‘டெல்டா’ வைரசுக்கு இந்தியா காரணமா?

புதுடில்லி,

‘கொரோனா இரண்டாவது அலை பரவலை ஏற்படுத்தியுள்ள ‘டெல்டா’ வகை வைரசுக்கு இந்தியா காரணமா என்பது குறித்து விசாரிக்க, சர்வதேச நிபுணர் குழுவை அமைக்க வேண்டும்’ எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

‘அபினவ் பாரத் காங்கிரஸ்’ என்ற அரசு சாரா அமைப்பின் தலைவர் பங்கஜ் பட்னிஸ், உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்திருந்தார். அதில் அவர் கூறியுள்ளதாவது:தற்போது உலகின் பல நாடுகளில் பரவிவரும் டெல்டா வகை கொரோனா வைரஸ், மஹாராஷ்டிர மாநிலம் அமராவதியில் தான் முதலில் தென்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், இது உறுதி செய்யப்படவில்லை. இந்த வகை வைரஸ் பரவலுக்கு இந்தியா காரணமா என்பது குறித்து ஆராயப்பட வேண்டும்.இதற்காக சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள் அடங்கிய சர்வதேச குழுவை அமைத்து விசாரிக்க, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், விக்ரம் நாத், ஹீமா கோஹ்லி அமர்வு உத்தரவிட்டதாவது: இது தொடர்பாக சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. மேலும் கொரோனா பரவலை தடுப்பதற்கான வழிமுறைகளையே நாம் தற்போது கவனிக்க வேண்டும். வைரஸ் தோன்றியதில் சதி ஏதும் உள்ளதா என்பது குறித்து கவனிக்க வேண்டியதில்லை.விசாரணை நடத்த சர்வதேச குழுவை அமைப்பது தொடர்பாக, மத்திய அரசை நீங்கள் நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அமர்வு உத்தரவிட்டது.

 

(நன்றி Dinamalar)