லக்கிம்புர் கேரியில், பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த மத்திய உள்துறை இணை அமைச்சரின் காரால் விவசாயிகள் நசுக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் விவசாயிகள் இயக்கத்திற்கும் அது சார்ந்த அரசியலுக்கும் புத்துயிர் ஊட்டியுள்ளது.
ஏற்கனவே டெல்லி மற்றும் உத்தர பிரதேசத்தின் எல்லையில் உள்ள மேற்கு உ.பி விவசாயிகள் கடந்த 10 மாதங்களாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆட்சியில் அமர்ந்திருக்கும் தலைவர்களுக்கு வாக்குகள் மட்டுமே முக்கியம் என்று கூறும் அவர்கள், இந்தத் தேர்தலில், ஆளும் கட்சியான பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று மக்களிடம் கோரப்போவதாகவும் கூறுகிறார்கள்.
மறுபுறம், ஆளும் கட்சியும் கொதித்துப் போயிருக்கும் பொதுமக்களின் எந்தப் பிரிவினரையும் கோபப்பட வைக்க விரும்பவில்லை. தேர்தலுக்கு முன்பே, ஆளும் கட்சி, விவசாயிகளைத் திருப்திப்படுத்தும் நோக்கில், கரும்பின் ஆதரவு விலையை அதிகரித்தது மட்டுமல்லாமல், கோபமடைந்துள்ள பிராமணர்களையும் பிற சாதியினரையும் கவர்ந்திழுக்க தனது சமூகப் பொறியியல் உத்தியைக் கையாள்வதாகவும் கூறப்படுகிறது.
மாநிலத்தின் சமீபத்திய அமைச்சரவை விரிவாக்கத்தை இந்தக் கண்ணோட்டத்தில் தான் நிபுணர்கள் பார்க்கிறார்கள். மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தின் போது கூட, உத்தர பிரதேசம் சிறப்புக் கவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல்-முஸ்லிமீன் (AIMIM) இந்த முறை உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளது. டெல்லியில் ஆட்சியில் இருக்கும் ஆம் ஆத்மி கட்சியும் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும். காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் புதிய அணுகுமுறை மற்றும் மனநிலையுடன் பொதுமக்களைத் தங்களுக்குச் சாதகமாக ஈர்க்கும் முயற்சியை ஏற்கனவே தொடங்கிவிட்டன.
பிரியங்கா காந்தி கோயில் தரிசனம் என்ற காட்சிகளுடன் களமிறங்கியுள்ள நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி ஒரு பிராமண மாநாட்டை ஏற்பாடு செய்கிறது. அதே நேரத்தில், அகிலேஷ் யாதவும் யாருக்கும் சற்றும் குறைவில்லை. அவர் ஒரு சைக்கிள் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு கட்சிக்காகப் பிரசாரம் செய்யத் தொடங்கினார். இதன் காரணமாக, உத்தர பிரதேசத்தில் இனி இரண்டு கட்சிகளுக்கிடையிலான நேரடிப் போட்டி என்ற நிலை இல்லை.
ஆனால் இவை அனைத்திற்கும் நடுவில் இந்த முறை தேர்தலில் தாக்கம் ஏற்படுத்தக்கூடிய என்னென்ன பிரச்னைகள் உள்ளன என்பதைப் பார்ப்போம்.
விவசாயிகள் போராட்டம்
மத்திய அரசின் மூன்று விவசாயச் சட்டங்களுக்கு எதிராக பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியின் எல்லையில் பல மாதங்களாகப் போராட்டத்தில் அமர்ந்துள்ளனர். உத்தர பிரதேச – டெல்லி எல்லையில் இதனால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த விவசாயிகள் பெரும்பாலும் மேற்கு உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த, கரும்பு சாகுபடி செய்பவர்கள்.
இந்தத் தேர்தலில் விவசாயிகளின் மனக்கசப்பு கட்சியை பாதிக்கக்கூடும் என்று பாஜகவின் பல தலைவர்கள் நம்புகின்றனர். சமீபத்தில், மத்திய அரசும் விவசாயிகளின் மனக் கசப்பை நீக்க பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
டை அம்மோனியம் பாஸ்பேட் (டிஏபி) உரங்களுக்கான மானியத்தை மத்திய அரசு அதிகரித்தது. கரிஃப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில், மாநில அரசும் கரும்பு விலையை குவிண்டாலுக்கு ரூ .25 உயர்த்தியது.
