மோதியின் செறிவூட்டப்பட்ட அரிசி திட்டம் மக்களுக்கு நல்லதா? நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?

இந்தியாவில் 65% மக்களுக்கு அரிசிதான் முக்கிய உணவு என்பது குறிப்பிடத்தக்கது.

சியாமளாவுக்கு 45 வயது. முன்பு அவர் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தார்.இப்போது அவர் மிகவும் சோர்வாகவும் பலவீனமாகவும் ஆரோக்கியமில்லாமலும் உணர்கிறார். மார்ச் மாதம் அவருக்குக் கோவிட் தொற்று ஏற்பட்டது. கோவிட் குணமாகி ஐந்து மாதங்கள் கடந்தும் சோர்வு குறையவில்லை என்று அவர் தெரிவிக்கிறார்.

“காலை எழுந்தவுடன் சோர்வாக உணர்கிறேன். 10 பேருக்கு சமைக்கக் கூடியவள் நான். இப்போது ஒருவேளை சமைப்பதே பெரிய வேலையாகத் தெரிகிறது. பெரும்பாலும் உணவுக்காக ஸ்விக்கி சொமேட்டோவையே நாடுகிறேன். உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் சோர்வாக உணர்கிறேன், வேலை செய்ய முடியவில்லை” என்கிறார்.

எதாவது ஒரு சிறு உடல்பிரச்சனை வந்துகொண்டே இருப்பதாகவும் நோய் எதிர்ப்பு சக்தி பெருமளவில் குறைந்துவிட்டதாக உணர்வதாகவும் தெரிவிக்கிறார்.

“உணவை விட மருந்துகளைத்தான் அதிகமாக சாப்பிடுகிறேன்” என்கிறார்.

மர்காபுரத்தைச் சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் விஜயலக்ஷ்மி, பொதுவாக 40 வயதைக் கடந்த பெண்கள், துத்தநாகம் மற்றும் இரும்புச்சத்துக் குறைபாட்டால் இந்த நோய்களுக்கு ஆளாகிறார்கள் என்கிறார்.

தேசிய ஊட்டச்சத்து கண்காணிப்பு அறிக்கையின்படி, இந்தியாவின் மக்கள்தொகையில் பாதிப்பேர், இரும்புச்சத்து, துத்தநாகம், வைட்டமின் ஏ, ஃபோலேட், பிற ‘பி’ வைட்டமின்கள் ஆகியவற்றைப் போதுமான அளவு எடுத்துக்கொள்வதில்லை.

(இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சில், ஊட்டச்சத்துக்களால் செறிவூட்டப்பட்ட அசிரி வகைகளை உருவாக்க ஆராய்ச்சி செய்துவருகிறது. செறிவூட்டப்பட்ட சில அரிசி ரகங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது. அவற்றில் டி.டி.ஆர். தான் 45(DDR Dhan 45), ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பயிர் செய்ய ஏற்றது என்று கவுன்சில் தெரிவிக்கிறது)இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சில், ஊட்டச்சத்துக்களால் செறிவூட்டப்பட்ட அசிரி வகைகளை உருவாக்க ஆராய்ச்சி செய்துவருகிறது. செறிவூட்டப்பட்ட சில அரிசி ரகங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது. அவற்றில் டி.டி.ஆர். தான் 45(DDR Dhan 45), ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பயிர் செய்ய ஏற்றது என்று கவுன்சில் தெரிவிக்கிறது

இதற்கான தீர்வு என்ன?

இந்தியாவில் 65% மக்களுக்கு அரிசிதான் முக்கிய உணவு. அரிசியை முக்கிய உணவாகக் கொண்டுள்ள நாடுகளில், செறிவூட்டப்பட்ட அரிசி என்பது ஊட்டச்சத்துக் குறைபாட்டை ஒழிப்பதற்கான மரபுரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு உத்தி என்று இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் (FSSAI) தெரிவிக்கிறது.

இந்தியாவில் ஊட்டசத்துக் குறைப்பாட்டை ஒழிப்பதற்காக ரேஷன் கடைகளிலும் மதிய உணவுத் திட்டங்களிலும் 2024ம் ஆண்டுமுதல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிக்கப்படும் என்று தனது சுதந்திர தின உரையில் பிரதமர் மோதி அறிவித்தார்.

