புராஜெக்ட் அக்னி – நவரசா விமர்சனம்
நடிகர்: அரவிந்த்சாமி நடிகை: பூர்ணா டைரக்ஷன்: கார்த்திக் நரேன் இசை : ரான் எத்தன் யோஹன் ஒளிப்பதிவு : சுஜித் சாரங்நவரசா தமிழ் சினிமா பிரபல முன்னணி இயக்குனர்கள் இணைந்து இயக்கும் அந்தாலஜி திரைப்படம். 9 இயக்குனர்கள் இணைந்து 9 வெவ்வேறு பாகங்களாக இயக்கியுள்ளனர். “புராஜெக்ட் அக்னி” கதையின் விமர்சனம்.
படத்தின் கதைப்படி விஞ்ஞானியாக இருக்கும் அரவிந்த்சாமி இஸ்ரோவில் பணிபுரிந்து வருகிறார். தான் ஒரு அதிசயமான விஷயத்தை கண்டுபிடித்திருப்பதாகவும், அதுபற்றி பேச தனது நண்பரான பிரசன்னாவுக்கு அழைப்பு விடுக்கிறார். அவர் கண்டுபிடித்தது என்ன?, அதன் விளைவுகள் என்ன? என்பதே புராஜெக்ட் அக்னி படத்தின் மீதிக்கதை.
விஞ்ஞானியாக வரும் அரவிந்த் சாமி ஹாலிவுட் நடிகரின் பாணியில் நடித்துள்ளார். மறுபுறம் பிரசன்னா, அலட்டிக்கொள்ளாத நடிப்பில் கவனிக்க வைக்கிறார். பூர்ணா கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளார்.
நவரசத்தில் ஆச்சரியம் என்பதை மையமாக வைத்து இப்படத்தை எடுத்துள்ளார் இயக்குனர் கார்த்திக் நரேன். இந்த ‘நவரசா’ ஆந்தாலஜியில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படமாக ‘புராஜெக்ட் அக்னி’ தனித்து நிற்கிறது. இதற்கு இயக்குனர் கார்த்திக் நரேனைப் பாராட்டலாம். குறிப்பாக கிளைமாக்ஸ் டுவிஸ்ட் யாருமே எதிர்பார்க்காதது. கதைகருவுக்கு ஏற்றபடி ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.
ரான் எத்தன் யோஹனின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது. அபிநந்தன் ராமானுஜனின் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு விறுவிறுப்பை கூட்டி இருப்பதோடு, கண்களுக்கும் விருந்தாக அமைந்துள்ளது.
மொத்தத்தில் ‘புராஜெக்ட் அக்னி’ ஆச்சரியம்.
துணிந்த பின் – நவரசா விமர்சனம்
நடிகர்: அதர்வா முரளி நடிகை: அஞ்சலி டைரக்ஷன்: சர்ஜுன்.கே.எம் இசை : சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவு : சுதர்ஷன் ஸ்ரீனிவாசன்நவரசா தமிழ் சினிமா பிரபல முன்னணி இயக்குனர்கள் இணைந்து இயக்கும் அந்தாலஜி திரைப்படம். 9 இயக்குனர்கள் இணைந்து 9 வெவ்வேறு பாகங்களாக இயக்கியுள்ளனர். “துணிந்த பின்” கதையின் விமர்சனம்.
அதர்வாவும், அஞ்சலியும் புதுமணத் தம்பதி. திருமணம் முடிந்த கையோடு ராணுவத்தில் சேர்கிறார் அதர்வா. அந்த சமயத்தில் ஒரு காட்டுப் பகுதியில் நக்சலைட்டுக்கு எதிராக ராணுவ வீரர்கள் சண்டையிடுகிறார்கள். அந்த குழுவில் புதிதாக ராணுவத்தில் சேர்ந்துள்ள அதர்வாவும் இருக்கிறார். அந்த சண்டையில் நக்சலைட் கும்பலைச் சேர்ந்த கிஷோர் பிடிபடுகிறார்.
அப்போது குண்டடிபட்ட நிலையில் இருக்கும் கிஷோரை மருத்துவமனைக்கு அதர்வா அழைத்து செல்லும் சூழல் உருவாகிறது. மருத்துவமனை 30கி.மீ அப்பால் உள்ளது. இந்த பயணத்தின் போது இருவரும் தொலைந்து போகின்றனர். அவர்களுக்கு என்ன ஆனது? இறுதியில் இருவரையும் கண்டுபிடித்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகன் அதர்வா, ராணுவ வீரராக நடித்துள்ளார். அதற்கேற்ற உடல்மொழியுடன் இருப்பதால் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார் அதர்வா. நக்சலைட்டாக வரும் கிஷோர், தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் ஈர்க்கிறார். அஞ்சலி பெரிதாக காட்சிகள் இல்லாதது ஏமாற்றம் தான்.
