக நடித்திருக்கும் கதாநாயகி துஷாரா, ஆர்யாவுக்கு இணையாக ரொமான்ஸ் சீன்களிலும், எமோஷனல் சீன்களிலும் பளிச்சிடுகிறார். ராயன் வாத்தியார் கேரக்டரில் வரும் பசுபதியின் கம்பீரம், ஆர்யாவையும் தாண்டி மேலோங்குகிறது. மேலும் கலையரசன், ஜான் விஜய், அனுபாமா குமார், மாறன் என ஒவ்வொரு கேரக்டரிலும் அவ்வளவு டீடெய்லிங் செய்திருக்கின்றனர்.

தற்போது தமிழகத்தில் பெரிதாக இருக்கும் அரசியல் கட்சிகளின் கடந்த காலத்தை எந்தவித சமரசமுமின்றி பதிவு செய்ததற்கு படக்குழுவுக்கு ஒரு சல்யூட். பிரபல பாக்ஸர் முகமது அலி, வட சென்னையிலிருந்து வரும் குத்துச் சண்டை வீரர்களுக்கு எவ்வளவு பெரிய ஆதர்சமாக இருக்கிறார் என்பதை படம் நெடுகிலும் காட்சிப்படுத்தியுள்ளது அற்புதம்.

பா.இரஞ்சித்தின் ‘அட்டக்கத்தி’, ‘மெட்ராஸ்’ போன்ற படங்கள் வரிசையில் இந்தப் படமும் அவரது சினிமா வாழ்க்கையில் தனி முத்திரைப் பதித்துள்ளது. அவருக்கு மிகவும் பரிட்சியமான வடசென்னை வாழ்க்கைச் சூழலில் படத்தை உருவாக்கியிருப்பதால் குறைகள் சொல்ல தேட வேண்டியுள்ளது.

சந்தோஷ் நாரயணின் இசையும், ஜி முரளியின் ஒளிப்பதிவும் படத்தின் மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.

குத்துச் சண்டையில் அதிக அனுபவம் இல்லாத ஹீரோ, திடீரென்று அனைவரையும் அடித்து துவம்சம் செய்வது, விரைவாக கம்-பேக் கொடுப்பது, கிளைமேக்ஸில் அடி வாங்கி பின்னால் அடித்து மாஸ் காண்பிப்பது என்பது இதற்கு முன்னால் வந்த குத்துச் சண்டை படங்களின் நீட்சியாகவே இருப்பது சற்று அலுப்புத் தட்டுகிறது.

மொத்தத்தில் சார்பட்டா பரம்பரை – தவிர்க்க முடியாத வெற்றி.

maalaimalar