ஜவுளி தொழில் வளர்ச்சியடைய பஞ்சு விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.
”அதிக வேலைவாய்ப்பு தரும் தொழிலாகவும் தமிழகத்தின் பொருளாதாரத்தை உயர்த்திடும் முக்கிய தொழிலாகவும் விளங்குவது ஜவுளி தொழில். எனவே முதல்வர், பஞ்சு விலையைக் குறைக்கவும் ஆடைகளின் விலை உயராமல் பார்த்துக்கொள்ளவும் இத்தொழில் வளர்ச்சியடையவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
அதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது ” உழவுத் தொழிலுக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் அதிக வேலை வாய்ப்பினைத் தரும் தொழிலாகவும், தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துகின்ற முக்கியத் தொழிலாகவும், அன்னியச் செலாவணியை ஈட்டுகின்ற தொழிலாகவும் ஜவுளித் தொழில் விளங்குகின்றது என்று சொன்னால் அது மிகையாகாது.
தமிழ்நாட்டில், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஆயத்த ஆடை தொழிற்சாலைகள், விசைத்தறித் தொழில் மற்றும் ஜவுளித் தொழில்களை மேற்கொள்ளும் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்தியாவின் துணிகள் உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு மகத்தானது என்பதோடு மட்டுமல்லாமல், இந்தத் தொழிலின் மூலம் இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற பெண்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயனடைந்து வருகிறார்கள்.
10 ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச பருத்தி பஞ்சு விலை தற்போது உச்சபட்ச உயர்வு விலையினை எட்டியுள்ளதாகவும், சர்வதேச சந்தையிலிருந்து இறக்குமதி செய்யும் பஞ்சு விலை ஒரு கேண்டி, அதாவது 356 கிலோ, 59 ஆயிரம் ரூபாய் என்று இருந்தது தற்போது ஒரு கேண்டி 67 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துவிட்டதாகவும், இதன் விளைவாக உள் நாட்டிலும் பஞ்சு விலை ஒரு கேண்டி 55 ஆயிரம் ரூபாயிலிருந்து 60 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளதாகவும், தமிழ்நாட்டில் உள்ள நூற்பாலைகள் வசம் இருந்த பஞ்சு கையிருப்பு முற்றிலும் தீர்ந்துவிட்டதாகவும், தற்போது அதிக விலை கொடுத்து பஞ்சு வாங்க வேண்டியுள்ள சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக நூற்பாலைகளின் உற்பத்தி செலவினம் அதிகரித்துள்ளதாகவும், இதன் காரணமாக ஜவுளித் தொழிலில் ஈடுபட்டுள்ளோர் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் பத்திரிகையில் செய்திகள் வந்துள்ளன.
கடந்த சில மாதங்களாக ஏறுமுகமாக உள்ள பஞ்சு விலையை கட்டுப்படுத்துவதோடு, விலையில் ஒரு நிலைத் தன்மையை உருவாக்க வேண்டும் என்பதே ஜவுளித் தொழிலில் ஈடுபட்டுள்ளோரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. பஞ்சு விலை உயர்ந்து கொண்டே செல்வதன் காரணமாக, ஆடைகளின் விலை கடந்த சில நாட்களாக கிட்டத்தட்ட 20 விழுக்காடு உயர்ந்துள்ளதாக ஜவுளித் தொழிலில் ஈடுபட்டுள்ளோரும், நுகர்வோரும் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக, பண்டிகைகள் மற்றும் திருமணங்களை முன்னிட்டு ஆடைகள் வாங்குவோரின் சுமை கூடிக்கொண்டே போகிறது.
இப்போதுதான் கொரோனாவின் தாக்கம் ஓரளவு குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில், கூடுதல் சுமையை தாங்கிக் கொள்ளக்கூடிய நிலையில் பொதுமக்கள் இல்லை என்பதுதான் யதார்த்தமான நிலைமை. பஞ்சு விலை என்பது சர்வதேச சந்தையை ஒட்டியும், மத்திய அரசின் ஏற்றுமதி-இறக்குமதி கொள்கைக்கு ஏற்பவும் அமைந்துள்ளது என்றாலும், இந்தத் தொழில் மூலம் தமிழ்நாடு – அரசிற்கு அதிக வருவாய் வருகிறது என்பதையும், இந்தத் தொழிலில் தமிழ்நாட்டின் பங்கு அதிகம் இருக்கிறது என்பதையும் கருத்தில் கொண்டு மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடியாக தலையிட்டு, மத்திய அரசிற்கு கொடுக்க வேண்டிய அழுத்தத்தைக் கொடுத்து, பஞ்சு விலையை குறைக்கவும், ஆடைகளின் விலை உயராமல் பார்த்துக் கொள்ளவும், இந்தத் தொழில் தொடர்ந்து வளர்ச்சியடையவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்” என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
(நன்றி Tamil Samayam)