தருமபுரி மாவட்டம் மாரவாடி அடுத்த மத்திமரத்துப்பட்டி கிராமத்தில் விவசாய நிலத்தை அழிக்கும் வகையில் கழிவுநீர் கால்வாய் அமைத்து உள்ள விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெட்ரோல் ஊற்றி பெண் தீக்குளிக்க முயன்றார். அவரை தடுத்து நிறுத்திய போலீசார் அதிகாரிகளிடம் அழைத்து சென்று மனு அளிக்க செய்தனர்.
தருமபுரி மாவட்டம் மாரவாடி அடுத்த மத்திமரத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்த குணசேகரன் என்பவர் தனக்குச் சொந்தமான சுமார் 50 சென்ட் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்.
இந்நிலையில் இவரது நிலத்திற்கு அருகில் உள்ள பகுதிகளில் விவசாய நிலங்களை நில விற்பனையாளர்கள் வாங்கி, தற்பொழுது புதிதாக வீட்டு மனைகள் அமைத்து உள்ளனர்.
இந்த வீட்டு மனைகளுக்கு சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் வசதி ஏற்படுத்தியுள்ளனர். இந்த கழிவு நீர் முழுவதும் அருகில் உள்ள குணசேகரன் விவசாய நிலத்தில் வெளியேறுகின்ற வகையில் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக தருமபுரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் இந்த வீட்டுமனை அமைந்துள்ள இடங்களில் இருந்து வெளியேறும் தண்ணீர், கழிவுநீர் கால்வாய் வழியாக குணசேகரன் விவசாய நிலத்தில் தேங்குகிறது.
இதனால் மண் அரிப்பு ஏற்பட்டு அந்த நிலத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இதுகுறித்து விவசாயி குணசேகரன் வட்டாட்சியர், கோட்டாட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார். ஆனால் இது தொடர்பாக விசாரணை மற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.
இதனால் மனமுடைந்த விவசாயி குணசேகரன் தனது குடும்பத்தினருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தார். அப்பொழுது திடீரென விவசாயி குணசேகரனின் மனைவி உடலின் மீது பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்தார்.
அப்பொழுது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காவல் துறையினர் அவரை மீட்டு விசாரணை நடத்தினர். அப்பொழுது தங்களது வாழ்வாதாரமாக உள்ள விவசாய நிலத்தை அழிக்கும் வகையில் கழிவுநீர் கால்வாய் அமைத்து உள்ள விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
மேலும் குடும்பத்தினருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து விவசாயி குணசேகரன் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
(நன்றி Tamil samayam)