வீரம் என்ற உணர்வை வைத்து ‘துணிந்த பின்’ என்ற கதையை இயக்கியுள்ளார் சர்ஜுன். படத்தில் சில புரட்சிகரமான விஷயங்கள் இருந்தாலும், வீரம் என்கிற உணர்வை சரியாக வெளிப்படுத்த முடியாமல் திணறி உள்ளது அப்பட்டமாக தெரிகிறது. சுந்தரமூர்த்தியின் பின்னணி இசையும், சுதர்ஷன் ஸ்ரீனிவாசனின் ஒளிப்பதிவும் அற்புதம்.
மொத்தத்தில் ‘துணிந்த பின்’ வேகமில்லை.
இன்மை – நவரசா விமர்சனம்
நடிகர்: சித்தார்த் நடிகை: பார்வதி டைரக்ஷன்: ரதீந்திரன் ஆர் பிரசாத் இசை : விஷால் பரத்வாஜ் ஒளிப்பதிவு : வீரஜ் சிங்நவரசா தமிழ் சினிமா பிரபல முன்னணி இயக்குனர்கள் இணைந்து இயக்கும் அந்தாலஜி திரைப்படம். 9 இயக்குனர்கள் இணைந்து 9 வெவ்வேறு பாகங்களாக இயக்கியுள்ளனர். “இன்மை” கதையின் விமர்சனம்.`
நடிகை பார்வதியின் கம்பெனியில் வேலை பார்க்கிறார் சித்தார்த். இவர் வேலை விஷயமாக ஒரு கையெழுத்து வாங்க பார்வதியின் வீட்டுக்கு செல்கிறார். அப்போது இருவரும் பேசிக் கொள்கின்றனர். அந்த சமயத்தில் பார்வதி இளம் வயதில் செய்த சில விஷயங்களை சித்தார்த் சொல்ல ஆரம்பிக்கிறார்.
அதைக் கேட்டு பார்வதி அதிர்ச்சி அடைகிறார். இறுதியில் சித்தார்த்துக்கு எப்படி இந்த விஷயம் தெரிந்தது என்பதை பார்வதி கண்டுபிடித்தாரா? அவர் பயப்படுவதற்கான காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
சித்தார்த்தும், பார்வதியும் இருவரும் போட்டி போட்டு நடித்து இருக்கிறார்கள். அதிலும் பார்வதியின் பழைய வாழ்க்கையைப் பற்றி சித்தார்த் சொல்லச் சொல்ல பார்வதி தவிக்கும் தவிப்பு, நடிப்பின் உச்சம். இவருக்கு இணையாக சிறு வயது பார்வதியாக வரும் அம்மு அபிராமியும் திறம்பட நடித்து இருக்கிறார்.
நவசரத்தில் ‘பயம்’ என்பதை மையமாக வைத்து இப்படத்தை எடுத்துள்ளார் இயக்குனர் ரதீந்திரன் ஆர் பிரசாத். ஒரு 30 நிமிடக் கதையில் முழு நீளப் படத்துக்கு உண்டான சுவாரசியத்தைக் கொடுத்திருக்கிறார். கதாபாத்திரங்கள் தேர்வும் கச்சிதமாக உள்ளது. விஷால் பரத்வாஜின் பின்னணி இசை கதையோடு ஒன்றி பயணிக்க வைக்கிறது. வீரஜ் சிங்கின் ஒளிப்பதிவும் கச்சிதம்.
மொத்தத்தில் ‘இன்மை’ இனிமை.
ரெளத்திரம் – நவரசா விமர்சனம்
நடிகர்: ஸ்ரீராம் நடிகை: ரித்விகா டைரக்ஷன்: அரவிந்த் சாமி இசை : ஏ.ஆர்.ரகுமான் ஒளிப்பதிவு : சந்தோஷ் சிவன்நவரசா தமிழ் சினிமா பிரபல முன்னணி இயக்குனர்கள் இணைந்து இயக்கும் அந்தாலஜி திரைப்படம். 9 இயக்குனர்கள் இணைந்து 9 வெவ்வேறு பாகங்களாக இயக்கியுள்ளனர். “ரெளத்திரம்” கதையின் விமர்சனம்.
