ஓல்எல்எக்ஸ், சுலேகா விளம்பரங்கள்: ஆன்லைனில் இப்படியும் ஒரு நூதன மோசடி – எப்படி தடுப்பது?

இன்டர்நெட் வசதியுடன் கூடிய ஸ்மார்ட் ஃபோன், ஒரு வாட்ஸ்ஆப் செயலி, பேடிஎம் அல்லது கூகுள் பேவுடன் இணைக்கப்பட்ட ஒரு வங்கிக்கணக்கு – இவை இருந்தால் போதும், நூதன மோசடி தொழிலில் ஈடுபடலாம் என்பதை நிரூபித்து கடந்த சில ஆண்டுகளாகவே சைபர் கிரைம் காவல்துறைக்கு சவால் விடுத்து வருகின்றன பல மோசடிக்குழுக்கள். சில இடங்களில் இந்த மோசடி தனி நபர்களாலும் மேற்கொள்ளப்படுகிறது.

முதலில் இது என்ன மோசடி, இது எப்படி நடக்கிறது என்பதை விளக்க சில சம்பவங்களை இங்கே தொகுத்தளிக்கிறோம்.

சென்னையின் பிரபல பன்னாட்டு தனியார் நிறுவனத்தில் இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வருபவர் அனாமிகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது சொந்த மாநிலம் கர்நாடகா. பொறியியல் பட்டதாரியான இவர் 15-20 பேர் கொண்ட அணியை வழிநடத்தி வருகிறார். கொரோனா பெருந்தொற்று தணியத் தொடங்கிய நிலையில், பெங்களூரு கிளையில் பணியாற்ற செல்லுமாறு உத்தரவிடுகிறது இவரது நிறுவனம்.

பெங்களூரு தனது சொந்த ஊர் என்பதால், சென்னை குடியிருப்பில் வாங்கிப் போட்ட சில பொருட்களை விற்க முடிவு செய்தார். நண்பர்களிடம் சொல்லி வைத்தபோதும் பொருளை வாங்க யாரும் ஆர்வம் காட்டவில்லை. இதனால் இலவச விளம்பர தளங்களான ஓஎல்எக்ஸ், சுலேகா டாட் காம் போன்ற விளம்பர தளங்களில், ‘நான் அவசரமாக பணி மாற்றல் பெறுகிறேன், புதிய, வண்ணமயமான ஃபிரிட்ஜ் 8 ஆயிரம் ரூபாய், கேஸ் ஸ்டவ் ரூ. 1,000, 3+2 சோஃபா ரூ. 8,000, கட்டில் – ரூ. 10 ஆயிரம் என்ற விலையில் விற்க விரும்புகிறேன். இது நியாயமான விலை,’ என்று ஆங்கிலத்தில் விளம்பரம் செய்கிறார். தமது பொருட்கள் சிலவற்றின் படங்களையும் அந்த தளங்களில் அவர் பதிவேற்றி தமது செல்பேசி எண்ணையும் பகிர்கிறார்.

ஆச்சரியமூட்டும் வகையில் அடுத்த சில நொடிகளிலேயே அவருக்கு அழைப்புகள் வருகின்றன. சாதாரண அழைப்பாக இல்லாமல் வாட்ஸ்ஆப்பில் அவருக்கு அழைப்பு வருகிறது. “உங்கள் விளம்பரங்களை பார்த்தோம். நாங்கள் கல்லூரி மாணவர்கள். உங்களுடைய பொருட்கள் எல்லாவற்றையும் நாங்களே வாங்கிக் கொள்கிறோம். விலை பிரச்னையில்லை. நாளையே வாங்கிக் கொள்கிறோம்,” என்று மறுமுனையில் பேசியவர்கள் இணைப்பை துண்டிக்கின்றனர்.