பல மாநிலங்களில் செறிவூட்டப்பட்ட அரிசியை விநியோகிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. உணவு பொது விநியோகம் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சகம், இதுபோன்ற செறிவூட்டப்பட்ட அரிசி கொள்முதலுக்கான விதிகளை சமீபத்தில் அறிவித்தது.

பொது விநியோகத்துக்காகக் கொள்முதல் செய்யப்படும் அரிசியில் 1% செறிவூட்டப்பட்ட அரிசியாக இருக்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. காரிஃப் பருவத்தில் கொள்முதல் நடக்கும் என்பதை மனதில் கொண்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

“இதுபற்றிய விரிவான விழிப்புணர்வு பிரசாரங்களை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும். விவசாயிகளிடமிருந்து வரும் நெல்லை மறுக்கும் சூழ்நிலை ஏற்பட்டுவிடக்கூடாது,” என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

செறிவூட்டப்பட்ட அரிசி என்றால் என்ன?

அரிசியை பட்டை தீட்டும்போது அதிலுள்ள தனிமங்களும் சத்துக்களும் அழிய வாய்ப்பிருக்கிறது. அரிசியில் தேவைப்படும் ஊட்டச்சத்துக்களை சேர்க்கும் முறை செறிவூட்டுதல் என்று அழைக்கப்படுகிறது.

உலகளாவிய ஊட்டச்சத்துக் குறைபாட்டை எதிர்கொள்வதற்காக அரிசி மற்றும் பிற தானியங்களில் ஊட்டச்சத்துக்களை சேர்த்து அவற்றை செறிவூட்டும் முறையை உலக சுகாதார நிறுவனமும் உணவு மற்றும் விவசாயக் கழகமும் அங்கீகரித்துள்ளன.

“முதலில் அரிசி பொடி செய்யப்படும். பிறகு உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் (FSSAI) அறிவித்துள்ள அளவுகளில் ஊட்டச்சத்துக்கள் சேர்க்கப்படும், பிறகு இது மீண்டும் அரிசியாக மாற்றப்படும். அதுவே செறிவூட்டப்பட்ட அரிசி மணி என்று அழைக்கப்படுகிறது” என்கிறார் நியூயார்க்கைச் சேர்ந்த உயிர்மருத்துவ விஞ்ஞானி கல்சாபுடி ஶ்ரீநிவாச ராவ். க்ரானோவா நேச்சுரல்ஸ் ப்ரைவேட் லிமிட்டட் என்ற நிறுவனத்தை இவர் நிறுவியிருக்கிறார்.

அரிசிஹைதராபாதில் நடக்கும் ஆராய்ச்சி

இந்திய விவசாய ஆராய்ச்சிக் கழகம், வழக்கமான அரிசியைப் போலவே செறிவூட்டப்பட்ட அரிசியையும் உருவாக்கும் முறையை வெற்றிகரமாக உருவாக்கி, சில அரிசி ரகங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. டிடிஆர் தான் 45 என்பது ஹைதராபாதைச் சேர்ந்த இந்திய விவசாய ஆராய்ச்சிக் கழகத்தின் அரிசி ஆராய்ச்சி அமைப்பு உருவாக்கியுள்ள செறிவூட்டப்பட்ட அரிசி ரகம். இதன் பயிர்க்காலம் 135 நாட்கள். காரிஃப் காலத்துக்கு ஏற்றது இந்த ரகம், ஏக்கருக்கு 50 குவிண்டால் மகசூல் தரக்கூடியது. தீட்டப்பட்ட பிறகும்கூட இதில் துத்தநாக அளவு போதுமான அளவில் இருக்கும் என்று ஆராய்ச்சிக் கழகம் தெரிவிக்கிறது. கர்நாடகம், தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இதைப் பயிர் செய்யலாம்.

(இந்தியாவில் 60% பள்ளிக்குழந்தைகளுக்கு ரத்த சோகை இருப்பதாக உணவு பொது விநியோகம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவிக்கிறது)

ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்பு என்ன?