இந்த நடவடிக்கைகளின் மூலம், விவசாயிகள் மீதான வெறுப்பு ஓரளவு குறையும் என்று பாஜக நம்புகிறது. ஆனால் கரும்பு விவசாயிகளுக்கு இந்த விலை உயர்வு திருப்தியளிப்பதாக இல்லை என்று அதே கட்சியைச் சேர்ந்த எம்.பி. வருண் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
புதிய விவசாயச் சட்டங்கள் குறித்து விவசாயிகளின் மனதில் உள்ள குழப்பத்தை அகற்றுவதற்காக, பிரதமரும் விவசாயிகளுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் பேசினார். கிசான் சம்மான் நிதி மூலம் விவசாயிகளைக் கவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் விவசாயிகளின் கோபம் இன்னும் குறையவில்லை.
அவர்களின் கோபத்தின் தாக்கம் உத்தர பிரதேச பஞ்சாயத்து தேர்தலிலும் காணப்பட்டது. செப்டம்பர் மாதத்தில், விவசாயிகளால் அழைக்கப்பட்டிருந்த முழு அடைப்பு, வட இந்தியாவில், குறிப்பாக மேற்கு உத்தர பிரதேசத்தில் ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியது.
தேர்தலுக்குள் பாஜக விவசாயிகளைத் தம் பக்கம் ஈர்க்க முடியுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
விவசாயிகளின் இந்தப் போராட்டத்திற்கு மாநிலத்தின் எதிர்க்கட்சிகளின் ஆதரவும் கிடைத்துள்ளது. ஆனால் மற்ற அரசியல் கட்சிகள் இந்த பிரச்னையைத் தங்களுக்கு ஒரு ‘வாய்ப்பாக’ மாற்றிக்கொள்ள முடியுமா என்பது பார்க்க வேண்டிய விஷயமாகவும் இருக்கும்.
வளரும் சமுதாயங்கள் ஆய்வு மையத்தின் (CSDS) தரவுகளின்படி, மேற்கு உத்தர பிரதேசத்தில் 44 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. 2017 சட்டமன்றத் தேர்தலில், உத்தர பிரதேசத்தில் பாஜக 41 சதவீத வாக்குகளைப் பெற்றது. ஆனால் மேற்கு உத்தர பிரதேசத்தில், பாஜக சராசரியை விட 43-44 சதவிகித அதிக வாக்குகளைப் பெற்றது.
2019 மக்களவைத் தேர்தலில், உத்தர பிரதேசத்தில் பாஜக 50% க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றது. மேற்கு உத்தர பிரதேசத்தில், பாஜக 52 சதவீத வாக்குகளைப் பெற்றது.
2014 மக்களவைத் தேர்தலிலும் இதே நிலைதான். மாநிலம் முழுவதும், பாஜக 42 சதவிகித வாக்குகளைப் பெற்றது, மேற்கு உத்தர பிரதேசத்தில் அது 50 சதவிகிதமாக இருந்தது.
உத்தர பிரதேசத்தின் மற்ற பகுதிகளை விட மேற்கு உத்தர பிரதேசத்தில் பாஜக அதிக வாக்குகள் பெற்று வருகிறது என்பது தெளிவாகிறது. இதன் காரணமாக, எதிர்க்கட்சிகள் நிச்சயமாக விவசாயிகளின் பிரச்னையை தங்கள் நலனுக்காகப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கும்.
ராமர் கோயில் விவகாரம்
பல தசாப்தங்களாக, உத்தர பிரதேசத்தின் ஒவ்வொரு சட்டமன்றத் தேர்தலிலும் ராமர் கோயில் பிரச்னை எழுப்பப்பட்டது. பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இதுவும் ஒரு முக்கிய பகுதியாகும். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு, கோயில் கட்டுமானப் பணிகள் தொடங்கின. ஆனால், சட்டசபை தேர்தலுக்கு முன் கோயில் கட்டுமானப் பணிகள் முடிவடையாது. அடுத்த மக்களவைத் தேர்தலுக்குள் இது நிறைவடையும் என்று தெரிகிறது.
