மைசூரு அரண்மனையின் 4 யானைகள் மத்திய அரசிடம் ஒப்படைப்பு – சரியாக பராமரிக்காததால் நடவடிக்கை

மைசூரு,

மைசூருவில் உலக பிரசித்திபெற்ற அரண்மனை அமைந்துள்ளது. அந்த அரண்மனைக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். மேலும் ஒவ்வொரு வருடமும் மைசூரு அரண்மனையில் நடத்தப்படும் தசரா விழா உலகப்புகழ் பெற்றதாகும். தசரா விழாவின்போது மைசூரு அரண்மனையில் தங்க சிம்மாசனத்தில் அமர்ந்து மைசூரு மன்னர் தனியார் தர்பார் நடத்துவதும், மைசூரு அரண்மனையில் நடக்கும் பாரம்பரிய நிகழ்ச்சிகளும் பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக இருக்கும். அதைக்காணவே லட்சக்கணக்கானோர் மைசூரு அரண்மனைக்கு வருவார்கள்.

இப்படி பல்வேறு சிறப்புகளைக் கொண்ட மைசூரு அரண்மனையில் 6 யானைகள் வளர்க்கப்பட்டு வந்தன. அவைகளை அரசு உத்தரவின்பேரில் வனத்துறையினர் பராமரித்து வந்தனர். மேலும் அந்த யானைகளுக்கென பாகன்களும் உள்ளனர்.

இந்த நிலையில் அந்த 6 யானைகளில் இருந்து 4 பெண் யானைகளை தேர்வு செய்து அவற்றை குஜராத்தில் உள்ள மத்திய அரசின் வனத்துறையிடம் ஒப்படைக்க மைசூரு அரண்மனை மண்டலி அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுதொடர்பாக வனத்துறை அதிகாரி கமலா கரிகாலன் மைசூரு அரண்மனையில் வைத்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மைசூரு அரண்மனையில் 6 யானைகள் வளர்க்கப்பட்டு வந்தன. அவற்றில் இருந்து 4 பெண் யானைகளை தேர்வு செய்து அவற்றை குஜராத்தில் உள்ள மத்திய அரசின் வனத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் யானைகள் முகாமில் ஒப்படைக்க முடிவு செய்துள்ளோம். இதற்காக மத்திய அரசின் வனவிலங்குகள் பாதுகாப்பு பிரிவில் இருந்து கடிதம் வந்துள்ளது.

மத்திய அரசின் வனத்துறையிடம் ஒப்படைக்க உள்ள அந்த 4 பெண் யானைகள் சீதா, ரூபி, ஜெமினி மற்றும் ராஜேஸ்வரி ஆகியவை ஆகும். இந்த 4 யானைகளும் கடந்த 32 வருடங்களாக அரண்மனை வளாகத்திலேயே பராமரிக்கப்பட்டு வருகின்றன. அவைகளின் உடல்நிலை தற்போது சரியில்லை. அதன்காரணமாக அவைகள் தளர்ந்துள்ளன.

அந்த யானைகளை சரியாக பராமரிப்பதில்லை என்று ஏற்கனவே மத்திய அரசின் வனத்துறையினர் மைசூரு அரண்மனை நிர்வாகத்தினரை கண்டித்து வந்தனர். இந்த நிலையில் அவற்றை பாதுகாக்க வேண்டி உடனடியாக அவற்றை மத்திய அரசிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிடப்பட்டது. அதன் அடிப்படையில் அந்த 4 யானைகளும் மத்திய அரசின் வனத்துறையிடம் ஒப்படைக்கப்படும். அவைகள் லாரிகள் மூலம் மைசூருவில் இருந்து குஜராத்தில் உள்ள மத்திய அரசின் வனத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் யானைகள் முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு ஒப்படைக்கப்படும்.

முன்னதாக அந்த 4 யானைகளையும் மத்திய அரசின் வனத்துறையிடம் ஒப்படைக்க மைசூருவைச் சேர்ந்த சமூக ஆர்வலர்களும், வனவிலங்கு ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவர்கள் மைசூரு அரண்மனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் மைசூரு மகாராணி பிரமோதா தேவி, யானைகளை மத்திய அரசின் வனத்துறையிடம் ஒப்படைக்க ஒப்புதல் அளித்தார். அவரது ஒப்புதலின்பேரிலேயே யானைகள் ஒப்படைக்கப்படுகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

(நன்றி DAILYTHANTHI)