கல்வெட்டு ஆய்வாளர்களை நியமித்து தொல்லியல் துறையைப் பாதுகாக்க வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, வைகோ இன்று (ஆக. 03) வெளியிட்ட அறிக்கை:
“உலக அளவில் உள்ள கல்வெட்டுகளில் 75 விழுக்காட்டுக்கு மேலான கல்வெட்டுகள் தென்னிந்தியாவில் மட்டுமே உள்ளன. இந்தியாவில், தமிழகத்தில் மட்டுமே அதிகப்படியான கல்வெட்டுகள் உள்ளன.
தமிழகத்தில் கீழடி, கொந்தகை, சிவகளை, ஆதிச்சநல்லூர், கொடுமணல், தாமிரபரணி ஆற்றுப்படுகையில் அகழ்வாராய்ச்சியைத் தொடர்ந்து நடத்தக் கோரியும், பழங்கால அடையாளங்களைப் பாதுகாக்கக் கோரியும் பலர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
இதற்கு பதிலளித்த தொல்லியல் துறை, ஏற்கெனவே 92 பாதுகாக்கப்பட்ட புரதான இடங்கள் உள்ளன. மேலும், 54 பாதுகாக்கப்பட்ட புரதான இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளது.
இதுவரை, 11,000 கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன என்றும், இன்னும் பல கல்வெட்டுகள் படியெடுக்கப்பட வேண்டும் எனவும் கூறியது. அரசு உரிய கவனம் செலுத்தி இந்தக் கல்வெட்டுகளைப் படியெடுத்து வெளிக்கொணர வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியது.
வேலை ஆட்கள் இல்லாமல் தொல்லியல் துறை முடங்கிப்போய் உள்ளது. கண்டெடுக்கப்பட்ட 74,000 கல்வெட்டுகளைப் பிரதி எடுக்கும் பணி முழுமை பெறவில்லை. படியெடுக்கப்பட்ட கல்வெட்டுகள் முழுமையாக நூல் வடிவில் வெளிவரவில்லை.தற்போது தொல்லியல் துறையில் 758 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இதில், ஒரு பதவி கூட கல்வெட்டுத் துறைக்கு ஒதுக்கப்படவில்லை. தேசிய அளவிலும், உலக அளவிலும் அளப்பரிய சாதனைகள் நிகழ்த்தியுள்ள அர்ப்பணிப்புள்ள தொல்லியல் துறை ஆய்வாளர்கள் இந்தச் செயலைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்னர். கல்வெட்டுத்துறை ஆய்வுகள் இல்லாமல் முழுமையான வரலாறு சாத்தியம் இல்லை. எனவே, தொல்லியல் துறைக்கு தனிக் கவனம் செலுத்தி பணி நியமனங்களை உடனடியாக உருவாக்க வேண்டும்.
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் ஜெனரல் குன்னிங்காம் எனும் ஆங்கிலேயர் 1861ஆம் ஆண்டு தொல்லியல் துறையை உருவாக்கினார். இத்துறையில் 1886ஆம் ஆண்டு கல்வெட்டுத்துறை பிரிவு உருவாக்கப்பட்டது.
ஒரு இனத்தின் தொன்மையான சமூக, பண்பாட்டு வரலாற்றை ஆய்வதற்கு கல்வெட்டுச் சான்றுகளே முக்கிய இடம் வகிக்கிறது. இவ்வகையில் இந்திய வரலாற்றில் தமிழக கல்வெட்டுகளுக்கு என்று சிறப்பு உள்ளது. மைசூரில் உள்ள கல்வெட்டுப் பிரிவில் முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டு, நூல் வடிவில் வெளிவராமல் உள்ளது.
இந்நிலையில், மைசூரில் தமிழுக்கு நான்கு ஆய்வாளர்களும், சமஸ்கிருதத்துக்கு ஏழு ஆய்வாளர்களும் பணிபுரிகின்றனர். தமிழ் கல்வெட்டுகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதால் அங்கும் தமிழ் கல்வெட்டு ஆய்வாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.
கல்வெட்டுகளைப் படித்துப் பொருள் புரிந்து, வரலாற்றோடு இணைத்து நூல் வடிவில் வெளியிடும் திறமை கொண்டவர்கள் அருகி வருகின்றனர். இக்காலகட்டத்தில் போர்க்கால நடவடிக்கையில் கல்வெட்டு ஆய்வாளர்களை நியமித்து தமிழ் கல்வெட்டுகளை நூல் வடிவில் வெளிக்கொணர வேண்டும்.
மிகக்குறைவான கல்வெட்டுகள் உள்ள சமஸ்கிருத மொழிக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைக்கூட, தமிழ் மொழிக்குக் கொடுக்காமல் இருப்பது மத்திய அரசு தமிழ் மொழியை வஞ்சிக்கும் செயலாகும்.
எனவே, மத்திய அரசு தொல்லியல் துறை கல்வெட்டுப் பிரிவில் உடனடியாகத் தமிழ் ஆய்வாளர்களை நியமிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்”.
இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.
(நன்றி Hindu tamil)