ஆசையை தூண்டி நடக்கும் மோசடி

olxபொருட்களை விற்கும் ஆர்வத்தில் இப்போது அனாமிகா, அவர்களுக்கு வாட்ஸ்ஆப்பில் மெசேஜ் செய்து, “எப்போது வாங்க வருகிறீர்கள்? நீங்கள் வரும்போது நான் வீட்டில் இருக்க வேண்டும் என்பதற்காக கேட்கிறேன்….” என்கிறார்.

அதற்கு அவர்கள், “முதலில் பணத்தை செலுத்தி விடுகிறோம். எங்களுடைய நண்பர்களில் ஒருவர் வந்து வாங்கி கொள்வார்,” என்று இரு வரிகளில் பதில் தந்தனர்.

“இல்லை, இல்லை…. பொருட்களை வாங்கும்போதே பணத்தை கொடுத்து விடுங்கள்,” என அனாமிகா கூற, “நாங்கள் கல்லூரிக்கும் கூடுதல் பயிற்சி வகுப்புகளுக்கும் இடையே அங்குமிங்குமாக செல்பவர்கள். அதனால் பேடிஎம்மில் பணத்தை அனுப்புகிறோம். பொருட்களை மட்டும் வேறு யாருக்கும் கொடுக்காதீர்கள்,” என்று எதிர்முனையில் மீண்டும் பதில் வருகிறது.

விளம்பரம் செய்த ஒரே நாளில் விற்பனை, அதுவும் கல்லூரி மாணவர்கள். இன்னும் கொஞ்சம் கூடுதலாக பொருட்களுக்கு விலை போட்டிருக்கலாமோ என்று அனாமிகா மனதில் ஆசை துளிர்விடுகிறது.

மாலை வரை அழைப்புக்காக காத்திருந்தும் எதிர்தரப்பில் இருந்து பதில் வரவில்லை. இப்போது அவரே வாட்ஸ்ஆப்பில், “எப்போது வருவீர்கள் என உறுதிப்படுத்த முடியுமா?” என மெசேஜ் அனுப்பினார். உடனே மறுமுனையில், “சரி உங்களுக்கு இந்த எண்ணில் இருந்து பேடிஎம் மூலம் ரூ.1 பணம் அனுப்புகிறோம். கிடைத்ததை உறுதிப்படுத்தியவுடன் எல்லா பொருட்களுக்குமாக சேர்த்து ரூ. 27 ஆயிரத்தை டிரான்ஸ்ஃபர் செய்கிறோம்,” என்று பதில் வந்தது.

ஆனால், ரூ. 1 பணம் வரவில்லை. அதற்கு பதிலாக ஒரு பார் கோடை அனுப்புகிறார்கள். அதில் ரூ. 1 என்று குறிப்பிடப்பட்டிருந்தது. “உங்கள் செல்பேசி எண்ணை பேடிஎம்-இல் டைப் செய்யும்போது சுற்றிக் கொண்டே இருக்கிறது. சரி…. நீங்களே எங்களுக்கு ரூ. 1 செலுத்துங்கள். உங்கள் எண்ணை சேவ் செய்து கொண்டு பணத்தை டிரான்ஸ்பர் செய்கிறோம்,” என எதிர்முனையில் இருந்து மீண்டும் பதில் வர, பரிவர்த்தனை கை கூடும் ஆர்வத்தில் டெஸ்க்டாப் வெப் வாட்ஸ்ஆப்பில் ஸ்கேன் கோடை டவுன்லோடு செய்த அனாமிகா, கையில் இருந்த செல்பேசி உதவியுடன் பார்கோடை தனது பேடிஎம் செயலியில் ஸ்கேன் செய்தார்.

அது நேராக பணத்தை குறிப்பிடும் பக்கத்துக்கு செல்லாமல் பணப்பரிமாற்றத்துக்கான பாஸ்வோர்ட் ஸ்க்ரீனுக்கு சென்றது. ரூ. 1 தானே நமது கணக்கில் இருந்து கழியப்போகிறது என பரிவர்த்தனை பாஸ்வோர்டை டைப் செய்கிறார். அடுத்த நொடியே அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 30 ஆயிரம் கழிக்கப்படுகிறது.

