தமிழகத்தில் ஊரடங்கு; திடீரென ரத்து செய்த முதல்வர் ஸ்டாலின்?

ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக இன்று நடைபெறவிருந்த ஆலோசனை கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கடைசியாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறப்பித்த உத்தரவுப்படி, வரும் 23ஆம் தேதி காலை 6 மணியுடன் ஊரடங்கு நீட்டிப்பு முடிவுக்கு வருகிறது. கொரோனா தொற்று குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க மாநில அரசு தீவிர ஏற்பாடுகளை செய்து வருகிறது.

புதிய தளர்வுகள்

இதுதொடர்பாக உரிய வழிகாட்டு நெறிமுறைகளும் தொடக்கக் கல்வி இயக்குநரகம் சார்பில் நேற்று வெளியிடப்பட்டன. மேலும் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து தியேட்டர்கள் தொடர்ச்சியாக மூடப்பட்டிருப்பதால் பல கோடி ரூபாய் வர்த்தகம் திரைத்துறையில் முடங்கிக் கிடக்கிறது. எனவே பள்ளிகள் திறப்பு மற்றும் தியேட்டர்கள் திறப்பு குறித்து தமிழக அரசின் அடுத்தகட்ட அறிவிப்பில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆலோசனைக் கூட்டம்

தமிழகத்தில் அடுத்தகட்ட தளர்வுகள் அல்லது கட்டுப்பாடுகள் அமல்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்த இன்று காலை 11 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருப்பதாக கூறப்பட்டது. அதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமை செயலாளர் வெ.இறையன்பு, சுகாதாரத்துறை வல்லுநர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்கவுள்ளதாகவும் சொல்லப்பட்டது.ஸ்டாலினின் அரசியல் ஆட்டம் எப்படியிருக்கிறது ? மூத்த பத்திரிகையாளர் ஜென்ராம் பேட்டி

இன்றைக்கா? நாளைக்கா?

இந்நிலையில் ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறவிருந்த ஆலோசனைக் கூட்டம் திடீரென ரத்து என்றும், இந்த கூட்டம் நாளை நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகின. இதுதொடர்பாக தலைமைச் செயலக வட்டாரத்தில் விசாரிக்கையில், ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்த நாளை தான் திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்குள் சிலர் இன்று கூட்டம் நடைபெறுகிறது என்று செய்திகள் வெளியிட்டு விட்டு, பின்னர் ரத்து என திருத்தம் செய்து வெளியிடுவதாக தெரிவித்தனர். எனவே தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நாளை (ஆகஸ்ட் 21) நடைபெறும் என்று உறுதியாக தெரியவந்துள்ளது.

(நன்றி Tamil samayam)