பூமிகா

நடிகர்     விது

நடிகை    ஐஸ்வர்யா ராஜேஷ்

இயக்குனர் ரதீந்திரன் ஆர் பிரசாத்

இசை     பிரித்வி சந்திரசேகர்

ஓளிப்பதிவு     ராபர்டோ ஜஸாரா

ஊட்டியில் பல ஆண்டுகளாக யாரும் பயன்படுத்தாமல் இருக்கும் ஒரு இடத்தை பிளாட் போட்டு விற்கும் பிராஜெக்ட் ஐஸ்வர்யா ராஜேஷின் கணவர் விதுவுக்கு வருகிறது. இதற்காக விது, ஐஸ்வர்யா ராஜேஷ், விதுவின் தங்கை மாதுரி, தோழி சூர்யா கணபதி ஆகியோர் ஊட்டிக்கு செல்கிறார்கள்.

அங்கு விதுவின் நண்பரிடம் இருந்து சூர்யா கணபதிக்கு மெசேஜ் வருகிறது. இறந்த நண்பன் செல்போனில் இருந்து சூர்யா கணபதிக்கு மெசேஜ் வருவதை கண்டு விது உள்ளிட்ட அனைவரும் வியக்கிறார்கள்.

செல்போனை ஆப் செய்து வைத்தாலும் அந்த நம்பரில் இருந்து மெசேஜ் வருகிறது. அதை தொடர்ந்து வீட்டில் அமானுஷ்ய சம்பவங்கள் நடக்கிறது. இறுதியில், அந்த செல்போனுக்கு மெசேஜ் அனுப்புவது யார்? எதற்காக அனுப்புகிறார்கள்? அமானுஷ்ய சம்பவங்கள் நடக்க காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், விது, சூர்யா கணபதி, மாதுரி ஆகிய நான்கு பேர் மட்டுமே அதிகம் வருகிறார்கள். இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் அதிக ஸ்கோர் செய்து இருக்கிறார். விது, சூர்யா கணபதி அளவான நடிப்பையும், மாதிரி அளவிற்கு மீறிய நடிப்பையும் கொடுத்து இருக்கிறார்கள்.

காவலாளியாக வரும் பாவெல் நவகீதன், கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார். இரண்டாம் பாதியில் வரும் அவந்திகா வந்தனபூ, வித்தியாசமான கதாபாத்திரத்தை சவாலாக ஏற்று நடித்து இருக்கிறார்.

இயற்கை சமந்தப்பட்ட கதையை திகில் கலந்து இயக்கி இருக்கிறார் இயக்குனர் ரதீந்திரன். பேய் படங்களுக்கு உண்டான மலைப் பிரதேசம்,  பங்களா, பயங்கர அமைதி, இருட்டு என அதே பாணியை கையாண்டு இருக்கிறார் இயக்குனர். பூமிகா சம்பந்தப்பட்ட காட்சிகள், மரம், செடி, கொடிகளை ஓவியங்கள் வழியே காட்டியிருப்பது சிறப்பு.

படத்தின் நீளத்தை குறைத்து இருந்தால் கூடுதலாக ரசித்து இருக்கலாம். ஆனாலும் இயற்கைக்கு எதிராக செயல்படாதீர்கள் என்ற கருத்தை சொல்லியதற்கு பெரிய பாராட்டுக்கள்.

பிரித்வி சந்திரசேகரின் பின்னணி இசையும், ராபர்டோ ஜஸாராவின் ஒளிப்பதிவும் படத்திற்கு பெரிய பலம். திரில்லர் படத்திற்கு தேவையானதை சரியாக கொடுத்து இருக்கிறார்கள்.

மொத்தத்தில் ‘பூமிகா’ இயற்கை அழகு.

maalaimalar