மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டு, அதன் எல்லைப் பகுதிகளில் பல்வேறு மாநில
விவசாயிகள் சுமார் 10 மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். பலத்த மழை, கடும் பனி மற்றும் வெயில் என எதையும் பொருட்படுத்தாமல் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி போராடிக் கொண்டிருக்கின்றனர். வேளாண் சட்டங்களால் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை முறையானது கைவிடப்படும் சூழல் ஏற்படும்.
இணங்க மறுக்கும் மத்திய அரசு
விவசாயம் முழுவதும் கார்ப்பரேட்கள் வசமாகிவிடும் என்று விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக மத்திய அரசுடன் 10 சுற்றுகள் பேச்சுவார்த்தை நடந்தும் எந்தவொரு முடிவும் எட்டப்படவில்லை. விவசாயிகளும் தங்களது போராட்டத்தை கைவிடாமல் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இந்த சூழலில் கடந்த மாதம் 28ஆம் தேதி ஹரியானா மாநிலம் கர்னாலில் உள்ள சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் தடியடி
பாரதிய கிசான் யூனியன் விடுத்த அழைப்பை ஏற்று நூற்றுக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டனர். இந்த சூழலில் போராட்டத்தை கைவிடக் கோரி போலீசார் எச்சரித்தும் விவசாயிகள் நகரவில்லை. பின்னர் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை களைத்தனர். இதில் பல விவசாயிகள் காயமடைந்தனர். இதனால் ஹரியானா மற்றும் அதன் அண்டை மாநிலமான பஞ்சாபில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
மிகப்பெரிய கண்டனப் பேரணி
இந்நிலையில் ஆகஸ்ட் 28ஆம் தேதி விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து, மீண்டும் ஒரு முற்றுகை போராட்டத்திற்கு விவசாயிகள் தயாராகி வருவதாக தெரியவந்துள்ளது. மேலும் விவசாயிகள் மீது தடியடி நடத்த அனுமதி கொடுத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆயுஷ் சின்ஹா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
40 விவசாய சங்கங்களை உள்ளடக்கிய சம்யுக்த கிசான் மோர்ச்சா (SKM) என்ற அமைப்பு போலீசாரின் தாக்குதலை கண்டித்து கர்னாலில் மிகப்பெரிய பேரணி நடத்த திட்டமிட்டுள்ளது. இதனையறிந்த கர்னால் காவல்துறை துணை ஆணையர் நிஷாந்த் குமார் யாதவ், கர்னால் முழுவதும் 144 தடை உத்தரவை அமல்படுத்தியுள்ளார். இருப்பினும் விவசாயிகள் தங்களது
முடிவில் தீர்மானமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இதையொட்டி கர்னால் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
(நன்றி Tamil samayam)