ஆனால் இந்தப் பிரச்னை இனி கோயில் கட்டுவதுடன் முடிந்து விட்டது என்றும் கருத முடியாது. இந்தத் தேர்தலில் கோயிலைக் கட்டியதற்கான பெயரை பாஜக நிச்சயமாகப் பெற விரும்புகிறது. மறுபுறம், எதிர்க்கட்சிகள் பாஜகவுக்கு பதிலாக உச்ச நீதிமன்றமே இதற்கு காரணம் என்று மக்களிடம் கூற விரும்புகின்றன.
மாநிலத்தின் பெரும்பான்மையான மக்கள் இந்துக்கள். இந்த விவகாரத்தை இந்துக்கள் வாக்குககளைப் பெற பாஜக பயன்படுத்தலாம். தேர்தல் கூட்டங்களில் இதைக் குறிப்பிடுவது இயல்பு. ஆனால் காசி-மதுரா குறித்தும் பேசப்படுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
இந்து– முஸ்லிம் விவகாரம்
ராமர் கோயில் பிரச்னை எழுப்பப்பட்டால், அயோத்தியின் மசூதி, முஸ்லிம்கள், அவர்களின் உரிமைகள் மற்றும் அவர்களுக்காக நடத்தப்படும் திட்டங்கள் பற்றியும் பேச்சு எழும்.
சமீபத்தில், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியபோது, “முன்பு ஏழைகளுக்கு வழங்கப்பட்ட ரேஷன், சுரண்டப்பட்டது என்றும் குஷிநகரின் ரேஷன் நேபாளம், வங்கதேசத்துக்குச் செல்வது வழக்கம் என்றும் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி அரசாங்கத் திட்டங்களின் பயன்கள் முஸ்லிம்களுக்கு வழங்கப்படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.
மக்கள்தொகை கட்டுப்பாட்டுக்காக முன்மொழியப்பட்ட சட்டத்தைக் கூட இந்து-முஸ்லிம் விவகாரமாகவே பார்த்ததுடன் மக்களையும் அப்படியே பார்க்கச் செய்தன எதிர்க்கட்சிகள்.
இது தவிர, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிரான பாகுபாடு பற்றிய செய்திகளும் கடந்த பல மாதங்களாக ஊடகங்களின் தலைப்புச் செய்தியாகிவிட்டன. காசியாபாத்தில் உள்ள லோனி எல்லையில் ஜூன் 5 ம் தேதி ஒரு முஸ்லிம் முதியவர் தாக்கப்பட்டா நிகழ்வாகட்டும், ஆகஸ்ட் மாதத்தில் கான்பூரில் ஒரு முஸ்லிம் ரிக்ஷாக்காரரை போலீஸ் முன்னிலையில் அடித்த நிகழ்வாகட்டும், அவருடைய ஏழு வயது பெண் தனது தந்தையை விட்டு விடுமாறு கெஞ்சுவதாகட்டும் இவை அனைத்தும் அதிக அளவில் பரவிய வீடியோக்களாகும். கட்டாய மதமாற்றத்தின் பல வழக்குகளும் அண்மைக் காலங்களில் தலைப்புச் செய்திகளாக உள்ளன.
தேர்தல் நெருங்குகையில், இந்து-முஸ்லிம் விவகாரம் அரசியல்வாதிகளால் அதிகம் பேசப்படுகிறது.
வேலையில்லாத் திண்டாட்டம்
கடந்த சில ஆண்டுகளாக, எதிர்க்கட்சிகள் பிரதமர் மோதியின் பிறந்த நாளை வேலையின்மை தினமாகக் கொண்டாடி வருகின்றன. இந்த ஆண்டும் செப்டம்பர் 17 அன்று அதற்காக நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. பிரயாக்ராஜ், லக்னோ, வாரணாசி, புலந்த்ஷஹர் உள்ளிட்ட பல நகரங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களைக் கலைக்கக் காவல்துறையினர் படையைப் பயன்படுத்தினர்.
இளைஞர் மன்றத்தின் பதாகையின் கீழ், உத்தர பிரதேச அரசின் இளைஞர் எதிர்ப்பு கொள்கைகள், ஐந்தாண்டு ஒப்பந்தங்கள் மற்றும் வேலை வாய்ப்பின்மை ஆகிய விவகாரங்களை எதிர்த்துப் பல இடங்களில் ரிக்ஷா ஓட்டும் போராட்டங்கள் நடைபெற்றன.
