திட்டம் இரண்டு

நடிகர்     சுபாஷ் செல்வம்

நடிகை    ஐஸ்வர்யா ராஜேஷ்

இயக்குனர் விக்னேஷ் கார்த்திக்

இசை     சதிஷ் ரகுநாதன்

ஓளிப்பதிவு     கோகுல் பெனாய்

போலீஸ் அதிகாரியாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், திருச்சியில் இருந்து சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்படுகிறார். இதற்காக ஊரில் இருந்து வரும் போது, நாயகன் சுபாஷ் செல்வத்தை பஸ்சில் சந்திக்கிறார். இவர்களின் பழக்கம் காதலாக மாறுகிறது. ஐஸ்வர்யா ராஜேஷ் சென்னையில் பணிக்கு சேர்ந்த சமயம், அவரின் நெருங்கிய தோழி காணாமல் போகிறார்.

இதை விசாரிக்க ஆரம்பிக்கும் போது, தோழி விபத்தில் இறந்ததாக தகவல் கிடைக்கிறது. ஆனால் இது கொலை என்று நினைக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், கொலையாளியை தேட ஆரம்பிக்கிறார். அப்போது அவருக்கு பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கிறது. இறுதியில் கொலையாளி யார்? எதற்காக கொலை செய்தார்? என்பதை ஐஸ்வர்யா ராஜேஷ் கண்டுபிடித்தாரா? அவரின் காதல் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், வழக்கம் போல் தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். படம் ஆரம்பத்தில் சிரித்து ரசிகர்களை கவரும் ஐஸ்வர்யா ராஜேஷ், பின்னர் சீரியஸாகவும் கவர்ந்திருக்கிறார். போலீஸ் அதிகாரிக்கு உண்டான அதிரடி இல்லையென்றாலும், ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பால், பார்ப்பவர்களை கதைக்குள் கொண்டு செல்கிறார். போலீஸ் உடையில் அழகாக இருக்கிறார்.

ஐஸ்வர்யா ராஜேஷின் காதலராக வரும் சுபாஷ் செல்வம், கிளைமாக்சில் அதிர்ச்சி கொடுக்கிறார். பாவல் நவகீதனின் வேடம் சிறியதாக இருந்தாலும், படத்தின் திருப்புமுனையாக இருக்கிறது. மேலும் ஜீவா ரவி, கோகுல் ஆனந்த், முரளி ராதாகிருஷ்ணன் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.

இயக்குனர் விக்னேஷ் கார்த்திக், வித்தியாசமான கதையை அழகாக சொல்லி இருக்கிறார். படம் முழுவதும் யூகிக்க வாய்ப்பு கொடுத்து, நழுவியது அபாரம். பிளாஷ்பேக் கதைக்கான மெனக்கெடலும், அதை சர்ச்சைக்கு இடமின்றி சொன்ன விதமும் அற்புதம். முற்றிலும் எதிர்பாராத கிளைமாக்ஸ் கொடுத்து, அழுத்தமான கருத்தை சொல்லி இருக்கிறார். மெதுவாக செல்லும் திரைக்கதை, லாஜிக் மீறல்கள் இருந்தாலும் பெரியதாக தெரியவில்லை.

கோகுல் பெனாயின் ஒளிப்பதிவும், சதிஷ் ரகுநாதனின் இசையும் எளிமையாக இருந்தாலும், கதாப்பாத்திரங்களைப் போல், காட்சிகளுடனே பயணித்துள்ளது.

மொத்தத்தில் ‘திட்டம் இரண்டு’ சக்சஸ்.

maalaimalar