மேனகா காந்தி தொடர்ந்த சாதாரண வழக்கு, இந்தியாவில் ஒரு முக்கிய வழக்கானது எப்படி?

ஒரு சாதாரண பாஸ்போர்ட் பறிமுதல் வழக்கு, அரசியல் சாஸன வழக்காக உருவெடுத்து, அடிப்படை உரிமைகளை வரையறுத்தது எப்படி தெரியுமா? Maneka Gandhi VS Union of India என்ற இந்த சுவாரஸ்யமான வழக்கின் பின்னணி என்ன?

வழக்கின் பின்னணி:

1975ஆம் ஆண்டில் இந்தியாவில் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டிருந்த நேரம். நாடு முழுவதும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அந்தத் தருணத்தில் ஆட்சியில் இருந்த இந்திரா காந்தி தலைமையிலான அரசு, மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதிக்கும் வகையிலான பல்வேறு அரசியல் சாஸனத் திருத்தங்களை நிறைவேற்றியது. நீதிமன்றம் மீதும் மக்கள் தங்கள் நம்பிக்கைகளை இழந்திருந்த தருணம்.

இந்த நிலையில்தான், மேனகா காந்தி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு, நீதிமன்றத்தின் மீது மக்களுக்கு மீண்டும் நம்பிக்கையை உருவாக்கும் வகையில் அமைந்தது.

வழக்கின் விவரம்:

இந்திரா காந்தியின் மருமகளான மேனகா காந்திக்கு 1976ல் பாஸ்போர்ட் வழங்கப்பட்டிருந்தது. அவர் சூர்யா என்ற பத்திரிகையையும் நடத்திவந்தார். 1977ல் இந்திரா காந்தி தோல்வியடைந்து, புதிதாக ஜனதா அரசு பதவியேற்றிருந்தது. இந்த நிலையில், சூர்யா இதழில் காங்கிரஸ் தலைவர்களைத் தூக்கிப்பிடித்தும் ஜனதா கட்சித் தலைவர்களை விமர்சித்தும் கட்டுரைகள் வெளியாக ஆரம்பித்தன.

இந்திரா காந்திஇந்தத் தருணத்தில் மேனகா காந்தி வெளிநாட்டில் பேசுவதற்காக ஒப்புக்கொண்டிருந்தார். அதற்காக அவர் தயாராகிவந்த நிலையில், மத்திய அரசிடமிருந்து கடிதம் ஒன்று அவருக்கு வந்தது. அதில், பாஸ்போர்ட் சட்டத்தின் பிரிவு 10 (3) (C)கீழ் பொது நலனை மனதில் வைத்து 1977 ஜூலை 2ஆம் தேதி அவரது பாஸ்போர்ட் முடக்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

தனது பாஸ்போர்ட்டை முடக்குவதில் ஒரு பொதுநலனும் இல்லை; ஆகவே, பாஸ்போர்ட்டைத் திருப்பிக் கொடுக்க வேண்டுமென அவர் விடுத்த வேண்டுகோளை அரசு நிராகரித்தது. இதனை அடுத்து, தனது பாஸ்போர்ட் முடக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார் மேனகா காந்தி.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 14, 19, 21 ஆகியவற்றை இந்த நடவடிக்கை மீறுவதாக தனது மனுவில் அவர் கூறினார். பாஸ்போர்ட் சட்டத்தின் பிரிவு 10(3)(c) அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணாக இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார். மத்திய அரசு எழுத்து மூலமாக சமர்ப்பித்த மனுவில், இந்தியாவில் நடைபெற்றுவரும் விசாரணை கமிஷனில் அவர் ஆஜராக வேண்டியிருப்பதால் அவரது பாஸ்போர்ட் முடக்கப்பட்டிருப்பதாகக் கூறியது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் யார்?

இந்த வழக்கை தலைமை நீதிபதி எம்.எச். பெக் தலைமையிலான அமர்வு விசாரித்தது. இந்த அமர்வில் ஒய்.வி. சந்திரசூட், வி.ஆர். கிருஷ்ணய்யர், பி.என். பகவதி, என்.எல். அன்ட்வாலியா, எஸ். முர்தஸா ஃபஸல் அலி, பி.எஸ். கைலாசம் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இந்திய பாஸ்போர்ட் (கோப்புப்படம்)இந்த வழக்கைப் பொறுத்தவரை, மேனகா காந்தியின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டது சரியா, பாஸ்போர்ட் சட்டம் அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணாக இருக்கிறதா என்பதை உச்ச நீதிமன்றம் விசாரித்துத் தீர்ப்பளிக்க வேண்டும். ஆனால், வேறு சில விஷயங்களையும் முடிவுசெய்ய இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் பயன்படுத்திக் கொண்டது.

  1. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 19, 21, 14 ஆகியவை தனித்தனிப் பிரிவுகளா அல்லது ஒன்றோடு ஒன்று இணைந்தவையா?

 

  1. அரசமைப்புச் சட்டத்தின் 21வது பிரிவில் குறிப்பிடப்பட்டிருக்கும் “சட்டத்தால் அமைக்கப்பெற்ற நடைமுறைகள்” என்பதன் வரையறை என்ன?

