சென்னை கே.பி. பார்க் கட்டட விவகாரம்: ஓபிஎஸ் மீது நடவடிக்கை பாயுமா? ஐஐடி குழு அறிக்கையால் இனி என்ன நடக்கும்?

சென்னை கேசவபிள்ளை பூங்கா பல அடுக்கு கட்டட விவகாரத்தில் ஐ.ஐ.டி நிபுணர் குழு அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் `மக்களுக்குத் திட்டங்களைக் கொடுப்பதை விட தனக்குத்தானே லாபம் சம்பாதிப்பதுதான் ஓ.பன்னீர்செல்வத்தின் தலையாய பணியாக இருந்துள்ளது,’ என்கிறார் தி.மு.க எம்.எல்.ஏ பரந்தாமன். என்ன நடக்கிறது?

சென்னை புளியந்தோப்பில் உள்ள கே.பி. பார்க் எனப்படும் கேசவபிள்ளை பூங்காவில் குடிசை மாற்று வாரியம் சார்பில் 2016ஆம் ஆண்டு 1,920 வீடுகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன. இதற்காக ரூ.112 கோடி ரூபாய் செலவிடப்பட்டது.

இந்த கட்டடம் கட்டி முடிக்கப்பட்ட பிறகு கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்ததால், கொரோனா வார்டாகவும் இந்தக் கட்டடம் பயன்பட்டன. இந்த நிலையில், இந்த கட்டடங்கள் தொட்டாலே உதிரும் வண்ணம் உள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவிட்டார்.

மேலும், ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கும் எலக்ட்ரிக் ஷேவருக்கு கூட ஓராண்டு கியாரண்டி உள்ளதாகவும் கமல் விமர்சித்தார்.

இதையடுத்து, ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு உள்பட அதிகாரிகள் கே.பி.பார்க் அடுக்குமாடி கட்டடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த விவகாரத்தில் குடிசை மாற்று வாரியத்தின் உதவிப் பொறியாளர் பாண்டியன், உதவி நிர்வாக பொறியாளர் அன்பழகன் ஆகியோர் தற்காலிக பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக, சட்டப்பேரவையில் எழும்பூர் தொகுதி எம்.எல்ஏ பரந்தாமன் கவன ஈர்ப்புத் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்தார்.

.பி.எஸ் மீது கிரிமினல் நடவடிக்கை

அப்போது பரந்தாமன், “புளியந்தோப்பு குடிசை மாற்று வாரிய வீடுகள் தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சுமத்துகின்றனர். இந்தக் கட்டடம் 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 2019ஆம் ஆண்டிலேயே முடிக்கப்பட்டு விட்டது. கையால் தொட்டாலே விழுகின்ற வகையில் இந்தக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது,” என்றார்.

தொடர்ந்து பேசுகையில், “கடந்த 10 ஆண்டுகளில் அ.தி.மு.க ஆட்சியில் கட்டி முடிக்கப்பட்ட அனைத்து கட்டடங்களையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். இதற்குச் சான்றிதழ் அளித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அந்த காலகட்டத்தில் அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார். இதற்குப் பதில் அளித்த அமைச்சர் தா.மோ.அன்பரசன், ` கே.பி பார்க் கட்டட விவகாரம் தொடர்பாக ஐ.ஐ.டி குழு ஆய்வு செய்யும். அதன் பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

441 பக்க அறிக்கை

கட்டடம்இதையடுத்து, சென்னை ஐ.ஐ.டி பேராசிரியர் பத்மநாபன் தலைமையிலான CUBE (Centre for Urbanisation, Building and Environment) குழுவினர் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக கே.பி பார்க் பன்னடக்கு குடியிருப்பை ஆய்வு செய்தனர். இதுதொடர்பான அறிக்கையை சென்னை நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் கோவிந்தராவிடம் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி அக்குழு சமர்ப்பித்தது.

இதைத்தொடர்ந்து கே.பி பார்க் கட்டடத்தின் மாதிரிகளை ஆய்வு செய்யும் பணியில் குழுவில் ஈடுபட்டனர். இதன் இறுதி அறிக்கையை கடந்த 4ஆம் தேதி கோவிந்தராவிடம் ஐஐடி குழு சமர்ப்பித்தது. சுமார் 441 பக்கங்கள் கொண்டதாக அந்த அறிக்கை இருந்தது.

அதில், ‘பன்னடக்கு கட்டடம் அதற்குரிய தரத்துடன் கட்டப்படவில்லை. அதனைக் கட்டிய கட்டுமான நிறுவனத்தின் மீதும் குடிசை மாற்று வாரியத்தின் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனப் பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், `தமிழ்நாடு முழுவதும் மேற்கண்ட கட்டுமான நிறுவனத்தின் சார்பில் கட்டப்பட்ட அனைத்துக் கட்டங்களையும் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் அந்த நிறுவனத்தைக் கறுப்புப் பட்டியலில் வைக்க வேண்டும்’ எனவும் நிபுணர் குழுவினர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பணம் சம்பாதிக்கவே திட்டங்கள்

`கே.பி.பார்க் பன்னடக்கு குடியிருப்பு விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என அமைச்சர் உறுதியளித்திருந்த நிலையில், நிபுணர் குழுவின் அறிக்கையை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக அரசியல் வட்டாரத்தில் கவனிக்கப்படுகிறது.

