உத்தர பிரதேச மாநிலம் லக்மிபூர் கேரி மாவட்டத்தில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்தில் இரண்டு விவசாயிகள் உள்பட ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். லக்மிபூர் கேரி மாவட்ட ஆட்சியர் டாக்டர் அரவிந்த் சௌரேசியா இந்தத் தகவலை பிபிசி இந்தி செய்தியாளர் சமீரத்மாஜ் மிஸ்ராவிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.
உயிரிழந்தவர்களில் இருவர் கார் ஒன்று மோதி உயிரிழந்தனர் என்றும் அவர்கள் பயணித்த வாகனம் கவிழ்ந்ததால் மூவர் உயிரிழந்தனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பாஜக அமைச்சர், அவர் மகன் மற்றும் உறவினர்கள் கார் அணிவகுப்பு மோதியதில் இரண்டு விவசாயிகள் உயிரிழந்தனர் என்று விவசாயிகள் அமைப்பு தெரிவிக்கிறது.
என்ன நடந்தது?
உத்தர பிரதேச மாநில துணை முதலமைச்சர் கேசவ பிரசாத் மௌரியா லக்மிபூர் கேரி மாவட்டத்தில் பல அரசு திட்டங்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அதன்பின்பு மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா டேனியின் சொந்த ஊரில் சில நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இருந்தார்.
இந்தத் தகவலை அறிந்த விவசாயிகள் துணை முதலமைச்சர் கேசவ பிரசாத் மௌரியாவுக்கு கருப்புக் கொடி காட்ட அங்கு திரண்டிருந்தனர்.
இந்த நிகழ்வின் போது திகோனியா என்னும் ஊரில் திரண்டிருந்த சில விவசாயிகள் மீது பாஜக ஆதரவாளர்களின் கார் மோதியது. அப்போது கோபமடைந்து விவசாயிகள் அந்த காருக்கு தீ வைத்தனர். அங்கு பதற்றமான சூழல் உண்டானதால் துணை முதலமைச்சரின் நிகழ்ச்சிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டன.
மாவட்ட ஆட்சியர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டோர் அங்கு விரைந்தனர். காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை இணையமைச்சரின் மகனுக்கு சொந்தமான கார் மோதியதால் மூன்று விவசாயிகள் உயிரிழந்தனர் என்று விவசாயிகள் அமைப்பான பாரதிய கிசான் யூனியன் குற்றம்சாட்டியுள்ளது.
“துணை முதலமைச்சர் கேஷவ பிரசாத் மௌவுரியா ஹெலிகாப்டர் மூலம் சென்றதால் அவருக்காக அமைக்கப்பட்டிருந்த ஹெலிபேடில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அவரை இறங்கவிடாமல் தடுக்க விவசாயிகள் சூழ்ந்துகொண்டிருந்தனர். நிகழ்ச்சி முடிந்த பின்னர் அங்கிருந்து மக்கள் திரும்பி சென்று கொண்டிருந்தனர். அமைச்சர் அஜய் மிஸ்ரா டேனி, அஜய் மிஸ்ராவின் மகன் மற்றும் மாமா ஆகியோர் இருந்த மூன்று வாகனங்கள் விவசாயிகள் மீது மோதின. அதில் ஒரு விவசாயி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் இன்னொருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார்,” என்று விவசாயிகள் தலைவர் டாக்டர் தர்ஷன் பால் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளார்.
விவசாயிகள் தலைவர் தஜீந்தர் சிங் விர்க் என்ப வரும் கார் மோதியதால் பலத்த காயமடைந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரதிய கிசான் யூனியன் விவசாயிகள் சங்கத்தின் மூத்த தலைவர் ராகேஷ் தற்போது லக்மிபூர் விரைந்துள்ளார்.
இந்த மரணங்களுக்குப் பிறகு, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி-வத்ரா, சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் பாஜகவுக்கு எதிராக தங்களது கடும் கண்டனங்களை வெளியிட்டுள்ளனர்.
(நன்றி BBC TAMIL)