நடிகர் ஸ்ரீராம், தங்கை மற்றும் தாயாருடன் வாழ்ந்து வருகிறார். குடும்பத்தில் வறுமை இருந்தாலும் சந்தோஷத்திற்கு பஞ்சமில்லாமல் வாழ்ந்து வருகின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் வேலை பார்க்கும் முதலாளியிடம் காசு வாங்கி வருகிறேன் என்று சொல்லிவிட்டு ஸ்ரீராமின் தாயார் செல்கிறார்.
சொன்னபடியே அவர் காசு வாங்கிக் கொண்டு வந்தவுடன் குடும்பம் மகிழ்ச்சியாக மாறுகிறது. ஒரு கட்டத்தில் தனது தாயாருக்கு எப்படி காசு கிடைத்தது என்பது ஸ்ரீராமுக்கு தெரிய வருகிறது. இதை அறிந்து அதிர்ச்சி அடையும் ஸ்ரீராம், கோபத்தின் உச்சத்துக்கு சென்று ஒரு முக்கிய முடிவை எடுக்கிறார். அது என்ன முடிவு? என்பதே படத்தின் மீதிக்கதை.
பெண் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள ரித்விகா, அதற்கு ஏற்றார் போல் மிடுக்கான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். ஸ்ரீராமுக்கு அழுத்தமான கதாபாத்திரம். அதனை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளார். கந்துவட்டிக்காரராக வரும் அழகம் பெருமாள், கே.பாலசந்தரின் மருமகள் கீதா கைலாசம் ஆகியோர் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.
‘கோபம்’ என்ற உணர்வை மையமாக வைத்து இந்த படத்தை இயக்கி உள்ளார் அரவிந்த் சாமி. இது அவருக்கு முதல் படமாக இருந்தாலும், நேர்த்தியாக இயக்கி உள்ளார். அவருக்குள் இப்படி ஒரு திறமை இருக்கிறதா என ஆச்சர்யப்பட வைத்திருக்கிறார். ரித்விகாவின் கதாபாத்திரத்தை கையாண்டுள்ள விதம் சிறப்பு. ஏ.ஆர்.ரகுமானின் பின்னணி இசையும், சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவும் படத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
மொத்தத்தில் ‘ரெளத்திரம்’ நேர்த்தி.
அமைதி – நவரசா விமர்சனம்
நடிகர்: கௌதம் வாசுதேவ் மேனன், பாபி சிம்ஹா நடிகை: நாயகி இல்லை டைரக்ஷன்: கார்த்திக் சுப்பாராஜ் இசை : சந்தோஷ் நாராயணன் ஒளிப்பதிவு : ஸ்ரேயாஸ் கிருஷ்ணாநவரசா தமிழ் சினிமா பிரபல முன்னணி இயக்குனர்கள் இணைந்து இயக்கும் அந்தாலஜி திரைப்படம். 9 இயக்குனர்கள் இணைந்து 9 வெவ்வேறு பாகங்களாக இயக்கியுள்ளனர். “அமைதி” கதையின் விமர்சனம்.`
ஈழத்தமிழர்களான கெளதம் மேனனும், பாபி சிம்ஹாவும் போர் சூழலில் எல்லையோரம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருக்கின்றனர். அந்த சமயத்தில் ஒரு சிறுவன் எல்லைப் பகுதியை கடக்க முயல்கிறான். இதைப் பார்த்த பாபி சிம்ஹா, அந்த சிறுவனைப் பிடித்து விசாரிக்கின்றார். எல்லைக்கு அப்பால் உள்ள ஒரு வீட்டில் தனது தம்பி மாட்டிக்கொண்டதாகவும், அவனை மீட்க தான் செல்வதாகவும் அந்த சிறுவன் கூறுகிறான்.
‘நீ அங்கு சென்றால் உன்னை கொன்றுவிடுவார்கள்’ என அந்த சிறுவனை எச்சரிக்கும் பாபி சிம்ஹா, அவனுக்காக ரிஸ்க் எடுக்க துணிகிறார். எல்லைக்கு அப்பால், அந்த சிறுவன் கூறிய இடத்துக்கு உயிரைப் பணயம் வைத்து செல்லும் பாபி சிம்ஹாவுக்கு அங்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. அது என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
கெளதம் மேனனும், பாபி சிம்ஹாவும் ஈழத்தமிழர்களாக நடித்துள்ளனர். வழக்கமாக ஆங்கிலம் கலந்த தமிழை பேசும் கவுதம் மேனன், இந்த படத்தில் ஈழத்தமிழை பேசி அசத்தி இருக்கிறார். பாபி சிம்ஹாவும் நேர்த்தியாக நடித்துள்ளார். சிறுவன் தருணும் இயல்பாக நடித்து அசத்தி உள்ளார்.
