தமிழ்நாடு அரசியல்: வி.கே. சசிகலாவை தூண்டிவிடுகிறதா தி.மு.க – பொன்விழா நேரத்தில் அ.தி.மு.க குற்றச்சாட்டு ஏன்?

பொன்விழா கொண்டாட்டங்களுக்கு அ.தி.மு.க தயாராகி வரும் வேளையில், சசிகலாவின் அடுத்தடுத்த அறிக்கைகள் அக்கட்சியின் தலைமையை கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளன. `ஓ.பி.எஸ்ஸும் இ.பி.எஸ்ஸும் ஒற்றுமையாக செயல்படுவது உண்மையென்றால், மதுசூதனன் இறந்த பிறகு புதிய அவைத் தலைவரை தேர்வு செய்வதில் தாமதம் ஏன்?’ எனக் கேள்வியெழுப்புகிறார் மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம். என்ன நடக்கிறது அ.தி.மு.கவில்?

`அண்ணா தி.மு.க’ என்ற கட்சி தொடங்கப்பட்டு வரும் அக்டோபர் 17 ஆம் தேதியோடு 50 ஆண்டுகள் ஆகின்றன. இதனையொட்டி அக்கட்சியின் பொன்விழாவை கொண்டாடும் பணிகளில் பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக தலைமைக் கழகத்தைப் புதுப்பிக்கும் பணிகள் நடந்தன. இந்நிலையில், வரும் 16 ஆம் தேதி மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் சமாதிக்கு சசிகலா செல்ல உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் தொடர்ச்சியாக, மறுநாள் ராமாவரத்தில் உள்ள எம்.ஜி.ஆரின் இல்லத்துக்குச் செல்லவும் அவர் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஜெயலலிதா சொல்லிச் சென்றது என்ன?

இதுதொடர்பாக, நமது எம்.ஜி.ஆர் நாளிதழில் சசிகலா கூறியதாக செய்தி ஒன்று வெளியாகியிருந்தது. அதில், `ஜெயலலிதா சொல்லி சென்றதை ஒவ்வொரு தொண்டனும் மனதில் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும். மற்றவர்களைப் பற்றியெல்லாம் நாம் கவலைப்பட வேண்டாம். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் மீது உண்மையிலேயே பாசம் வைத்திருப்பவர்கள் இந்தக் கட்சியை விட்டுப் போக மாட்டார்கள்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

அந்தச் செய்தியில், `தொண்டர்களின் மனக்குமுறலைப் பார்த்தேன். இனியும் அதைப் பார்த்துக் கொண்டு என்னால் அமைதியாக இருக்க முடியாது. எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு ஜெயலலிதாவுடன் இருந்து இந்தக் கட்சியை பழைய நிலைக்குக் கொண்டு வந்தேன். எனவே, நான் கட்சிக்கு வந்து அனைவரையும் நல்லபடியாகக் கொண்டு செல்ல வேண்டும். மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சியை கொண்டு வரவேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை’ எனத் தெரிவித்திருந்தார்.

சசிகலா எழுதிய கடிதம்

இதன் தொடர்ச்சியாக, ‘எல்லோரும் நம் பிள்ளைகள்தான்’ என்ற தலைப்பில் சசிகலா எழுதியுள்ள கடிதத்தில், ` கட்சி வீணாவதை ஒரு நிமிடம்கூட கட்சியை வளர்த்த நம்மால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். எல்லோரும் அ.இ.அ.தி.மு.க பிள்ளைகள்தான். அ.தி.மு.க என்பது தொண்டர்களின் இயக்கம். அதனை எப்போதும் தொண்டர்கள் நிரூபித்துக் காட்டுவார்கள். கட்சித் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள், தொண்டர்களை ஒரு தாய் போல அனுசரணையாக இருந்து காப்பாற்ற வேண்டும். இப்போது அதுபோன்ற சூழல் இல்லை. விரைவில் வருகிறேன், அனைவரையும் சந்திக்கிறேன்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

ஒபிஎஸ் , இபிஎஸ்கொரோனா இரண்டாம் அலை காரணமாக, சுற்றுப்பயணம் செல்லும் முடிவை சற்று ஒத்திவைத்திருந்த சசிகலா, தற்போது மீண்டும் பேசத் தொடங்கியிருப்பதை அ.தி.மு.க வட்டாரத்தில் உன்னிப்பாகக் கவனிக்கின்றனர். `இரண்டாவது இன்னிங்ஸை சசிகலா தொடங்கிவிட்டார்’ எனவும் அ.ம.மு.க நிர்வாகிகள் பேசி வருகின்றனர்.