இப்போதுதான் தான் ஏமாற்றப்பட்டோம் என்பதை அறிகிறார் அனாமிகா.

அலுவலகத்தில் 20 பேர் கொண்ட அணியை வழிநடத்தும் டேட்டா அனாலிஸ்ட் இப்படி ஒரு மோசடியில் சிக்கி விட்டோமே என்ற எண்ணத்துடன், அடுத்து எப்படி பிரச்னையை சமாளிப்பது என்று குழம்பியிருக்கிறார்.

எதிர்முனையில் பேசிய நபர்கள் அவரது எண்ணை இப்போது வாட்ஸ்ஆப்பில் பிளாக் செய்து விட்டனர்.

நண்பர்கள் சிலர் சைபர் கிரைமில் புகார் தெரிவியுங்கள் என்று அறிவுறுத்தினார்கள். ஆனால், வெளியே தெரிந்தால் தான் அவமானப்படுத்தப்படுவோமோ என்ற அச்சத்தில் தொலைத்த ரூ. 30 ஆயிரத்துடன் தமது நிலையை நொந்து கொண்டு அடுத்த வேலையை பார்க்க தயாராகி விட்டார் அனாமிகா. இவர் பற்றி நண்பர் மூலம் அறிந்து அவரை பிபிசி தமிழுக்காக தொடர்பு கொண்டபோது இப்படி கூடவா ஏமாற்றுவார்கள் என்று நம்மிடம் ஆதங்கப்பட்டார் அனாமிகா.

ஆன்லைன் மோசடிஅனாமிகா ஏமாந்தது ஒரு வகை என்றால் அவரைப் போல இதேபாணியில் பணத்தை பறிகொடுத்தவர்கள் பல வகை. அனாமிகா விவகாரத்தில் கல்லூரி மாணவர்கள் தோற்றத்தில் வந்த மோசடி பேர்விழிகள், பல இடங்களில் ராணுவ வீரர்கள் போர்வையில் மோசடியில் ஏமாந்திருக்கிறார்கள்.

சிலர், காணொளி காட்சியில் ராணுவ சீருடையில் கூட தோன்றி நான் அவசரமாக மாற்றலாகி வெளி மாநிலம் செல்கிறேன். எனது மோட்டார் பைக்கை விற்கிறேன் என்று பைக்கை எல்லாம் காட்டுவார்கள்.

பணப்பரிவர்த்தனை பேரத்துக்கு முன்பாக தமது அடையாள அட்டை என கூறும் ஒரு சில ஆவணங்களையும் அவர்கள் பகிருவார்கள். கடைசியில் ஆயிரக்கணக்கில் பணத்தை பறிகொடுத்த பிறகே இப்படியும் மோசடி நடக்குமா என்று பலரும் அறியத் தொடங்குகின்றனர்.

“வேகமாக வளர்ந்து வரும் இன்டர்நெட் உலகில், அரசாங்கமே ரொக்கப் பரிவர்த்தனையை தவிருங்கள் – ஆன்லைன் பரிவர்த்தனையை செய்யுங்கள் என ஊக்குவிக்கிறது. சாலையோர வியாபாரி முதல் நட்சத்திர விடுதி வரை இன்று எங்கும் பேடிஎம், கூகுள் பே, யுபிஐ செயலிகள் மூலம் பரிவர்த்தனைகள் நடக்கின்றன. இது வரவேற்கக் கூடிய தொழில்நுட்ப புரட்சி என்றாலும், இதைப் பயன்படுத்தியே மோசடிகளும் தடையின்றி தொடருவதுதான் வேதனை தரும் விஷயம்,” என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

சரிஇந்த மோசடிகளை எப்படி தடுப்பது?

ஆன்லைன் மோசடிஇப்படிப்பட்ட மோசடி பேர்வழிகளை ஓஎல்எக்ஸ், சுலேகா, லோகான்டோ போன்ற தளங்களே ஏன் தடுக்க முடியாது?

