தாக்குதல் முறியடிப்பு: பயங்கரவாதிகள் கைது

ஜம்மு: ஜம்மு – காஷ்மீரில் இருசக்கர வாகனம் வாயிலாக வெடிகுண்டு தாக்குதல் நடத்த முயன்ற பயங்கரவாதிகள் நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஜம்மு – காஷ்மீர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: காஷ்மீரில் சுதந்திர தினத்தன்று வாகன வெடிகுண்டு தாக்குதல் நடத்த, ஜெய்ஷ் – இ – முகமது பயங்கரவாத அமைப்பு திட்டமிட்டிருந்ததை உளவுத் துறை மோப்பம் பிடித்தது.

இதையடுத்து பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த சைபுல்லா என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு துப்பாக்கி, குண்டுகள், இரு சீன வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டன. ஆயுதங்களை காஷ்மீருக்கு கடத்த பயன்படுத்திய வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. சைபுல்லா கொடுத்த தகவல்படி, உ.பி.,யைச் சேர்ந்த சோனு கான் உள்ளிட்ட மூன்று பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.

பாகிஸ்தானிலிருந்து ஜெய்ஷ் அமைப்பின் முக்கிய பிரமுகரான முனாசிர், ஆளில்லா குட்டி விமானம் மூலம் போடப்படும் ஆயுதங்களை பயங்கரவாதிகளிடம் சேர்க்கும் பொறுப்பை சோனு கானுக்கு வழங்கியுள்ளார். அத்துடன் பானிபட் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தையும் சோனு கான் ‘வீடியோ’ எடுத்து முனாசிருக்கு அனுப்பியுள்ளார். அயோத்தி மற்றும் பல இடங்களை உளவு பார்க்கும் பொறுப்பும், சோனு கானிடம் ஒப்படைக்கப்பட்டி இருந்தது.

இடவசதி

கைது செய்யப்பட்ட மற்றொரு பயங்கரவாதியான தவுசீப் அகமது ஷா, முனாசிர் உத்தரவுப்படி ஜம்முவில் பயங்கரவாதிகள் தங்க இடவசதி செய்து தந்துள்ளார். இவருக்கு ஜம்முவில் வெடிகுண்டு வைக்க பழைய இருசக்கர வாகனம் வாங்கும் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன், தவுசீப் அகமது ஷா கைது செய்யப்பட்டுள்ளார்.

காஷ்மீரில் பழ வியாபாரியான ஜஹாங்கீர் அகமது பட், முனாசீருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்துஉள்ளார். இவர் தான், சோனு கானை முனாசீருக்கு அறிமுகப்படுத்திஉள்ளார். காஷ்மீர் மட்டுமின்றி, நாடு முழுதும் ஜெய்ஷ் பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்க்கும் பணியிலும், ஜஹாங்கீர் அகமது பட் ஈடுபட்டுள்ளார். இவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த நான்கு பயங்கரவாதிகளை தக்க சமயத்தில் கைது செய்ததால் மிகப் பெரிய சதித் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

dinamalar