இது தொடர்பாக, எழும்பூர் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ பரந்தாமனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.

திமுக“கடந்த அ.தி.மு.க ஆட்சியின் அலங்கோலத்தையே இது காட்டுகிறது. மக்களுக்குத் திட்டங்களைக் கொடுப்பதைவிட தனக்குத்தானே லாபம் சம்பாதிப்பதுதான் பன்னீர்செல்வத்தின் தலையாய பணியாக இருந்துள்ளது. இவர்கள் பணம் சம்பாதிப்பதற்காகவே திட்டங்களைக் கொண்டு வந்தனர். கிராமங்களில் மலையடிவாரங்களில் எல்லாம் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் மூன்று அடுக்கு, நான்கு அடுக்குக் கட்டங்களைக் கட்ட வேண்டிய அவசியம் என்ன?” என்கிறார்.

தொடர்ந்து பேசுகையில், “கடந்த ஆட்சியில் இவர்கள் விரும்பும் ஒப்பந்தாரர்களுக்கு வேலைகளைக் கொடுத்து பணத்தைச் சம்பாதித்தனர். அதுதான் கடந்த 10 ஆண்டுகளாக நடந்தது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைத்தான் கே.பி. பார்க் விவகாரம் காட்டுகிறது. இதுதொடர்பாக, சட்டமன்றத்தில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்த பிறகு குறிப்பிட்ட நிறுவனம் கட்டிய கட்டடங்கள் தரமற்று இருப்பதாக செய்திகள் வெளிவந்தன. இந்த நிறுவனம் கட்டிய பாலங்கள், மழையில் அடித்துக் கொண்டு போனதாகவும் தகவல் வெளியானது. இதுதொடர்பாக நான் சட்டமன்றத்திலும் பேசியுள்ளேன். இந்த நிறுவனத்தை கறுப்புப் பட்டியலில் வைப்பதுதான் சரியான நடவடிக்கை. இதுதொடர்பான மேல் நடவடிக்கைகளை துறையின் அமைச்சருடன் கலந்து ஆலோசித்து முதலமைச்சர் எடுப்பார்,” என்கிறார்.

அதிமுக நிலைப்பாடு என்ன?

பன்னீர்செல்வம்புளியந்தோப்பு பன்னடக்கு கட்டட விவகாரத்தில் தி.மு.க எம்.எல்.ஏவின் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் மகேஸ்வரிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.

“கட்டுமானத்தில் எதாவது குறைகள் இருந்தால் அதனை அதிகாரிகள் கவனிக்க வேண்டும். மேலும், கட்டுமானம் நடைபெறும் காலங்களில் துறையின் அமைச்சர் சென்று ஆய்வு செய்வது வழக்கம். இதைத்தான் அவரால் செய்ய முடியும். அவ்வப்போது பார்வையிட வேண்டுமானால் செல்லலாம். அதற்காக முழுக்க முழுக்க பக்கத்தில் இருந்தே அனைத்தையும் கவனிக்க முடியாது. அதற்கென பொறுப்பில் உள்ள அதிகாரிகள்தான் கவனிக்க வேண்டும்” என்கிறார்.

மேலும், “முதலிலேயே கே.பி. பார்க் கட்டடம் தொடர்பான தகவல் வந்திருந்தால், அந்தக் கட்டடம் கட்டப்படுவதை ஓ.பி.எஸ் முழுமையாக கண்காணித்திருப்பார்.

இந்த விவகாரத்தில் தரம் குறைந்த பொருள்களைப் பயன்படுத்திய கட்டுமான நிறுவனத்தை கறுப்புப் பட்டியலில் வைப்பதுதான் சரியான நடவடிக்கையாக இருக்கும். அப்போதுதான் எதிர்காலத்தில் தவறு செய்தவதற்கு மற்ற நிறுவனங்கள் பயப்படும். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது நடவடிக்கை எடுப்பதில் எங்களுக்கு எந்தவித ஆட்சேபனைகளும் இல்லை.

அதேநேரம், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, தி.மு.க தலைவரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் எழும்பூர் எம்.எல்.ஏ பரந்தாமன் பேசியிருக்கிறார். அப்படித்தான் இதனைப் பார்க்க வேண்டியுள்ளது. கே.பி. பார்க் விவகாரத்தில் அமைச்சராக இருந்த ஓ.பி.எஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறுவதெல்லாம் ஏற்புடையதல்ல,” என்கிறார்.

(நன்றி BBC TAMIL)