இந்தியாவில் உள்ள 60% பள்ளிக்குழந்தைகள் மற்றும் 50% கர்ப்பிணிப் பெண்களூக்கு இரத்த சோகை நோய் இருப்பதாக உணவு, பொது விநியோகம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவிக்கிறது. உலகில் ரத்த சோகை உள்ளவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு இரும்பு சத்துக் குறைபாட்டால்தான் சோகை ஏற்படுகிறது என்றும், இதனால் குழந்தைகளின் அறிவுத்திறன் அலகான ஐ.க்யூ 8 புள்ளிகள் குறைகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பெண்களுக்கு ரத்தசோகை, சோர்வு, வலி போன்றவை ஏற்படலாம். கால்கள் வளைந்து காணப்படலாம். காலை எழுந்தவுடன் காலில் வலி ஏற்படும்,” என்கிறார் டாக்டர் விஜயலக்ஷ்மி.

புரதச்சத்து, மாவுச்சத்து ஆகியவற்றோடு, துத்தநாகம், மக்னீசியம் போன்றவையும் அவசியம் என்று கூறும் இவர், தினசரி உணவோடு இந்த சத்துக்கள் சேர்த்துக்கொள்வது நல்லது என்கிறார்.

“சத்துள்ள உணவை உண்பது கண்பார்வையையும் நுரையீரல் செயல்திறனையும் அதிகரிக்கும்” என்கிறார்.

இதுபோன்ற நுண் ஊட்டச்சத்துக்களைப் போதுமான அளவில் எடுத்துகொள்ளும்போது, மாதவிடாய் நிற்கும் காலத்தில் பிறப்புறுப்பில் ஈரப்பதம் குறைவது, தோல் பாதிப்பு போன்றவையும் குறையும்.paddy

“அரிசியை சமைக்கும்போது பலமுறை கழுவாமல் அந்த ஊட்டசத்துக்கள் சேரும்படி பார்த்துக்கொள்ளவேண்டும். அரிசி கஞ்சி குடிப்பதும் பயனளிக்கும். வீட்டில் விளைவிக்கப்பட்ட காய்கறிகளை உண்பது உடல்நலத்துக்கு நல்லது,” என்கிறார்.

ஊட்டச்சத்து மிக்க அரிசியின் முக்கியத்துவம்

“எங்களிடம் வரும் நோயாளிகள், கண்பார்வைக் குறைபாடு, இரத்தசோகை, சோர்வு ஆகிய பிரச்சனைகளோடு வருகிறார்கள். இதுபோன்ற பிரச்சனைகளுக்கு இரும்பு, துத்தநாகம், வைட்டமின் ஆகிய சத்துக்கள் குறைவதே காரணம்” என்கிறார் கஜபதிங்காரத்தைச் சேர்ந்த மருத்துவர் ஜி.எஸ்.ஆர் மூர்த்தி. விஜயநகரம் மற்றும் விசாகப்பட்டினத்தில் செறிவூட்டப்பட்ட அரிசி மற்றும் கினுவா ஆகியவற்றை உற்பத்தி செய்யும் விவசாயிகள் மற்றும் நிறுவனங்களுக்கு இவர் ஆலோசகராக இருக்கிறார்.

“ஊட்டச்சத்து மிக்க அரிசிக்கு நாம் முக்கியத்துவம் தரவேண்டும்” என்றுகூறும் அவர். தேசிய ஊட்டச்சத்துக் கழகத்தின் விஞ்ஞானி முனைவர் லாங்க்வாவின் சொற்களை நினைவுகூர்கிறார்.

“எங்களிடம் சிகிச்சைக்கு வரும் எல்லோருக்கும் இரும்புச்சத்து, துத்தநாகம், கால்சியம். பி காம்ப்ளெக்ஸ் மாத்திரைகளை வாங்கும் வசதி இருக்காது. இதுபோன்ற நோயாளிகளிடம் நாங்கள் செறிவூட்டப்பட்ட அரிசியை உட்கொள்ளச் சொல்வோம். இதுபோன்ற அரிசியையும் வழக்கமான அரிசியையும் கலந்து உணவாக எடுத்துக்கொள்ளும்போது அவர்களின் உடல்நலம் முன்னேறுகிறது. அதைக் கண்கூடாகப் பார்க்கிறோம். இதுபோல செய்வதால் இரத்தசோகை, சோர்வு,உடல் மற்றும் மன உளைச்சல் ஆகியவை குறைகின்றன,” என்கிறார்.