“ இதேபோல், பலமுறை சசிகலா சபதம் விடுத்துப் பேசியுள்ளார். அது எதுவும் எடுபடவில்லை. தற்போது மீண்டும் ஒரு கலகத்தை உருவாக்க முனைகிறார். இதன் பின்னணியில் தி.மு.க இருப்பதாகவே பார்க்க முடிகிறது. அவர்கள் இருவருக்கும் இடையில் நல்ல புரிதல் இருக்கிறது. மிடாஸ் உள்பட வணிகரீதியாகவும் தி.மு.கவுன் தயவு அவர்களுக்குத் தேவை உள்ளது. அதனால்தான் இதுபோன்ற பயமுறுத்தல்களை ஏற்படுத்தப் பார்க்கிறார்” என்கிறார், அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் கோவை மகேஸ்வரி.

சசிகலாவை தி.மு. தூண்டிவிடுகிறதா?

தொடர்ந்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், ”அ.தி.மு.கவுக்கும் சசிகலாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. `அ.ம.மு.க’ என்ற இயக்கத்தை தினகரன் தொடங்கியபோது அதன் பொதுச்செயலாளராக சசிகலா இருந்தார். பின்னர், அந்தக் கட்சிக்கு தினகரன் பொதுச்செயலாளரானார். தலைவர் பதவியை சசிகலாவுக்காக ஒதுக்கியுள்ளதாகவும் தெரிவித்தார். அ.தி.மு.கவுக்கு எதிராக செயல்படக் கூடாது என எந்த இடத்திலும் சசிகலா பேசியது இல்லை. அப்படியிருக்கும்போது எப்படி அவர் உரிமை கொண்டாட முடியும்? இரட்டைத் தலைமையின்கீழ் அ.தி.மு.க சிறப்பாகச் சென்று கொண்டிருக்கிறது. சசிகலாவின் பேச்சுக்களால் எந்தவித சலனமும் ஏற்படப் போவதில்லை.

அவர் பக்கம் இருந்த முக்கிய தலைவர்கள் எல்லாம் அ.தி.மு.க பக்கம் வந்துவிட்டனர். அ.தி.மு.க தலைமையால் நிராகரிக்கப்பட்ட சிலர், தி.மு.க பக்கம் சென்றுவிட்டனர். அ.தி.மு.கவில் அடிப்படை உறுப்பினராகக் கூட சசிகலா இல்லை. அ.தி.மு.கவுக்கு உரிமை கோரி டெல்லி உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் சசிகலா போட்ட வழக்குகள் எல்லாம் தள்ளுபடி ஆகிவிட்டன. அதற்கு மாறாக சென்னை சிவில் நீதிமன்றம் தீர்ப்பு கொடுக்கும் என எதிர்பார்க்க முடியுமா என்ன? அ.தி.மு.கவில் இரட்டைத் தலைமை என்பது இறுதி செய்யப்பட்ட ஒன்றாக மாறிவிட்டது” என்கிறார்.

மேலும், “ அ.தி.மு.க பொதுக்குழுவில் எடுத்த முடிவை கேள்வி கேட்க முடியாது என்ற தீர்ப்பும் வந்துவிட்டது. இதனால் இந்தக் கட்சியை எப்படியாவது வலுவிலக்கச் செய்ய வேண்டும் என சிலர் முயற்சி செய்கின்றனர். உள்ளாட்சித் தேர்தலில் பல்வேறு குறுக்கு வழிகளை தி.மு.க கையாண்டது. நாங்களும் தேர்தல் நடத்தியுள்ளோம். இந்தளவுக்கு யாரும் மோசமாக நடத்தியதில்லை. தி.மு.கவின் தோல்வி பயத்துக்கு காரணம், அ.தி.மு.க வலுவாக இருப்பதுதான். அதனால் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சியாக சசிகலாவை பகடைக்காயாக தி.மு.க பயன்படுத்துகிறது” என்கிறார்.