ஒரு சில டேட்டிங் செயலியில் மோசடி நபர்களை தடுக்க, அவர்களின் அசல் அடையாள அட்டை சரிபார்ப்பு, முகநூல், ட்விட்டர் போன்ற அசல் முகவரியுடன் ஒப்பீடு செய்யப்பட்ட பயனர்களை மட்டுமே தளத்துக்குள் அனுமதிக்கும் வழக்கம் உள்ளது. அது போல, இந்த இலவச விளம்பர தளங்கள் ஏன் தங்களுடைய பயனர்களை தணிக்கை செய்ய முடியாது என்று பலரும் கேட்கின்றனர்.

இந்த ஓஎல்எக்ஸ், சுலேகா போன்ற தளங்கள், “நாங்கள் இலவசமாக தளத்தை மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கிறோம். நல்லது, கெட்டது போன்றவற்றை தரம் பிரிப்பது பயனர்களின் கடமை. அதில் நாங்கள் தலையிடுவதில்லை. எங்கள் பொறுப்பை தட்டிக்கழிக்காமல் இருக்க எச்சரிக்கை விளம்பரங்களை இயன்றவரை பயனர் உள்ளே நுழையும்போதே வெளியிடுகிறோம். அதன் பிறகும் அவர்கள் மோசடி வலையில் சிக்குகிறார்கள்,” என்று கூறுகின்றன.

முன்பு நாம் குறிப்பிட்ட அனாமிகாவின் அனுபவத்தில் அவர் ஒரு முறை மட்டுமே ரூ. 30 ஆயிரத்தை தொலைத்து விட்டு பரிதவித்தார்.

சென்னை பல்லாவரத்தில் ஒருவர் இதேபாணியில் ரூ. 13 ஆயிரத்துக்கு மோட்டார் சைக்கிள் விற்பனை என்ற விளம்பரத்தை பார்த்து அந்த விளம்பரதாரரை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். மறுமுனையில் இருந்தவர், நான் பல்லாவரம் ராணுவ அலுவலகத்தில் இருந்து ராஜஸ்தானுக்கு இடமாற்றலாகி விட்டேன் என்று கூறி தமது அடையாள அட்டை, வாகன பதிவுச்சான்றிதழ், காப்பீடு பக்கம் போன்றவற்றை அனுப்பி வைக்கிறார்.

வாகனத்தை பார்க்க எப்போது வருவது என கேட்டபோது, “நான் இருப்பது பொதுமக்களுக்கு தடை செய்யப்பட்ட பகுதி. முதலில் ரூ. 5,000 முன்பணம் செலுத்துங்கள். நானே வாகனத்தை பல்லாவரம் ராணுவ முகாமுக்கு வெளியே கொண்டு வந்து தருகிறேன். அங்கேயே போக்குரவத்து துறையின் வாகன டிரான்ஸ்ஃபர் படிவத்தில் கையெழுத்து போட்டு மீத பணத்தை கொடுத்தால் போதும்,” என்கிறார் அந்த ராணுவ வீரர்.

சரி ராணுவ வீரர்தானே என்ற நம்பிக்கையில் பணம் செலுத்த முடிவு செய்தார் வாகனத்தை வாங்க விரும்பிய இளைஞர்.