ஒரு கிலோ செறிவூட்டப்பட்ட அரிசியில் 28 மில்லிகிராம் இரும்பு, 75-125 மில்லிகிராம் ஃபோலிக் அமிலம், 0.75 முதல் 1.25 மில்லிகிராம் வைட்டமின் பி12 ஆகியவை இருக்கவேண்டும் என்று FSSAI தெரிவிக்கிறது.

எல்லா லாபமும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குNOAH SEELAM/AFP via Getty Images

“செறிவூட்டப்பட்ட அரிசியால் ஊட்டச்சத்து வழங்குவதோடு நின்றுவிடக்கூடாது. ஒட்டுமொத்த உணவில் ஊட்டச்சத்துக்களை அதிகரிப்பது எப்படி என்று பார்க்கவேண்டும்” என்கிறார் சகஜா விவசாயப் பொருட்கள் நிறுவனத்தின் நிறுவனர் ஜி.வி.ராமாஞ்சனேயலு.

“காலை உணவு தொடங்கி இரவு உணவு வரை எந்தெந்த ஊட்டச்சத்துகள் கிடைக்கின்றன என்று கவனிக்கவேண்டும்” என்கிறார். உதாரணமாக, பருப்பு கடைசல் போன்றவற்றில் காய்கறிகள் சேர்க்கலாம்.

இப்போதைக்கு, அரிசியில் ஊட்டச்சத்துக்களை சேர்ப்பதற்கு அரசு முயற்சி செய்து வருகிறது. தனிப்பட்ட உணவுப் பொருட்களில் ஊட்டச்சத்துக்கள் சேர்ப்பதால் இருக்கும் பயன்கள் பற்றி சந்தேகம் தெரிவிக்கும் அவர், எல்லாருக்கும் ஊட்டச்சத்து மிக்க உணவு கிடைக்க வழிவகை செய்யப்படவேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்.

“இந்த உணவை ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் இதை எல்லாருக்கும் கட்டாயம் என்று ஏன் அறிவிக்கவேண்டும்? எல்லா விவசாயிகளும் பயிர் செய்யும் அரிசியில் ஊட்டச்சத்துக்கள் கட்டாயம் இருக்கவேண்டும் என்ற விதி வந்துவிட்டால், சிறு/குறு விவசாயிகள், சந்தையில் உள்ள விற்பனையாளர்கள் பாதிக்கப்படுவார்கள். ஊட்டச்சத்துக்களை சேர்க்கும் தொழில்நுட்பம் காப்புரிமை கொண்டது. எல்லாருக்கும் அது கிடைப்பது சாத்தியமில்லை. உள்ளூர் சந்தைகளும் சிறு விவசாயிகளும் பாதிக்கப்படுவார்கள்” என்று அவர் விளக்கினார்.

“இந்த தொழில்நுட்பம் கிடைக்காத விவசாயிகளும் இதை செய்ய முடியாத சிறு நிறுவனங்களும் சந்தையிலிருந்து வெளியேறும். கார்ப்பரேட் நிறுவனங்கள் அந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளும். இப்போதைக்கு இந்தத் தொழில்நுட்பம் சில நிறுவனங்களிடம் மட்டுமே இருக்கிறது” என்கிறார் அவர்.பயிர்

1998ல் டெல்லியில் தலைவிரித்தாடி 3000 பேரை பலிகொண்ட ட்ராப்சி கொள்ளைநோயை ஒரு உதாரணமாகக் குறிப்பிடுகிறார். “பதப்படுத்தப்படாத சமையல் எண்ணெய் தான் இதற்குக் காரணம் என்று சொல்லப்பட்டது. அதன் விற்பனை தடை செய்யப்பட்டது. சிறு எண்ணெய் வியாபாரிகள் வருமானத்தை இழந்தார்கள்” என்கிறார்.

“உப்பில் அயோடின் கட்டாயம் சேர்க்கப்படவேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டபோது சிறு உப்பு நிறுவனங்கள் கடைகளை இழுத்து மூடவேண்டிய நிலை வந்தது. இரத்தசோகை, இரும்பு மற்றும் வைட்டமின் குறைபாட்டிற்கான அடிப்படைக் காரணத்தைக் கண்டறிந்து தீர்வு காணவேண்டும்.