எடப்பாடி ஏன் பயந்து ஓடினார்?”

”தி.மு.கவின் தூண்டுதலில்தான் சசிகலா இயங்குகிறாரா?” என தி.மு.கவின் சட்டத்துறை இணைச் செயலாளர் வீ.கண்ணதாசனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். “ எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரை எதிர்த்து அரசியல் செய்த ஓர் இயக்கத்துக்கு சசிகலாவை வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் கிடையாது. துக்க வீட்டில்கூட சசிகலாவை பார்த்து எடப்பாடி பழனிசாமி பயந்து ஓடினார். சசிகலாவை பார்த்து அவர் பயந்து ஓடியதற்கு தி.மு.கதான் காரணமா?” எனக் கேள்வியெழுப்புகிறார்.

மேலும், “ அ.தி.மு.கவை சசிகலாவை வைத்து தோற்கடிக்க வேண்டிய அவசியம் எங்களுக்குக் கிடையாது. சட்டமன்றத் தேர்தலின்போது, `அ.தி.மு.க ஆட்சிக்கு வர வேண்டும்’ என்றுதான் சசிகலா பேசினார். சசிகலா அரசியலுக்கு வருவதை ஓ.பி.எஸ்ஸும் இ.பி.எஸ்ஸும் தடுப்பதாக மக்கள் பரவலாகப் பேசி வருகின்றனர். அ.தி.மு.கவை அழிப்பதற்கு எடப்பாடியே போதும். அவர்களை அரசியல்ரீதியாக எதிர்ப்போமோ தவிர, சசிகலாவை வைத்து எதிர்க்க வேண்டிய அவசியம் இல்லை” என்கிறார்.

பாயாசம் சாப்பிட்ட எம்.ஜி.ஆர்

”சசிகலாவின் முயற்சிகளால் என்ன நடக்கும்?” என மூத்த பத்திரிகையாளர் ஷ்யாமிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். “ அ.தி.மு.கவில் உள்ள அனைவருமே உற்சாகமாக இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. 1972 அக்டோபர் 10 ஆம் தேதி தி.மு.கவில் இருந்து எம்.ஜி.ஆரை தற்காலிகமாக நீக்குகின்றனர். அப்போது அவர் தி.மு.கவின் பொருளாளராக இருந்தார். அவருக்கு அழைப்பு கொடுக்காமலேயே கட்சியில் இருந்து நீக்கிவிட்டனர்.

எம்.ஜி.ஆர்அப்போது ‘இந்து’ பத்திரிகை சார்பில் ராமாவரம் தோட்டத்துக்கு போன் செய்து கேட்டபோது, `நான் பாயாசம் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன்’ என எம்.ஜி.ஆர் பதில் கொடுத்தார். மறுநாள் பத்திரிகையில் அதுவே செய்தியாக வெளிவந்தது. அது ஒரு குறியீடாகப் பார்க்கப்பட்டது. அரசியல் என்பது சதவிகிதக் கணக்குகளில் கிடையாது. சசிகலா எடுக்கும் முயற்சி என்பது கட்சியில் உள்ள குறைபாடுகளை சுட்டிக் காட்டுவதாகவே பார்க்க முடிகிறது” என்கிறார்.

தொடர்ந்து பேசிய ஷ்யாம், “ ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் அ.தி.மு.கவின் உரிமையாளர்கள் கிடையாது. அ.தி.மு.க என்ற கட்சி அனைவருக்குமானது. எம்.ஜி.ஆரின் சட்ட விதிகளைப் பயன்படுத்திதான் இவர்கள் முடிவு செய்ய வேண்டும். அ.தி.மு.கவின் பைபிள் என்பது எம்.ஜி.ஆர் உருவாக்கிய சட்டவிதிகள்தான். அதன்படி, தொண்டர்கள்தான் கூடி முடிவெடுக்க வேண்டும்.

அனைவருக்குமான தலைவர்களா?