‘அமைதி’யை மையமாக வைத்து இப்படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். போர் சூழலில் இருக்கும் பதற்றத்தை நேர்த்தியான திரைக்கதை மூலம் திறம்பட கையாண்டுள்ளார். சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசையும், ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலமாக அமைந்துள்ளன.
மொத்தத்தில் ‘அமைதி’ அருமை.
பாயாசம் – நவரசா விமர்சனம்
நடிகர்: நடிகர் இல்லை நடிகை: அதிதி பாலன் டைரக்ஷன்: கே.வசந்த் இசை : ஜஸ்டின் பிரபாகரன் ஒளிப்பதிவு : சத்யன் சூரியன்நவரசா தமிழ் சினிமா பிரபல முன்னணி இயக்குனர்கள் இணைந்து இயக்கும் அந்தாலஜி திரைப்படம். 9 இயக்குனர்கள் இணைந்து 9 வெவ்வேறு பாகங்களாக இயக்கியுள்ளனர். “பாயாசம்” கதையின் விமர்சனம்.
டெல்லி கணேஷும், ரோகினியும் கணவன் – மனைவி. இவர்களது மகளாக அதிதி பாலன். திருமணமான 3 மாதங்களில் கணவரை இழந்து விதவை ஆகி விடுகிறார் அதிதி பாலன். மகளின் நிலைமையை நினைத்து தவித்து வருகிறார் டெல்லி கணேஷ். இந்த சமயத்தில் டெல்லி கணேஷின் அண்ணன் பேத்திக்கு திருமணம் நடக்கிறது.
தன் அண்ணன் குடும்பம் சந்தோஷமாக இருக்கக் கூடாது என்ற மனநிலையில் இருக்கும் டெல்லி கணேஷ், அந்த திருமணத்தில் வேண்டா வெறுப்புடன் கலந்து கொள்கிறார். இதையடுத்து என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.
டெல்லி கணேஷ், அதிதி பாலன், ரோகிணி ஆகியோரின் எதார்த்தமான நடிப்பு படத்திற்கு பிளஸ். விதவையாக நடித்திருக்கும் அதிதி பாலன், கதாபாத்திரத்தின் தன்மை உணர்ந்து நேர்த்தியாக நடித்துள்ளார். அவருக்கு கொஞ்சம் கூடுதல் காட்சிகள் வைத்திருக்கலாம். ஒரு கிராமத்து முதியவராக நடித்துள்ள டெல்லி கணேஷ், அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து இருக்கிறார்.
அருவருப்பு என்ற உணர்வை மையமாக வைத்து இந்த படத்தை எடுத்துள்ளார் இயக்குனர் வசந்த். 1960-களில் நடப்பது போன்று திரைக்கதையை அமைத்துள்ளார். 30 நிமிட குறும்படத்துக்காக அவரின் மெனக்கெடல் ஒவ்வொரு பிரேமிலும் தெரிகிறது. மெதுவாக நகரும் திரைக்கதை சற்று தொய்வை ஏற்படுத்துகிறது.
ஜஸ்டின் பிரபாகரின் பின்னணி இசையும், சத்யன் சூரியனின் ஒளிப்பதிவு படத்திற்கு வலுசேர்த்திருக்கிறது. குறிப்பாக படத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட லொகேஷன்கள் மிக அருமை. ஒவ்வொரு காட்சிகளிலும் ஒளிப்பதிவாளரின் நேர்த்தி மற்றும் துல்லியம் தெரிகிறது.
மொத்தத்தில் ‘பாயாசம்’ தித்திப்பில்லை.
கிட்டார் கம்பி மேலே நின்று – நவரசா விமர்சனம்
நடிகர்: சூர்யா நடிகை: பிரயாகா மார்டின் டைரக்ஷன்: கௌதம் வாசுதேவ் மேனன் இசை : கார்த்திக் ஒளிப்பதிவு : பி.சி.ஸ்ரீராம்நவரசா தமிழ் சினிமா பிரபல முன்னணி இயக்குனர்கள் இணைந்து இயக்கும் அந்தாலஜி திரைப்படம். 9 இயக்குனர்கள் இணைந்து 9 வெவ்வேறு பாகங்களாக இயக்கியுள்ளனர். “கிட்டார் கம்பி மேலே நின்று” கதையின் விமர்சனம்.