ஒரு செயற்கையான செயல்முறையைக் கட்டாயம் என்று அறிவிக்கக் கூடாது. உணவு நொதிகள் மூலம் சத்துக்களைக் கொண்டு சேர்க்கலாம். பட்டை தீட்டப்பட்ட அரிசியால் வரும் பிரச்சனைகளைத் தீர்க்க இன்னொரு மோசமான முறையைக் கையாளக்கூடாது. ஊட்டச்சத்துக் குறைபாட்டுக்குக் காரணம் பொருளாதாரப் பிரச்சனைதான். அதை செறிவூட்டப்பட்ட அரிசியால் தீர்க்க முடியாது. மக்களின் பொருளாதாரப் பிரச்சனைகளை சரி செய்யவேண்டும். ஊட்டச்சத்துக் குறைபாட்டை செறிவூட்டுவதால் மட்டும் முழுமையாக வென்றுவிட முடியாது” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

விவசாயிகளுக்கான லாபம்

65% இந்திய மக்கள் தொகையினர் அரிசியை முக்கிய உணவாக எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால் அரிசியில் இயல்பாகவே உள்ள வைட்டமின் பி1, ஈ, நியாசின் போன்றவை, பட்டை தீட்டும்போது அழிந்துவிடுகின்றன. இதுபோல அழிந்த ஊட்டச்சத்துக்களோடு கூடுதல் ஊட்டச்சத்துக்கள் சேர்க்கப்பட்டால் உடல்நலம் சீராகும் என்கிறார் ஶ்ரீநிவாச ராவ்.

“இது உடல்நலத்தை மேம்படுத்தும், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படாது. விவசாயிகள் கீனுவாவை உற்பத்தி செய்து குறைந்த விலையில் விற்க எங்கள் நிறுவனம் முயற்சி செய்துவருகிறது. டாக்டர் அரிசி என்ற பெயரில் 100% செறிவூட்டப்பட்ட அரிசியை உருவாக்குகிறோம்.

ஒரு சாப்பாட்டுக்கு 25-35 பைசா மட்டுமே செலவாகும். இந்தியாவின் தேவைக்கு 1 மில்லியன் டன் செறிவூட்டப்பட்ட அரிசி போதுமானது. இதைத் தனியாகப் பயிரிட்டுப் பாதுகாக்கவேண்டிய அவசியமில்லை. விவசாயிகள் உருவாக்கும் அரிசியைத்தான் 99% அளவில் மக்கள் சாப்பிடுவார்கள்” என்று அவர் விளக்குகிறார்.

முதற்கட்டமாக இந்தியாவில் 112 மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கு 130 லட்சம் மெட்ரிக் டன் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிக்கப்படுள்ளது. இதற்காக 174.6 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. பொது விநியோகமுறை, அங்கன்வாடிகள்மூலம் இது மக்களை அடையும்.

ஆனால் பொது விநியோகம் மற்றும் மதிய உணவு திட்டத்தோடு நிறுத்திக்கொள்ளாமல் இது எல்லாரையும் சென்றடைய வழிசெய்யவேண்டும் என்று ஶ்ரீநிவாச ராவ் கோரிக்கை வைக்கிறார். இந்தியா முழுவதும் இது பயன்படுத்தப்படவேண்டுமானால் 350 லட்சம் மெட்ரிக் டன்னாக உற்பத்தி அதிகரிக்கப்படவேண்டும். இப்போதைக்கு பால், உப்பு, கோதுமை போன்ற பொருட்களில் ஊட்டச்சத்துக்கள் சேர்க்கப்படுகின்றன. அரிசி, கோதுமை, ஒருவகை சோளம் முதலிய தானியங்களை செறிவூட்டும் முறை 86 நாடுகளில் இருக்கிறது.

கோஸ்டா ரிக்கா, நிகராகுவா, பப்புவா நியூ கினி, ஃபிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் செறிவூட்டப்பட்ட அரிசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. “பிரேசில், டொமினிகன் ரிபப்ளிக், கொலம்பியா, தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் உள்ள நிறுவனங்கள் தாமே முன்வந்து செறிவூட்டப்பட்ட அரிசியை உற்பத்தி செய்கின்றன. இந்தியாவும் இந்தப் பாதையில் பயணித்தால் ஊட்டச்சத்துக் குறைபாட்டை சரி செய்யலாம்” என்கிறார் ஶ்ரீநிவாச ராவ்.

(நன்றி BBC TAMIL)