நீட் எம்.பி.பி.எஸ் ஹால்டிக்கெட் வெளியீடு: நீட் தேர்வை தள்ளி வைக்க இந்திய உச்ச நீதிமன்றம் மறுப்பு

செப்டம்பர் 12ஆம் தேதி நடக்கவுள்ள நீட் தேர்வை ஒத்திவைக்கக் கோரிய வழக்குகளை இந்திய உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது என்கிறது தினத்தந்தி செய்தி.

எம்.பி.பி.எஸ் சேர்க்கைக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பங்கள் அனுப்புவது, விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்வது, விண்ணப்ப கட்டணம் செலுத்துவது என அனைத்துப் பணிகளும் ஆகஸ்ட் 14ஆம் தேதியோடு முடிந்துவிட்டது.

இதனிடையே சிபிஎஸ்இ தொடர்பான தேர்வுகளும் அடுத்தடுத்து நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டன. இதனால் நீட் தேர்வு எழுதுவதில் மாணவர்களுக்கு குழப்பம் ஏற்படலாம் என்பதால் நீட் தேர்வை ஒத்திவைக்க கோரி இந்திய உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பில் இருந்து வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக நேற்று விசாரணை செய்த உச்ச நீதிமன்றம், “நீட் தேர்வை 16 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். ஆனால் ஒருசில மாணவர்களின் வேண்டுகோளுக்கிணங்க அதனை ஒத்திவைக்க முடியாது. திட்டமிட்டபடி நீட் தேர்வு கட்டாயம் நடந்தே தீரும்,” என்று கூறி வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிடப்பட்டது.

நீட் ஹால்டிக்கெட் வெளியீடுடவுன்லோட் செய்வது எப்படி?

இதனிடையே இளங்கலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வின் ஹால்டிக்கெட் தேசிய தேர்வு முகமையால் வெளியிடப்பட்டுள்ளது என டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

https://neet.nta.nic.in/ என்ற இணையதளத்தில் மாணவர்கள் அதைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்; அஞ்சல் மூலம் நீட் தேர்வுக்கான ஹால்டிக்கெட் அனுப்பி வைக்கப்படாது என்றும் அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

நீட் ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டால் மாணவர்கள் 011-40759000 என்ற தொலைபேசி எண்ணையோ, [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியையோ தொடர்பு கொள்ளலாம்.

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் தேதி எப்போது?

தமிழ்நாட்டில் விரைவில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது என்கிறது தினமணி செய்தி.

தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் தோற்றுவிக்கப்பட்டதால் ஏற்கெனவே விடுபட்டுபோன விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்பட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தோ்தலை செப்.15-க்குள் நடத்தி முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது குறித்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் நேற்று ஆலோசனை நடத்தியது.

(நன்றி BBC TAMIL)