இசையமைப்பாளராக இருக்கும் சூர்யா, லண்டன் சென்று இசை மேதை ஆக வேண்டும் என்ற ஆசையில் இருக்கிறார். ஆனால் அவரது தாயார் அவருடன் வர மறுப்பதால் அவர் தன்னுடைய ஆசையை தள்ளி போட்டுக் கொண்டே வருகிறார். ஒரு கட்டத்தில் சூர்யாவின் ஆசையை புரிந்துகொண்டு அவரது தாயார் லண்டன் செல்ல சம்மதிக்கிறார்.
இந்த நிலையில், சூர்யா இசையில் பாடுவதற்கான வாய்ப்பு நாயகி பிரயாகாவுக்கு கிடைக்கிறது. அப்போது பிரயாகாவுடன் பேச ஆரம்பிக்கும் சூர்யா, அவரும் தன்னைப்போலவே லண்டன் சென்று இசையில் சாதிக்க வேண்டும் என்ற கொள்கையுடன் இருப்பதை அறிகிறார்.
இசை மீது ஆர்வம் கொண்ட இருவரும், மனம்விட்டு பேச ஆரம்பிக்கின்றனர். இது ஒரு கட்டத்தில் காதலாக மாறுகிறது. இறுதியில் அவர்கள் இருவரும் சேர்ந்தார்களா? இல்லையா? சூர்யா லண்டன் போனாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகன் சூர்யா, வாரணம் ஆயிரம் படத்தில் பார்த்ததை போன்று இளமை ததும்பும் ரொமாண்டிக் ஹீரோவாக பளிச்சிடுகிறார். அவருக்கும் பிரயாகாவிற்கும் இடையேயான காதல் காட்சிகள் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. நாயகி பிரயாகா வாயால் பேசும் வசனத்தைவிட கண்களால் பேசும் வசனம் தான் அதிகம். தமிழில் முதல் படமாக இருந்தாலும் திறம்பட நடித்து இருக்கிறார்.
‘காதல்’ என்ற உணர்வை மையமாக வைத்து இப்படத்தை எடுத்துள்ளார் கவுதம் மேனன். காதல் படம் எடுப்பதில் தான் ஒரு கிங் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். வசனங்கள் படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் ஆக அமைந்துள்ளது. கார்த்திக்கின் பின்னணி இசையும், பாடல்களும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது.
மொத்தத்தில் ‘கிட்டார் கம்பி மேலே நின்று’ மனதில் நிற்கிறது.
எதிரி – நவரசா விமர்சனம்
நடிகர்: விஜய் சேதுபதி நடிகை: நாயகி இல்லை டைரக்ஷன்: பிஜாய் நம்பியார் இசை : கோவிந்த் வசந்தா ஒளிப்பதிவு : ஹர்ஷ்வீர் சிங் ஓப்ராய்நவரசா தமிழ் சினிமா பிரபல முன்னணி இயக்குனர்கள் இணைந்து இயக்கும் அந்தாலஜி திரைப்படம். 9 இயக்குனர்கள் இணைந்து 9 வெவ்வேறு பாகங்களாக இயக்கியுள்ளனர். “எதிரி” கதையின் விமர்சனம்.
நடிகர் பிரகாஷ் ராஜும், நடிகை ரேவதியும் கணவன் – மனைவி, இவர்களின் மகனாக அசோக் செல்வன். கருத்து வேறுபாடு காரணமாக ரேவதியும், பிரகாஷ் ராஜும் நீண்ட நாட்களாக பேசிக் கொள்ளாமல் இருக்கின்றனர். இருப்பினும் ஒரே வீட்டில் தான் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், நடிகர் விஜய் சேதுபதி ரேவதியின் வீட்டுக்கு வருகிறார்.