அனாமிகா சந்தித்த அதே அனுபவம். இங்கே வேறு ஒரு க்யூஆர் கோட். இம்முறை மோட்டார் சைக்கிள் வாங்க ஆசைப்பட்டவர் இழந்தது ரூ. 50 ஆயிரம். ஐயோ நாம் ஏமாந்து விட்டோமே என்று மறுமுனையில் ராணுவ வீரரை தொடர்பு கொண்டு பேச, “அப்படியா, இது எப்படி நடந்தது என தெரியவில்லையே…. என் அம்மாவுக்கு அனுப்பிய கியூஆர் கோடை உங்களுக்கு அனுப்பி விட்டேன் என நினைக்கிறேன். சரி உங்களுடைய மீத பணத்தை திருப்பித் தருகிறேன் இப்போது அனுப்பும் கியூஆர் கோடை ஸ்கேன் செய்யுங்கள். உங்கள் பணம் உங்களுக்கு வந்து விடும்” என்று ராணுவ வீரர் கூற, பதற்றத்தில் தமது யுபிஐ பாஸ்வோர்டை தட்டச்சு செய்த அடுத்த சில நிமிடங்களில் மேலும் சில ஆயிரங்கள், பைக் வாங்க ஆசைப்பட்டவரின் கணக்கில் இருந்து கழிகிறது.

பொருளை வாங்க ஆசைப்படுபவரின் குரல், வயது, சூழ்நிலை போன்றவற்றை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்வது இதுபோன்ற மோசடி பேர்விழிகளின் பாணி என சைபர் கிரைம் நிபுணர்கள் கூறுகின்றனர்.

பணத்தை தொலைத்த நபர் தான் ஏமாற்றப்பட்டது பற்றி பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையில், பகிரப்பட்ட ராணுவ ஆவணங்கள், வாகன ஆவணங்கள் அனைத்தும் போலி என தெரிய வருகிறது. எதிர்முனையில் பேசிய நபரின் செல்பேசி எண் ராஜஸ்தான், கொல்கத்தா போன்ற நகரங்களில் பதிவானவை அல்லது இன்டர்நெட்டில் கிடைக்கும் இலவச செல்பேசி எண் மூலம் நடக்கும் மோசடி என தெரிய வந்தது.

எப்படி கவனமாக இருப்பது?சரவணன்

இந்த மோசடியை எப்படி தடுப்பது என்று தமிழ்நாடு காவல்துறையின் திட்டமிட்ட குற்றங்கள் நுண்ணறிவு பிரிவின் கண்காணிப்பாளர் எஸ். சரவணனிடம் பிபிசி தமிழ் கேட்டது.

“பல இடங்களில் இதுபோன்ற மோசடிகளுக்கு படித்தவர்களே இரையாகிறார்கள். போதிய கவனம் இல்லாமல் அலட்சியமாக பணப்பரிவர்த்தனை செய்வது, அஜாக்கிரதை போன்றவை தான் இதுபோன்ற மோசடி பேர்வழிகளுக்கு சாதகமாகிறது. பொருட்களை விற்கவோ, வாங்கவோ முதலில் அவர்கள் உங்களுடைய ஆசையை தூண்டுவார்கள். நம்பிக்கை தரும் வகையில் பேசுவார்கள். ஆவணங்கள் என கூறப்படும் சில பக்கங்களை பகிருவார்கள். அவர்களுடன் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை செய்யும் முன்பாக ஒரு நிமிடம் யோசித்தால் போதும். பொருளை வாங்குபவராக இருந்தால், ‘அவர்தானே பணத்தை தர வேண்டும். நாம் ஏன் கியூஆர் கோடில் ஸ்கேன் செய்து நமது பரிவர்த்தனை பாஸ்வோர்டை டைப் செய்ய வேண்டும்?’ என சம்பந்தப்பட்டவர்கள் சிந்திக்க வேண்டும்” என்கிறார் சரவணன்.

“பொருளை விற்பவராக இருந்தால், சம்பந்தப்பட்ட நபரை நேரில் சந்திக்காமல் வாகனங்கள், மின்னணு பொருட்களை விற்கக் கூடாது. அப்படியே சந்தித்தாலும், விற்பது நீங்கள். உங்களுக்குத்தான் அவர்கள் பணம் செலுத்த வேண்டுமே தவிர, நீங்கள் அவர்களுக்கு ரூ. 1 அல்லது வேறு எந்த தொகையோ செலுத்தக் கூடாது. இது ஒன்றும் பிரபல கடைகள் அல்லது மருந்தகங்களில் இருப்பது போல பேடிஎம் வாலட்டில் இருந்து கழித்துக் கொள்ளப்படும் பரிவர்த்தனை கிடையாது. முழுக்க, முழுக்க முன்பின் அறிமுகமில்லாத இரு நபர்களிடையே நடக்கும் பரிவர்த்தனை என்பதால் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்,” என்று அறிவுறுத்துகிறார் காவல்துறை அதிகாரி சரவணன்.