 

  1. வெளிநாட்டிற்குப் பயணம் செய்யும் உரிமை அரசமைப்புச் சட்டத்தின் 21வது பிரிவில் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறதா?

 

  1. வாழ்தல் உரிமையைப் பறிக்கும் ஒரு சட்டம், நியாயமானது என்று சொல்ல முடியுமா (reasonable)?

 

மேனகா காந்தி தரப்பின் வாதங்கள் என்ன?

மேனகா காந்தி தரப்பில் பின்வரும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அதாவது, தனது பாஸ்போர்ட்டை முடக்கியதன் மூலம் மனுதாரரின் கருத்துரிமை, பேச்சுரிமை, வாழ்வதற்கான உரிமை, தனிமனித சுதந்திரம், வெளிநாட்டிற்குச் செல்லும் உரிமை, விரும்பிய இடத்திற்குச் செல்லும் உரிமை ஆகியவை பறிக்கப்பட்டிருக்கின்றன.

மேலும், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 19, 21, 14 ஆகியவை ஒன்றோடு ஒன்று இணைந்தவை. அவற்றைத் தனித்தனியாக படித்துப் பொருள்கொள்ளக்கூடாது. அப்போதுதான் அரசியலமைப்புச் சட்டத்தின் சாரத்தைப் புரிந்துகொள்ள முடியும்.

வாழ்வதற்கான உரிமை, தனி மனித சுதந்திரம் ஆகியவற்றை அளிக்கும் அரசமைப்புச் சட்டத்தின் 21ஐ மீறுவதாக பாஸ்போர்ட் சட்டத்தின் பிரிவு 10(3)(c) அமைந்திருக்கிறது.

Maneka Gandhi VS Union of Indiaஇதுதவிர, குற்றம்சாட்டப்படுவர் தரப்பையும் கேட்க வேண்டும் என்பதுதான் இயற்கை நீதியின் அடிப்படையான அம்சம். அரசமைப்புச் சட்டத்தில் இயற்கை நீதி என்பது குறிப்பிடப்படாவிட்டாலும் அடிப்படை உரிமைகள் என்பது, இந்தத் தத்துவங்களின் அடிப்படையில் அமைந்ததுதான் என்று மேனகா காந்தி தரப்பில் வாதிடப்பட்டது.

அரசுத் தரப்பைப் பொறுத்தவரை, மேனகா காந்தி ஒரு விசாரணைக் குழு முன்பாக ஆஜராக வேண்டியிருப்பதால் அவரது பாஸ்போர்ட் முடக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தது.

அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 21ல் குறிப்பிடப்பட்டிருக்கும் “சட்டத்தால் அமைக்கப்பெற்ற நடைமுறைகள்” பிரிவு 14 மற்றும் 19 உடன் ஒத்திசைந்து செல்ல வேண்டியதில்லை.

அமெரிக்க அரசியல் சாஸனத்தில் இடம்பெற்றுள்ள “due process of law” என்ற வார்த்தைகளையும் “procedure established by law” என்ற வார்த்தைகளையும் நீண்ட நேரம் ஆய்வுசெய்தே, அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது. “procedure established by law” என்ற வார்த்தைகள் தேர்வுசெய்யப்பட்டு இடம்பெற்றிருப்பதை வைத்தே, அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களின் நோக்கத்தை எளிதில் புரிந்துகொள்ள முடியும் என அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் 1978 ஜனவரி 25ஆம் தேதி தீர்ப்பு வழங்கினர். பெரும்பான்மைத் தீர்ப்பை நீதிபதிகல் அந்த்வாலியா, ஃபஸல் அலி ஆகியோரின் சார்பில் நீதிபதி பி.என். பகவதி எழுதினார். அதனை ஏற்கும்விதத்தில் நீதிபதிகல் பெக், சந்திரசூட், வி.வி. கிருஷ்ணய்யர் ஆகியோர் தனித்தனித் தீர்ப்பை எழுதினர். பெரும்பான்மைத் தீர்ப்பை ஏற்காத நீதிபதி கைலாசம், அதில் முரண்டபட்ட தீர்ப்பை முன்வைத்தார்.

மேனகா காந்தி வழக்கு என்பது, தன்னிடமிருந்து பாஸ்போர்ட் கைப்பற்றப்பட்டது தவறு, அது தனது அடிப்படை உரிமைக்கு எதிரானது என்பது. இந்த வழக்கில் வாதிடும்போது, மேனகா காந்தி தரப்பையும் கேட்பதற்கு வாய்ப்பளிக்கப்படுமென அட்டர்னி ஜெனரல் குறிப்பிட்டார். மேனகா காந்தியின் தரப்பைக் கேட்ட பிறகும், அவரது பாஸ்போர்ட் முடக்கப்பட முடிவெடுக்கப்பட்டால், அது ஆறு மாதத்திற்கு மேல் முடக்கப்பட மாட்டாது என்று அரசு உறுதியளித்தது.