இவை அனைத்திற்கும் நடுவில், உத்தர பிரதேசத்தில் மட்டுமல்ல, டெல்லி தெருக்களிலும் ஓர் உண்மையைக் காணலாம். பெரியபதாகைகளில் உள்ள யோகி ஆதித்யநாத்தின் புகைப்படத்துடன், அவர் தனது பதவிக் காலத்தில் நான்கு லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு வேலைகளை உருவாக்கியுள்ளதாக விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன.
கொரொனா பெருந்தொற்று
கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில், கங்கைக் கரையில் சடலங்கள் எரியும் படங்கள் தேசிய ஊடகங்களில் மட்டுமல்லாமல், சர்வதேச ஊடகங்களிலும் விவாதப் பொருளானது. எனினும், மாநில அரசு இதைப் பாரம்பரியம் என்று கூறி வாதிட்டது. ஆனால், கொரொனா இரண்டாவது அலையை நிர்வகிப்பதில் அரசின் தோல்வி, தங்கள் உறவினர்களை இழந்தவர்களுக்கு என்றும் மாறாத வலியாக இருக்கும்.
ஆங்காங்கே ஆக்ஸிஜன் பற்றாக்குறை, ஆங்காங்கே, மருந்துகளுக்கு தன்னிச்சையாக பணம் வசூலித்த சம்பவம், அனைத்து மருத்துவமனைகளிலும் படுக்கைகள் அல்லது மருத்துவர்கள் இல்லை, இப்படிப் பல சீர்கேடுகள் இருந்தும், பிரதமர் மோதி கொரோனா நிர்வாகத்தின் இந்த மாநில அரசின் செயல்பாட்டைப் பெரிதும் பாராட்டினார்.
கொரோனாவின் இரண்டாவது அலை கோரத் தாண்டவம் ஆடிய போது நடத்தப்பட்ட பஞ்சாயத்து தேர்தல், பணியமர்த்தப்பட்ட பல ஆசிரியர்களின் மரணம், அவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான கோரிக்கை மற்றும் அவற்றின் எண்ணிக்கை குறித்த இந்த விவகாரம் நீதிமன்றத்தைச் சென்றடைந்தது.
அவர்களின் குடும்பத்தினர், இவற்றை எல்லாம் மறந்து, தேர்தலில் மீண்டும் அதே கட்சிக்கு வாக்களிப்பார்களா? அல்லது கொரோனா தொற்றுநோயின் பயங்கரமான காட்சிகளைக் காட்டி எதிர்க்கட்சிகள் அவர்களை மீண்டும் பயமுறுத்துவார்களா? இதுவும் இந்தத் தேர்தலில் பார்க்கப்பட வேண்டிய ஒன்றாக இருக்கும்.
இரண்டாவது அலையின் போது, கொரோனா அச்சுறுத்தல் கிராமத்தை நோக்கி நகர்ந்தபோது, யோகி அரசாங்கம் கிராமத்தில் கண்காணிப்பு குழுக்களை அமைத்தது. அறிகுறிகள் தென்படும் மக்களுக்கு வீடு வீடாகச் சென்று கொரோனா கிட்கள் விநியோகிக்கப்பட்டன. உலக சுகாதார அமைப்பு (WHO) சமீபத்திய அறிக்கையில் இந்த கண்காணிப்புக் குழுக்களின் செயல்திறனைக் குறிப்பிட்டுள்ளது.
சுமார் 22 கோடி மக்கள்தொகை கொண்ட இந்த மாநிலத்தில், அரசாங்க புள்ளிவிவரங்களின்படி, 17 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு இறப்பு விகிதம் 1.34 சதவிகிதம், இது மகாராஷ்டிரா மற்றும் டெல்லி போன்ற மாநிலங்களை விட குறைவாக உள்ளது. (செப்டம்பர் 30 வரை புள்ளிவிவரங்கள்)
குற்றங்களின் நிலை
செப்டம்பரில் அலிகரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத், “முந்தைய உத்தர பிரதேசம் குற்றச் செயல்களுக்குப் பெயர் பெற்றிந்தது என்றும் பெண்களுக்கும் கால்நடைகளுக்கும் கூடப் பாதுகாப்பில்லாமல் இருந்தது என்றும் இன்று நிலைமை மாறிவிட்டது என்றும் தமது அரசைத் தாமே பாராட்டிக்கொண்டார்.
