தமிழ்நாட்டில் அடுத்தகட்ட ஊரடங்கில் எவற்றுக்கெல்லாம் அனுமதியளிக்கப்படும், எந்த மாதிரியான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்பது குறித்து தகவல் வெளியாகி வருகிறது.
தமிழ்நாட்டில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஆகஸ்ட் 9ஆம் தேதி காலை வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்தகட்ட ஊரடங்கு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டு முக்கிய முடிவுகளை அறிவிக்க உள்ளார்.
முதல்வர் நடத்தும் ஆலோசனை!
ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டிப்பதா, தளர்த்துவதா என்பது குறித்து முடிவு செய்து அறிவிப்பதற்கு முன்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு அதிகாரிகள், மருத்துவ வல்லுநர்கள், பாதிப்பு தீவிரமாகும்போது அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொள்வார். அந்த வகையில் இன்று பகல் 12.30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஆலோசனை நடத்துகிறார்.
திடீர் ஏற்றம் தந்த ஏமாற்றம்!
கடந்தமுறை அறிவிப்பு வெளியிடும்போது பெரியளவில் தளர்வுகள் எதுவும் வழங்காமல் மேலும் ஒரு வாரம் நீட்டித்து உத்தரவிட்டார் ஸ்டாலின். பாதிப்பு இறங்குமுகத்திலிருந்து திடீரென ஏறு முகத்திற்கு திரும்பியதால் இம்முறை ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் என்கிறார்கள். இது குறித்து கோட்டை வட்டாரத்தில் விசாரித்தோம்.
40 ஆயிரத்தை எட்டுமா?
தமிழகத்தின் தினசரி கொரோனா பாதிப்பு 36 ஆயிரத்திலிருந்து படிப்படியாக குறைந்து 1700 வரை வந்தது. சமீப நாள்களாக பாதிப்பு எண்ணிக்கை ஏறுமுகத்தில் இருப்பதால் மீண்டும் 2000ஐ நெருங்கியது. இப்படியே சென்றால் செப்டம்பர் மத்தியில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டும் என்று மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர். 40 ஆயிரத்தை கடந்து பாதிப்பு பதிவாகும் என அதிர்ச்சி தகவலை வெளியிடுகின்றனர்.
தீவிர ஊரடங்குக்கு வாய்ப்பில்லை ராஜா!
தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட்ட தீவிர ஊரடங்குக்குப் பின்னர்தான் பாதிப்பு எதிர்பார்த்த அளவு குறையத் தொடங்கியது. அத்தியாவசிய பொருள்கள் கடைகள்கூட திறக்கப்படாமால் இரு வாரங்கள் தமிழ்நாடே முற்றிலும் முடங்கிப்போனது. எனவே மருத்துவ வல்லுநர்கள் சொல்வது போல் பாதிப்பு ஏற்பட்டால் அரசு மீண்டும் தீவிர ஊரடங்கை அமல்படுத்தும். ஆனால் அந்த அளவு நிலைமை மோசமடைய அரசு அனுமதிக்காது என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில்.
அரசு எடுக்கும் முயற்சி!
மே மாதம் மருத்துவ வல்லுநர்கள் கூறும்போது தினசரி பாதிப்பு 60 ஆயிரத்தை எட்டும் என்று கணித்தார்கள். பாதிப்பு வேகம் மிக அதிகமாக இருந்தது. ஆனால் அதே சமயம் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு படுக்கை வசதிகள், ஆக்சிஜன் வசதிகள் ஏற்படுத்தப்பட்டதால் 36 ஆயிரம் வரை சென்று கீழே இறங்கியது. எனவே இம்முறை 40 ஆயிரம் என வல்லுநர்கள் கூறினாலும் அரசு அந்த எண்ணிக்கைக்கு செல்ல அனுமதிக்காது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் மூலம் அதை குறைக்கும் முயற்சியை எடுக்கும் என்கிறார்கள்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!
மூன்றாவது அலைக்கு தயாராகும் விதமாக மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் தயார்படுத்தப்பட்டுள்ளன, ஆக்சிஜன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளன. மிக முக்கியமான தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே மூன்றாவது அலை பாதிப்பை குறைக்கலாம் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இருப்பினும் மக்கள் முன்னெச்சரிக்கையாக இருந்தால் மட்டுமே பாதிப்பை கட்டுப்படுத்தலாம்.
மாவட்ட வாரியாக கட்டுப்பாடுகள்!
அந்த வகையில் இன்றைய ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் முதல்வர் ஸ்டாலின் பள்ளிகள் திறப்பு, திரையரங்குகள் திறப்பு என எந்தவித புதிய தளர்வுகளையும் அறிவிக்க வாய்ப்பில்லை. அதே சமயம் முழு ஊரடங்கு அறிவித்தால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே எந்தெந்த பகுதிகளில் பாதிப்பு உள்ளதோ அங்கு மட்டும் கட்டுப்பாடுகளை அரசு அறிவிக்கும் என்கிறார்கள். ஏற்கெனவே சென்னை, கோவை, திருப்பூர், பெரம்பலூர், நாகை, வேலூர், விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்களே கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
கடைகள் திறப்பில் மாற்றம்?
எனவே முதல்வர் வெளியிடும் அறிவிப்பில் தீவிர கட்டுப்பாடுகள் எதுவும் இடம்பெறாது. போக்குவரத்து தடைபடும் படியாகவோ, அலுவலகங்கள், தொழில் நிறுவனங்கள் இயங்க முடியாமலோ எந்த அறிவிப்பும் வெளியிடப்படாது. மாநிலம் முழுவதற்குமான அறிவிப்பாக கடைகள் திறந்திருக்கும் நேரத்தில் மட்டும் இரண்டு மணி நேரம் குறைக்கப்படலாம் என்கிறார்கள்.
(நன்றி BBC)