கடந்த ஆண்டு ஓஎல்எக்ஸ் தளத்தை பயன்படுத்தி நடந்த ஒரு மோசடியில் ராஜஸ்தான் மாநிலத்தில் குற்றவாளிகள் இருப்பதை அறிந்து அவர்களை பிடிக்க தமிழக காவல்துறையின் தனிப்படை சென்றது.

அங்குள்ள பரத்பூர் என்ற இடத்தில் நரேஷ் பால் சிங், பச்சு சிங் ஆகிய இரண்டு குற்றவாளிகளை ஒப்படைக்க ஒரு கிராமமே எதிர்ப்பு தெரிவித்தது. காரணம், இந்த கும்பல் பிறரிடம் மோசடி செய்து சுருட்டிய கோடிக்கணக்கான பணத்தை கிராமத்தினருடன் பகிர்ந்து உல்லாசமாக வாழ்ந்திருந்தது விசாரணையில் தெரிய வந்ததாக சைபர் கிரைம் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இது கிட்டத்தட்ட நடிகர் கார்த்தி நடித்த தீரன் படத்தை ஒத்த காட்சி போல இருக்கிறது.

இது ஏதோ தமிழ்நாட்டில் மட்டும் நடக்கும் ஆன்லைன் குற்றம் அல்ல. இந்தியாவின் பல மாநிலங்களிலும் இந்த குற்றங்கள் கடந்த சில ஆண்டுகளாகவே நடக்கின்றன.

டெல்லி காவல்துறை கடந்த ஆண்டு பகிர்ந்த தகவலின்படி தலைநகரில் பதிவான ஆன்லைன் மோசடி குற்றங்களில் கிட்டத்தட்ட 62 சதவீதம் சமூக ஊடக தளங்கள் தொடர்புடையவை. இதையடுத்து சில மாதங்களுக்கு முன்பு விழிப்புணர்வு காணொளியை தயாரித்து தமது சமூக பக்கங்கள் வாயிலாக டெல்லி காவல்துறை வெளியிட்டது.

டெல்லியை அடுத்த ஹரியாணாவின் குருகிராமிலும் இதுபோன்ற மோசடிகள் அதிகமாக நடக்கின்றன.

இந்தியாவில் சட்டங்கள் கடுமையாக இல்லை

இந்தியாவில் வங்கியில் பதிவு செய்யப்பட்ட செல்பேசி எண் மூலம் இணைக்கப்பட்ட யுபிஐ பரிவர்த்தனை செயலி, பேடிஎம் செயலி போன்றவை ஆன்லைன் பணப்பரிவர்த்தனைக்கு பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், அவற்றில் மோசடி நடக்கும்போது அந்த நிறுவனங்களை பொறுப்புடைமை ஆக்க முடியாது.

அமெரிக்காவில் இதுபோன்ற பணப்பரிவர்த்தனையில் மோசடிகளை தடுக்கும் பொறுப்பு அந்தந்த பரிவர்த்தனை செயலிகளுக்கே உண்டு. அதை சார்ஜ் பேக் என்று அந்நாட்டில் அழைக்கிறார்கள் என்கிறார் ஹரியாணா காவல்துறையின் சைபர் பிரிவு காவல்துறை உயரதிகாரி ஒருவர்.

இது குறித்து ஓஎல்எக்ஸ் நிறுவனத்தை தொடர்பு கொண்டபோது, இதுபோன்ற குற்றங்களை தடுக்க மூன்று வழிகளை கையாளுவதாகக் கூறியது.

