போலி தடுப்பூசி
இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனமும் கூட்டாக உருவாக்கிய கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் புனேயில் உள்ள இந்திய சீரம் நிறுவனம் கோவிஷீல்டு என்ற பெயரில் தயாரித்து சந்தையிட்டு வருகிறது. மேலும் இந்த தடுப்பூசி, இந்திய அரசின் தடுப்பூசி திட்டத்திலும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த தடுப்பூசியின் போலி தடுப்பூசிகள் நடமாட்டம் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
உற்பத்தி நிறுவனம் உறுதி
இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
இந்தியாவிலும், உகாண்டாவிலும் கோவிஷீல்டு தடுப்பூசியின் போலி தயாரிப்புகள், நோயாளிகள் மட்டத்தில் கண்டறியப்பட்டு, அதை தடுப்பூசி உற்பத்தியாளர்கள் (புனே இந்திய சீரம் நிறுவனம்) சரி பார்த்துள்ளனர்.இது தொடர்பாக கடந்த ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் உலக சுகாதார அமைப்புக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவிஷீல்டு தடுப்பூசியின் உண்மையான உற்பத்தியாளர் (புனே இந்திய சீரம் நிறுவனம்) இந்த எச்சரிக்கையில் பட்டியலிடப்பட்டுள்ள தயாரிப்புகள் போலியானவைதான் என்பதை உறுதிப்படுத்தி உள்ளனர். இந்த போலியான தடுப்பூசிகள் இந்தியா மற்றும் உகாண்டாவில் நோயாளிகள் மட்டத்தில் பதிவாகி உள்ளன.
தடுப்பூசிகளின் அடையாளம், கலவை அல்லது ஆதாரத்தை மோசமாக, தவறாக சித்தரித்ததின் அடிப்படையில் போலி தயாரிப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அகற்றுவது முக்கியம்
2 கலவைகளில் போலி தடுப்பூசி குப்பிகளின் தொகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. ஒன்று 5 மில்லிக்கு கீழேயும், மற்றொன்று 2 மில்லி குப்பிகளிலும் வந்துள்ளது. இதன் உற்பத்தி மற்றும் காலாவதி தேதிகள் பொய்யானவை. ‘கோவிஷீல்டு 2 மில்லி. தொகுதி 4121 இசட் 040, காலாவதி தேதி 10.08.2021’ என்று தவறாக தரப்பட்டுள்ளது. கோவிஷீல்டு தடுப்பூசி 2 மில்லி குப்பியாக உற்பத்தி செய்யப்படவில்லை. 4 டோஸ் அடங்கிய குப்பிதான் உற்பத்தி செய்யப்படுகிறது.
போலியான தடுப்பூசிகள் உலகளாவிய பொது சுகாதாரத்துக்கு ஆபத்து ஏற்படுத்தும். பாதிக்கப்படக்கூடிய மக்கள் மற்றும் சுகாதார அமைப்பின்மீது கூடுதல் சுமையை ஏற்படுத்தும். நோயாளிகளுக்கு கெடுதி விளைவிப்பதைத் தடுக்க இந்த தவறான தயாரிப்புகளை புழக்கத்தில் இருந்து கண்டறிந்து அகற்றுவது முக்கியம்.
விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டும்
இந்த போலியான தடுப்பூசிகளால் பாதிக்கப்படக்கூடிய, நாடுகளின், பிராந்தியங்களின் வினியோக சங்கிலிகளில் விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும்.அனைத்து மருத்துவ தயாரிப்புகளும், அங்கீகரிக்கப்பட்ட, உரிமம் பெற்ற வினியோகஸ்தர்களிடம் இருந்து பெறப்பட வேண்டும். தயாரிப்புகளின் நம்பகத்தன்மை மற்றும் மருந்தின் உள்ளடக்க தன்மை கவனமாக சரி பார்க்கப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கோவிஷீல்டு போலி தடுப்பூசி பற்றிய தகவல்கள், பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
(நன்றி Dailythanthi)