காற்று மாசுவை கட்டுப்படுத்த டில்லிக்கு ரூ.18 கோடி ஒதுக்கீடு

புதுடில்லி: தேசிய தூய்மையான காற்று திட்டத்தின் கீழ், தலைநகர் டில்லிக்கு காற்று மேலாண்மைக்காக ரூ.18 கோடியை மத்திய அரசு நிதி ஒதுக்கி உள்ளது.

வரும் 2024ம் ஆண்டிற்குள் தேசிய அளவில் பிஎம் 2.5, பிஎம்10 ஆகிய நுண்துகள்களை 20ல் இருந்து 30 சதவீதமாக குறைக்கும் நோக்கத்தோடு கடந்த 2017 ல் தேசிய தூய்மையான காற்று திட்டம் துவக்கப்பட்டது. தேசிய காற்று கண்காணிப்பு திட்டத்தின் கீழ் 2011- 15ம் ஆண்டு காலகட்டத்தில் பெறப்பட்ட சுற்றுப்புற காற்றின் தகவல்கள் அடிப்படையில், நிர்ணயம் செய்யப்பட்ட சுற்றுப்புற காற்றின் தர நிலையை இந்தியாவில் 132 நகரங்கள் பூர்த்தி செய்யவில்லை என்பது தெரியவந்தது.

கடந்த 2017 ம் ஆண்டு டில்லியில் பிஎம் 10 வகை நுண்துகள்கள், ஒரு மீட்டருக்கு சராசரியாக 240 மைக்ரோ கிராமாக இருந்தது. இதனை 2024ம் ஆண்டிற்குள் 168 மைக்ரோ கிராமாக குறைக்க வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், தேசிய தூய்மையான காற்று திட்டத்தின் கீழ் இரண்டு ஆண்டுகளாக நிதி கிடைக்கவில்லை. 2000 சிசிக்கு மேல் உள்ள டீசல் வாகனங்களுக்கும், டில்லிக்குள் நுழையும் வணிக வாகனங்களுக்கும் மாசு வரி விதிக்கப்பட்டது. அதன் மூலம் அதற்கு நிதி கிடைத்தது. இம்முறை தேசிய தூய்மை காற்று திட்டத்தின் கீழ் ரூ.18 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

latest tamil newsஏற்கனவே நிதிக்குழு மூலம் 50 நகரங்களுக்கு, காற்று மேலாண்மைக்காக சரியான அளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. எஞ்சியுள்ள 82 நகரங்களுக்கான நிதிநிலை மேம்பட்டுள்ளது. இதனால், டில்லிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த ஆண்டு 82 நகரங்களுக்கு மட்டும் 290 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

(நன்றி Dinamalar)