அந்த நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர், “ஆரம்பத்திலேயே தங்களுடைய விவரங்களை பதிவிடும் நபர் போலியானவர் என தெரிய வந்தால், அவரது பதிவையே தடுப்போம். இரண்டாவதாக, எங்களுடைய தளத்தை எவ்வாறு பாதுகாப்பாக பயன்படுத்தலாம் என்ற யோசனையை பயனர்களுக்குத் தருகிறோம். மூன்றாவதாக, மோசடி நடப்பது குறித்து எங்களுடைய கவனத்துக்குத் தெரிவித்தால், உடனடியாக காவல்துறையிடம் அது தொடர்பான புகாரை எப்படி செய்வது என்ற வழிகாட்டுதல்களை பயனருக்கு வழங்குவோம்,” என்று கூறினார்.

பேடிஎம் நிறுவனமும் தமது பங்குக்கு ‘விழிப்புடன் இருங்கள்’ என்ற ஒரு பக்கத்தை தமது இணையதளத்தில் பகிர்ந்து கியூஆர் கோட் ஸ்கேன் செய்யும்போது எப்படி கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறது. ஆனால், இவை எல்லாம் மோசடி நடக்கும்போது பயனர்களின் கவனத்தில் படுவதில்லை என்றே தோன்றுகிறது.

டெல்லி முதல்வரின் மகள் ஏமாந்த சம்பவம்

அரவிந்த் கேஜ்ரிவால்டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவாலின் மகள் ஹர்ஷிதா கேஜ்ரிவால். இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் (ஐஐடி-டெல்லி) வேதிப் பொறியியல் பிரிவில் பட்டம் பெற்றவர். ஓஎல்எக்ஸில் தமது வீட்டு சோஃபாவை விற்பதற்காக விளம்பரம் செய்திருந்தார். அதை பார்த்த நபர், ஹர்ஷிதாவுக்கு ஒரு QR குறியீட்டை அனுப்பினார்., அதைத்தொடர்ந்து தொகையைப் பெறுவதற்காக அதை ஸ்கேன் செய்தபோது, அவரது நம்பகத்தன்மையை பெற முதலில் ஒரு சிறிய தொகையை மாற்றினார் ஹர்ஷிதா. பிறகு, அவரது கணக்கில் இருந்து முதலில் ரூ .20,000 மற்றும் ரூ .14,000 என மொத்தம் ரூ. 34 ஆயிரம் டெபிட் ஆனது.

கடந்த பிப்ரவரி மாதம் நடந்த இந்த மோசடிக்குப் பிறகு விசாரணை நடத்திய டெல்லி சிவில் லைன்ஸ் காவல் நிலைய அதிகாரிகள், சாஜித், கபில், மனவேந்திரா ஆகியோரை கைது செய்தது. போலி கணக்குகளை தொடங்குதவற்கு உதவி செய்த நான்காவது நபர் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார்.

மத்திய உள்துறை சைபர் கிரைம் பிரிவின் அறிவுரைகள்

இதுபோன்ற ஆன்லைன் மோசடிகள் நடக்கும்போதெல்லாம் சம்பந்தப்பட்ட பயனர் எப்படி தான் ஏமாறாமல் தற்காத்துக் கொள்வது? மத்திய உள்துறை சைபர் பிரிவு என்ன அறிவுரைகளை வழங்குகிறது?மத்திய உள்துறை