இவர்கள் இருவரும் ஒற்றுமையாக செயல்படுவது உண்மையென்றால், மதுசூதனன் இறந்த பிறகு புதிய அவைத்தலைவரையாவது தேர்வு செய்திருக்க வேண்டும். பொதுச்செயலாளர் என்பவர் கட்சியில் அதிக அதிகாரம் படைத்தவர். அவரைத் தேர்வு செய்ய வேண்டியது கட்சியின் அடிப்படைத் தொண்டர்கள். இதுதான் அ.தி.மு.கவின் அடிப்படை. கட்சியில் யாருக்கும் இடமில்லை என்று சொல்வதற்கு இவர்கள் யார்?” என்கிறார்.

”அ.தி.மு.கவில் இரட்டைத் தலைமை என்பதற்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் கொடுத்துவிட்டது. சசிகலா எந்த நம்பிக்கையில் இயங்குகிறார்?” என்றோம். “ அதற்குக் காலம்தான் பதில் சொல்ல வேண்டும். அ.தி.மு.கவின் வாக்குவங்கியாக கிராமப்புற பகுதிகள் உள்ளன. ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க தோல்வியடைந்தால் சசிகலா சொல்வது உண்மை என்றாகிவிடும். 2017 ஆம் ஆண்டுக்குப் பிறகு அ.தி.மு.கவில் பொதுக்குழுவே கூடவில்லை. உயர்மட்டக் குழுவையும் ஒருமுறைகூட கூடவில்லை. அ.தி.மு.கவில் ஒருமித்த கருத்து இல்லை என்பது தெளிவாகிறது” என்கிறார்.

ஜெயலலிதாதொடர்ந்து பேசுகையில், “ அனைவராலும் ஏற்றுக் கொள்ளக்கூடியவராக அ.தி.மு.கவில் யார் இருக்கிறாரோ அவரை தலைவராக ஏற்றுக் கொள்ளலாம். எடப்பாடியை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றால் ஆண்டிப்பட்டியில் நின்று வெற்றி பெற வேண்டும். சேலம் மாவட்டம், ஓமலூரில் நின்று ஓ.பி.எஸ் வெற்றி பெற வேண்டும். அப்படிச் செய்தால் அவரை ஏற்றுக் கொள்ளலாம். அதுவரையில் அவர்கள் இருவரும் அவரவர் பகுதிக்கான தலைவராகத்தான் இருப்பார்கள். சசிகலாவும் அப்படித்தான்” என்கிறார்.

“ பரங்கிமலை, அருப்புக்கோட்டை, ஆண்டிப்பட்டி என மாநிலம் முழுவதுமே எம்.ஜி.ஆர் போட்டியிட்டார். ஜெயலலிதாவும் காங்கேயம், போடி, ஆண்டிப்பட்டி, ஸ்ரீரங்கம், ஆர்.கே.நகர் எனப் பரவலாக போட்டியிட்டார். இவர்கள் யாராவது அவ்வாறு போட்டியிட்டுள்ளார்களா? எடப்பாடி தொகுதிக்குள்ளேயே போட்டியிட்டு தமிழ்நாட்டுக்கே தலைவர் என இ.பி.எஸ் சொல்வதை எப்படி ஏற்பது? அரசியல் தளத்தில் எதிர்க்கட்சி சிறப்பாகச் செயல்பட வேண்டும். அ.தி.மு.க பிளவுபடக் கூடாது என்பதுதான் எனது நோக்கம். நான் கட்சிக்குள் கிடையாது. அதேநேரம், உள்ளுக்குள் இருக்கின்ற மோதல்களை சரிசெய்து கொண்டு வர வேண்டும்” என்கிறார் ஷ்யாம்.

தொண்டர்களுக்கு சசிகலா கடிதம் எழுதிய அதேநேரத்தில் பினாமி சொத்துகளின்கீழ் அவருக்குச் சொந்தமான 100 கோடி மதிப்புள்ள பையனூர் பங்களா முடக்கப்பட்டிருக்கிறது. 2019 ஆம் ஆண்டிலும் அவருக்குச் சொந்தமான 1,600 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளும் முடக்கப்பட்டன. இருப்பினும், அரசியல் களத்துக்கு அவர் தயாராகி வருவதும் `தவறான வியூகங்களால்தான் தேர்தலில் தோற்றோம்’ என ஓ.பி.எஸ் பேசியதும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

(நன்றி BBC TAMIL)