விவசாயிகள் அறிவித்துள்ள பாரத் பந்த் போராட்டத்துக்கு காங்கிரஸ் ஆதரவு

புதுடெல்லி:

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பாராளுமன்றத்தில் 3 வேளாண் சட்டங்களும் கொண்டு வரப்பட்டன. இந்த சட்டங்கள் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கீழ் விவசாயிகள் கொண்டு வரப்படுவார்கள் என்று விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

உச்ச நீதிமன்றம் கடந்த ஜனவரி மாதம் இந்த 3 வேளாண் சட்டங்களையும் நடைமுறைப்படுத்த  இடைக்காலத் தடை விதித்திருந்தது. மேலும், இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர ஒரு குழுவை நியமித்துள்ளது.

இந்நிலையில், மத்திய அரசைக் கண்டித்து போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இந்த வேலை நிறுத்தத்திற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் கௌரவ் வல்லாப் கூறுகையில், விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்களால் செப்டம்பர் 27-ம் தேதி அமைதியான முறையில் நடைபெறவுள்ள இந்த வேலை நிறுத்தத்திற்கு காங்கிரஸ் கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு அளிப்பார்கள். கடந்த 9 மாதங்களாக போராடி வரும் விவசாயிகளிடம் மத்திய அரசு பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும். அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க போவதாக பிரதமர் மோடி கூறியிருந்தது பொய்யானது. 2012-2013ம் ஆண்டுகளில் விவசாயத்தின் மூலம் விவசாயிகளுக்கு  கிடைத்த வருமானத்தை விட 2018-20219ம் ஆண்டுகளில் கிடைத்த வருவாய் கணிசமாக குறைந்துள்ளது.

ஒரு விவசாயி சராசரியாக ஒரு நாளைக்கு 27 ரூபாய் மட்டுமே சம்பாதிப்பதாக இந்திய அரசின் நிலை மதிப்பீட்டு ஆய்வு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கடந்த 7 ஆண்டுகளில் விவசாயத் துறை நிரந்தர பாதிப்பை சந்தித்துள்ளது. கடந்த 70 ஆண்டுகளில் முதல் முறையாக விவசாயத் துறை மீது வரி விதித்துள்ள ஒரே அரசு தற்போதைய பா.ஜ.க. அரசு மட்டுமே. விவசாயத் துறை மீது ஜி.எஸ்.டி. மூலமாக அரசாங்கம் வரி வசூலிக்கின்றது என தெரிவித்துள்ளார்.

(நன்றி MAALAI MALAR)