தமிழக ஆளுநராக இருந்த ரோசய்யாவின் பதவிக்காலம் கடந்த 2016ஆம் ஆண்டு நிறைவடைந்ததையடுத்து, மகாராஷ்டிரா ஆளுநர் வித்யாசாகர் ராவ் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, கடந்த 2017ஆம் ஆண்டு பன்வாரிலால் புரோகித் தமிழ்நாட்டுக்கான ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில், தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவியை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். இவர் தற்போது நாகாலாந்து மாநில ஆளுநராக உள்ளார். அதேபோல், உத்தரக்காண்ட் புதிய ஆளுநராக குர்மீத் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். அசாம் மாநில ஆளுநர் ஜெகதீஷ் முக்கிக்கு நாகாலாந்து ஆளுநர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக சில தினங்களுக்கு முன்னர் பஞ்சாப் மாநில ஆளுநர் பொறுப்பு, கூடுதலாக பன்வாரிலால் புரோகித்துக்கு வழங்கப்பட்டிருந்த நிலையில், அம்மாநிலத்தின் முழு நேர ஆளுநராக அவர் தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என்.ரவி, நாகலாந்து கிளர்ச்சியாளர்களுடன் அமைதி ஒப்பந்தம் ஏற்பட முக்கிய காரணமானவர். 1976ஆம் ஆண்டு கேரள கேடர் ஐபிஎஸ் அதிகாரியான இவர், இந்திய உளவுத்தறையின் சிறப்பு இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். சிபிஐ-யில் பணியாற்றியபோது, நாட்டில் சுரங்க மாஃபியாக்கள் உட்பட ஒழுங்கமைக்கப்பட்ட கிரிமினல் கும்பல்களுக்கு எதிராக பல ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
பத்திரிகை துறை மீது ஆர்வம் கொண்ட இவர், அத்துறையில் சில காலம் பணியாற்றியுள்ளார். இந்திய அரசு பணியில் இருந்து 2012ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றதும், தேசிய பத்திரிகைகளில் கட்டுரை எழுதி வந்தார். கடந்த 2019ஆம் ஆண்டு முதல் நாகாலாந்து ஆளுநராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
(நன்றி TAMIL SAMAYAM)