அதே நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி உத்தர பிரதேசத்தில் யோகி அரசு ஆட்சிக்கு வந்த பிறகு குற்றங்கள் வெகுவாக குறைந்துவிட்டதாகக் கூறியிருந்தார்.
ஆனால் அவரது அறிக்கைக்குப் பிறகு, மாநிலத்தின் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், “பிரதமர் அவ்வாறு கூறியிருந்தால், அவர் டயல் 100-இன் தரவைக் கேட்டுப் பெற வேண்டும். உத்தரபிரதேசத்தில் யார் குற்றத்தை அதிகரிக்கிறார்கள் என்பதை அவர் பார்க்க வேண்டும். உத்தர பிரதேசத்தின் முதல் பத்து மாஃபியாக்கள் யார் என்று வெளியிட முதல்வருக்கு உத்தரவு போட வேண்டும்” என்ற் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், “உத்தர பிரதேச முதல்வர் தனது வழக்குகளைத் தானே திரும்பப் பெற்றுக்கொண்டார் என்பது அனைவருக்கும் தெரியும். திருட்டு, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள், கொலைகள் அதிகமாக நடப்பது எந்த இடத்தில் என்ற என்சிஆர்பி தரவு என்ன சொல்கிறது? மனித உரிமைகள் ஆணையத்திலிருந்து அதிகபட்ச எண்ணிக்கையிலான நோட்டிஸ்களைப் பெற்றவர் யார்? பொய் சொல்வதற்கான சிறந்த பயிற்சி மையம் பாரதிய ஜனதாவால் நடத்தப்படுகிறது என்று நான் முன்பே கூறியிருந்தேன்.” என்றார்.
இருப்பினும், புள்ளிவிவரங்களின்படி, தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) உத்தரபிரதேசத்தில் குற்றங்களின் அதிகரிப்பு விகிதம் கடந்த நான்கு ஆண்டுகளில் குறைந்துள்ளதாகக் கூறுகிறது.
ஆனால் ஹத்ராஸ் கற்பழிப்பு வழக்கு, விகாஸ் துபே விவகாரம், கான்பூர் தொழிலதிபரின் போலீஸ் சோதனையில் மரணம் போன்ற வழக்குகளுக்குப் பிறகு, எதிர்க்கட்சிகள் நிச்சயமாக மாநிலத்தில் நடக்கும் குற்றத்தை ஆளும் கட்சிக்கு எதிரான பிரச்சினையாக மாற்ற முயற்சிக்கும்.
இலவச மின்சாரம்
உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி முதல் முறையாகக் களத்தில் இறங்குகிறது. டெல்லியில் கையாண்ட அதே உத்திகள் – இலவச மின்சாரம் மற்றும் தண்ணீரை வழங்கி இரண்டு தொடர்ச்சியான வெற்றிகளுக்கு அவருக்கு உதவிய உத்திகளை உத்தர பிரதேசத்திலும் கையாள முடிவு செய்துள்ளார். அக்டோபர் மாதத்திலிருந்து, இதற்காக அவர் வீடு வீடாகத் தேர்தல் பிரசாரத்தையும் தொடங்கவிருக்கிறார்.
ஒரு கிலோவாட் மீட்டர் இணைப்பு வைத்திருக்கும் வீட்டு மின் இணைப்புக்கு 90 ரூபாய் நிலையான கட்டணமாகவும் 100 யூனிட்கள் வரை ஒரு யூனிட் ரூ .3.35 என்ற விகிதத்திலும் 100 முதல் 150 யூனிட்களுக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ 3.85 ஆகவும் 151 முதல் 300 யூனிட் மின் நுகர்வுக்கு யூனிட்டுக்கு ரூ .5 என்ற அளவிலும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இவை அனைத்தையும் தவிர, சில நாட்களுக்கு முன்பு, ஆப்கானிஸ்தானில் தாலிபன்களின் ஆட்சியை சமாஜ்வாதி கட்சி ஆட்சியுடன் ஒப்பிட்டு இருந்தனர் பாஜகவினர்.
இத்தகைய சூழ்நிலையில், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், சாதி வாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, இடஒதுக்கீடு, வளர்ச்சி போன்ற சில பிரச்னைகள் இந்தத் தேர்தலிலும் எழலாம். இம்முறை எந்தெந்த பிரச்னைகளை முன் வைத்து மக்கள் வாக்களிக்கிறார்கள் என்று பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
(நன்றி BBC TAMIL)