இருந்தபோதும், இந்த வழக்கை வைத்து வேறு பல விஷயங்கள் குறித்து நீதிமன்றம் தீர்ப்பெழுத முடிவுசெய்தது. இந்தியாவின் அரசமைப்பில் மிக முக்கியமான தீர்ப்பாக இது அமைந்தாலும், இந்த வழக்கிற்கு சற்று சம்பந்தமில்லாத விஷயங்களும் இதில் விவாதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டன. கிட்டத்தட்ட 70 ஆயிரம் வார்த்தைகள் கொண்ட மிக நீண்ட தீர்ப்பாக இது அமைந்தது. அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 14, 19, 21 ஆகியவை பக்கம் பக்கமாக விவாதிக்கப்பட்டன.

தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்:

இந்திய உச்ச நீதிமன்றஅரசியலமைப்புச் சட்டத்தின் 14வது பிரிவை பாஸ்போர்ட் சட்டம் மீறுகிறது என்பதை நீதிபதிகள் ஏற்கவில்லை. “பொதுநலனுக்காக” என்று குறிப்பிடுவது மனம்போன போக்கில் செய்யப்படுவதில்லை; அதற்கென விதிகள் இருக்கின்றன எனக் குறிப்பிட்டது நீதிமன்றம்.

ஒருவருடைய பேச்சுச் சுதந்திரத்தையும் கருத்துச் சுதந்திரத்தையும் உறுதிசெய்ய வேண்டுமானால், அவர் வெளிநாட்டிற்கு பயணம் செய்யும் உரிமையையும் உறுதிசெய்ய வேண்டுமா என்ற கேள்விக்குப் பதிலளித்த நீதிமன்றம், அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்துவதின் அர்த்தம், அதற்கு தேவைப்படும் செயல்களையும் அடிப்படை உரிமைகள் என்று சொல்ல முடியாது என்று கூறியது.

ஆகவே, வெளிநாட்டிற்குச் செல்லும் உரிமை என்பது எல்லாத் தருணங்களிலும் கருத்துச் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரத்திற்குள் வராது என நீதிமன்றம் தெரிவித்தது. ஆகவே, பாஸ்போர்ட் சட்டத்தின் பிரிவு 10(3)(c)ன் கீழ் பாஸ்போர்ட்டை முடக்கியது என்பது அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 19(1) (a)வுக்கோ (g)க்கோ முரணானது அல்ல எனத் தீர்ப்பளித்தது.

மேலும், இந்தத் தீர்ப்பில் ஒரு முக்கியமான முந்தைய தீர்ப்பு ஒன்று மாற்றியமைக்கப்பட்டது. ஏ.கே. கோபாலன் வழக்கில் அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 19, 21 ஆகியவற்றை தனித்தனியாக பார்க்க வேண்டும் எனத் தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது. அதன் காரணமாகவே, கோபாலன் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டது சரி எனக் கூறப்பட்டது. ஆனால், இந்தத் தீர்ப்பில் அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 14, 19 & 21 ஆகியவற்றை ஒன்றாக இணைத்தே பார்க்க வேண்டுமெனத் தீர்ப்பளிக்கப்பட்டது.

மேனகா காந்தி வழக்கில் இவ்வளவு பெரிய தீர்ப்பை உச்ச நீதிமன்றம் அளிப்பதற்குக் காரணம், நெருக்கடி நிலை காலகட்டத்தில் நீதிமன்றம் செயல்பட்ட முறை பெரிதும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருந்தது. குறிப்பாக ADM Jabalpur v. Shivkant Shukla வழக்கில் ஒருவர் சட்டவிரோதமாக தடுத்துவைக்கப்படக்கூடாது என்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு பெரிதும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருந்தது.

இந்தப் பின்னணியில்தான், உச்ச நீதிமன்றம் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் கண்காணிப்பு அமைப்பாக உருவெடுக்க மேனகா காந்தி வழக்கை பயன்படுத்திக்கொண்டது உச்ச நீதிமன்றம்.

மேலும், எந்த ஒரு சட்டமும் தனிமனித சுதந்திரத்தைப் பாதுகாக்கும் வகையில் அமைந்தால், அந்த சட்டம் அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 21, 14, 19க்கு முரணாக இல்லாமல் இருக்க வேண்டும் என்பது உறுதிப்படுத்தப்பட்டது. இந்திய சட்டமன்றங்களோ, நாடாளுமன்றமோ தனிமனித உரிமையைப் பாதிக்கும்படி தன் விருப்பத்திற்கு சட்டம் இயற்றுவதை இந்தத் தீர்ப்பு தடுத்தது. மனித உரிமைகளைப் பாதுகாப்பதில், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 21 மிக முக்கியமான பிரிவாக இப்போதும் விளங்குவதற்கு இந்தத் தீர்ப்பு அடிகோலியது.

அந்த வகையில் Maneka Gandhi VS Union of India வழக்கு இந்தியாவின் சட்ட வரலாற்றில் மிக மிக முக்கியமானது.

(நன்றி BBC TAMIL)