அவரை வரவேற்று தனது அறைக்கு அழைத்து செல்கிறார் பிரகாஷ் ராஜ். அவர்கள் இருவரும் உள்ளே சென்ற சில நிமிடங்களில் அந்த அறையில் இருந்து சத்தம் கேட்கிறது. இதையடுத்து ரேவதி அந்த அறைக்கு சென்று பார்க்கும் போது பிரகாஷ் ராஜ் இறந்து கிடக்கிறார். நடிகர் விஜய் சேதுபதி எதற்காக பிரகாஷ் ராஜை கொலை செய்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர் விஜய் சேதுபதிக்கு இப்படத்தில் சற்று வில்லத்தனமான கதாபாத்திரம் தான். கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து நேர்த்தியாக நடித்துள்ளார். அதேபோல் கணவன் மனைவியாக நடித்திருக்கும் ரேவதியும், பிரகாஷ் ராஜும் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி வரும் காட்சிகளில் எல்லாம் ஸ்கோர் செய்கின்றனர். அசோக் செல்வன் குறைந்த காட்சிகளே வந்தாலும், கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளார்.
கருணை உணர்வை அடிப்படையாக கொண்டு இந்த படத்தை எடுத்துள்ளார் இயக்குனர் பிஜாய் நம்பியார். நடிகர்களை கையாண்டுள்ள விதம் சிறப்பு. திரைக்கதையில் சற்று வேகத்தை கூட்டி இருக்கலாம். கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை கதையின் ஓட்டத்திற்கு பெரிதும் உதவி உள்ளது. ஹர்ஷ்வீர் சிங் ஓப்ராய்யின் ஒளிப்பதிவு கச்சிதம்.
மொத்தத்தில் ‘எதிரி’ வேகமில்லை.
சம்மர் ஆஃப் 92 – நவரசா விமர்சனம்
நடிகர்: யோகிபாபு நடிகை: ரம்யா நம்பீசன் டைரக்ஷன்: பிரியதர்ஷன் இசை : ராஜேஷ் முருகேசன் ஒளிப்பதிவு : வீரஜ் சிங்நவரசா தமிழ் சினிமா பிரபல முன்னணி இயக்குனர்கள் இணைந்து இயக்கும் அந்தாலஜி திரைப்படம். 9 இயக்குனர்கள் இணைந்து 9 வெவ்வேறு பாகங்களாக இயக்கியுள்ளனர். சம்மர் ஆஃப் 92 கதையின் விமர்சனம்.`
படத்தின் கதைப்படி சினிமாவில் நகைச்சுவை நடிகராக இருக்கிறார் யோகிபாபு. இவர் படித்த பள்ளிக்கூடத்தில் ஆண்டு விழா நடக்கிறது. இதற்கு சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள யோகிபாபுவுக்கு அழைப்பு விடுக்கின்றனர். இதனை ஏற்று ஆண்டு விழாவில் கலந்துகொள்ள வருகிறார் யோகிபாபு. அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
அந்த விழாவில் சிறப்புரையாற்றும் யோகிபாபு, தான் பள்ளியில் படித்தபோது நடந்த சில சுவாரஸ்யமான சம்பவங்களைப் பற்றி பகிர்ந்து கொள்கிறார். யோகிபாபுவின் பள்ளிப்பருவ ஆசிரியரான ரம்யா நம்பீசன் திருமணம் செய்து கொள்ளாமலே இருந்து வருகிறார். அவர் அவ்வாறு இருப்பதற்கும் யோகிபாபுவும் ஒரு காரணம். அது என்ன காரணம்? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகன் யோகிபாபு, படத்திலும் காமெடி நடிகராக சிறிது நேரம் வந்தாலும், சிரிப்புக்கு பஞ்சம் வைக்கவில்லை. டீச்சராக வரும் ரம்யா நம்பீசன், இளம் வயது மற்றும் வயதான தோற்றம் இரண்டிலும் திறம்பட நடித்து, கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளார். யோகிபாபுவின் சிறுவயது கதாபாத்திரத்தில் வரும் சிறுவன், கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து நடித்துள்ளார்.
‘நகைப்பு’ என்ற உணர்வை மையமாக வைத்து இப்படத்தை இயக்கி உள்ளார் இயக்குனர் பிரியதர்ஷன். கதைக்கருவுக்கு ஏற்றார் போல் படத்தில் காமெடி ஒர்க் அவுட் ஆகி இருப்பது படத்திற்கு மிகப்பெரிய பலம். ராஜேஷ் முருகேசனின் பின்னணி இசையும், வீரஜ் சிங்கின் ஒளிப்பதிவும் கதையுடன் ஒன்றி பயணிக்க வைக்கிறது.
மொத்தத்தில் ‘சம்மர் ஆஃப் 92’ காமெடி விருந்து.