  • வங்கியில் இருந்த பணம் மோசடி செயல்பாடுகள் மூலம் டெபிட் ஆகியிருந்தால், உடனே அந்த வங்கியின் கிளை அல்லது ஆன்லைனில் அதுபற்றிய புகாரை பதிவு செய்வது அவசியம். பிறகு மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையில் புகார் தெரிவிக்க வேண்டும். மத்திய உள்துறை அமைச்சகமும் https://cybercrime.gov.in/ என்ற இணையதளத்தை நடத்தி வருகிறது. அதில் எழுத்துபூர்வமாகவோ 24 மணி நேரமும் இயங்கும் புகார் சேவை மையம் மூலமாகவோ புகாரை பதிவு செய்யலாம்.
  • ஆன்லைன் விளம்பர தளங்கள் அல்லது கியூஆர் கோடு தொடர்புடைய பணப்பரிவர்த்தனையில் ஈடுபடும்போது முதலில் பொருட்களை வாங்குபவர் அல்லது விற்பவரின் நம்பகத்தன்மையை பல வழிகளில் உறுதிப்படுத்த வேண்டும். வாட்ஆப் செல்பேசி எண்ணாக இருந்தால் அதில் இடம்பெற்ற ‘டிபி”, அதன் பெயர் போன்ற விவரங்களையும் அதில் பேசும் நபரும் ஒன்றுதானா என அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். அப்படி இல்லாவிட்டால், அழைப்பு வந்த எண்ணை கூகுள் சர்ச்சில் தட்டச்சு செய்து, பேசிய நபரின் விவரங்கள் கூகுள் சர்ச்சில் வருகிறதா என பார்க்கலாம். பெரும்பாலும்இந்த முயற்சியிலேயே அழைக்கும் எண்கள் மோசடியானவை என்பதை அதைக் குறிப்பிட்டே பலரும் செய்த முந்தைய புகார்கள் மூலம் அறியலாம்.
  • பொருளை வாங்குபவரும், விற்பவரும் காட்டும் அவசரத்தனம் அல்லது ஆசையைத் தூண்டும் பேச்சுகளை தரம் பிரித்து அறிந்து கொள்ள வேண்டும்.
  • எந்தவொரு கட்டத்திலும் ஆன்லைனில் பொருளை விற்பதாகவோ வாங்குவதாகவோ இருந்தால், கியூஆர் கோட் பரிவர்த்தனையை செய்யாதீர்கள். அத்தகைய பரிவர்த்தனை அனைத்துமே மோசடியின் அடையாளம். ஆன்லைனில் யுபிஐ பணப் பரிவர்த்தனை என்பது நேரடியாக யுபிஐ அல்லது யுபிஐ தொடர்புடைய செயலிக்குள் நுழைந்து உங்களால் ‘அப்ரூவ்ட்” செய்யப்பட்டு பாஸ்வோர்ட் அழுத்திய பிறகே வங்கிக்கணக்கில் இருந்து பணத்தை டெபிட் செய்யும் வசதியைத் தருவது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
  • ஆன்லைனில் முன்பின் அறிமுகமில்லாத நபரிடம் இருந்து முன்பணத்தை வாங்காதீர்கள். பொருட்களை விற்பதாகவோ வாங்குவதாகவோ இருந்தால் இயன்றவரை நேரில் பேசி பணத்தை தரும் வகையில் கொண்ட பரிவர்த்தனையை மேற்கொள்ளுங்கள்.
  • ஆன்லைன் பரிவர்த்தனை மோசடியின் உச்சமாக, வாடிக்கையாளர் அல்லது பயனரின் நம்பிக்கையை பெற, இந்திய பாதுகாப்புப் படை, காவல்துறை, எல்லை பாதுகாப்புப்படை அல்லது மத்திய, மாநில அரசுகளில் பணியாற்றுவதாகக் கூறி தங்களுடைய அடையாள அட்டையை பகிர்வது, சீருடையில் தோன்றி காணொளி காட்சியில் பேசும் போக்கு நடக்கிறது. அத்தகைய நபர்களிடம் ஜாக்கிரதையாக இருங்கள்.
  • சைபர் குற்றங்களில் சட்ட அமலாக்க அமைப்புகள் அவற்றின் கடமையை செய்வது ஒருபுறமிருந்தாலும், இதுபோன்ற குற்றங்களைத் தடுக்க, பயனரின் விழிப்புணர்வும் எச்சரிக்கை உணர்வும் மட்டுமே கைகொடுக்கும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

(நன்றி BBC TAMIL)