கேரளாவில் புதிய கட்டுப்பாட்டை மீறினால் கடும் நடவடிக்கை அரசு எச்சரிக்கை

கேரளாவில் தினமும் 20 ஆயிரத்துக்கு மேல் கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது. 3-வது அலையின் ஆரம்பமா? என பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

திருவனந்தபுரம், கேரளாவில் தினமும் 20 ஆயிரத்துக்கு மேல் கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது. 3-வது அலையின் ஆரம்பமா? என பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்தநிலையில் கேரள அரசு புதிய கட்டுப்பாட்டை அறிவித்துள்ளது. அதாவது, சந்தைகள், கடைகள், வங்கிகள் வாரத்தில் திங்கள் முதல் சனி வரை 6 நாட்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு தொடரும் என்று சட்டசபையில் சுகாதாரத் துறை மந்திரி வீணா ஜார்ஜ் அறிவித்தார். மேலும் கடைகள், வங்கிகளுக்கு செல்வோர் குறைந்தது ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டவராக இருக்க வேண்டும். அல்லது 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். கொரோனா பரிசோதனை செய்து அதற்கான நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என தெரிவித்தார். இந்த புதிய உத்தரவால் வியாபாரிகள், பொதுமக்கள் குழப்பம் அடைந்தனர். எதிர்க்கட்சி தலைவர்களும் இந்த புதிய விதிமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் திருவனந்தபுரத்தில் மாவட்ட கலெக்டர் நவ்ஜோத் கோசா தலைமையில் வியாபார பிரதிநிதிகள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய விதிமுறையை பின்பற்றாதவர்களை கடை மற்றும் வங்கிகளுக்குள் அனுமதிக்க கூடாது. அரசின் உத்தரவை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் அந்தந்த மாவட்ட கலெக்டர்களும், புதிய விதிமுறைகளை அமல்படுத்த உத்தரவிட்டுள்ளனர்.

dailythanthi